சனி, 28 ஆகஸ்ட், 2021

அவள் அன்பு தேவதையே



வீதியை நோக்கி பார்த்தபடி முன் வாசல் படிக்கட்டில் இருந்து குருவிகள் ரீங்காரமிடுவதையும் வீதியால் வாகனங்கள் செல்வதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரகு. வீதியில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. கொரோனா தொற்று நோய் வீரியம் காரணமாக நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. இது தான் வாகனங்கள் குறைவாக காணப்படுகின்றமைக்கு காரணம். ஆயினும் வழக்கமாக காணக்கிடைக்காத சில குருவியினங்களுடன் பறவைகளின் தொகை அதிகமாகத்தான் காணப்பட்டது. வீதியில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தமையும் வாகன இரைச்சல் குறைவாக இருந்தமையும் பறவைகள் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருந்தது. தனது விரல்களை பின்னியும் குடைந்தும் ரசித்துக்கொண்டிருந்தவன் தனது சின்ன விரலை மெதுவாக வரடியவனாக ஆழ்ந்த சிந்தனைக்குள் தன்னை அறியாமலேயே மெதுவாக நுளைந்துகொண்டிருந்தான்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

அரங்க கலையின் ஓர் மைல்கல் ‘மாத்தளையின் ஜீவநதி’

 



அரங்க கலையின் ஓர் மைல்கல் ‘மாத்தளையின் ஜீவநதி’

இலங்கையின் அரங்க கலையின் முன்னோடிகள் பலரைப்பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி நாடகத்துறை போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதேவேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப்பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம் சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.