அண்மையில் கனடாவில் இடம் பெற்ற கனடா சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றிய இந்தப்பதிவு "கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின்" தலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்களால் என்னுடன் பகிந்துகொள்ளப்பட்டது. அன்பு கனிந்த வாசகர்கள் நிகழ்வு பற்றி அறிந்துகொள்ளும்பொருட்டு என்னால் வைகறைத்தென்றல் பக்கத்தில் பகிரப்படுகிறது. பதிவை பகிர்ந்துகொண்ட குரு அரவிந்தன் அவர்களுக்கு எனது நன்றிகள்
கனடாவில் சர்வதேச
சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.
‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் அதனைப் பாராட்ட வேண்டும்’ இவ்வாறு சென்ற ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி 2022 கனடாவில் இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.