வியாழன், 13 ஜூலை, 2023

கருப்பு வைரத்திற்கு கவிதாஞ்சலி

 கருப்பு வைரத்திற்கு கவிதாஞ்சலி




கருமை மேனியுடை செவ்விழியோனே

நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட நோக்கம் உடையோனே

ஆழ்ந்த நோக்குகளால் ஆயிரம் திருப்பங்கள் தந்தோனே

வெள்ளாடை பூண்டு இதயத்தை என்றும் களங்கமின்றி

கச்சிதமாய் காத்து காலமெல்லாம் மக்களுக்கான

நேர்மைச் சேவகனாய் வாழ்ந்து கழித்தோனே

மாணவச் செல்வங்கள் கல்வியில் உச்சம் தொட

இலவசமாகவே போசிக்கும் திட்டத்தில் வெற்றி கண்டவனே

உலகம் துறக்கையில் வெறும் கையனாய் விண்ணேற்றம் கண்டு

மக்கள் மனதில் இன்றும் வாழ்பவனே அஞ்சலிகள் உனக்கு 


வியாழன், 9 மார்ச், 2023

உண்மை விடுதலை காண்போம்

 



சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எழுதிய கவிவரிகள்


உண்மை விடுதலை காண்போம்


உதிரத்தால் உடல் நெய்து

மூச்சால் உயிர் ஈர்ந்து

பிறப்பெடுக்க

தன்னுயிர் பாராமல்

வழி திறந்து

சுதந்திரமாய் எங்கும்

சிறகடித்து பறக்கவிட்ட

பெண்மைக்கு 

விடுதலை கொடுத்தோம்

சுதந்திரம் கொடுத்தோம்

என்றும்

சிறகுகள் கொடுத்தோம்

என்றும் பாசாங்கு செய்து

பறக்க எத்தனிக்கையில்

கால்களில் 

இரும்புக் குண்டுகள் கொண்டு

விலங்கிட்டு

சுதந்திரத் தணிக்கை செய்து

இன்னமும் வீட்டுக்கைதிகளாய்

வைத்திருத்தல்

பெண் விடுதலையாமோ

விழித்தெழுக

உண்மை விடுதலை

காண்போம்


செவ்வாய், 24 ஜனவரி, 2023

சிவசங்கரியின் - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022

 தமிழ் நாட்டு இதழ்களில் 2022, நவம்பர் மாதம் வெளிவந்து, தெரிந்தெடுக்கப்பட்ட 69 சிறுகதைகளில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'தாயகக் கனவுடன்' என்ற சிறுகதை சிறந்த கதையாகத் தெரிவாகியுள்ளது.


சிவசங்கரியின் - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022  
சுரேஷ் ராஜகோபால்



 

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்!

நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர, மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.

இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை.