அறிமுகம்
அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம்புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும் குறிப்பிட்ட பகுதி இணையத்திற்குள் தான் முடங்கிப்போய்விடுகிறது. இதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று இன்னமும் உரமூட்டிவிட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த நண்பர் எனக்கு இந்த நூலை அளித்திருந்தார். இணையத்தோடு வாசிப்பு பழக்கம் ஒன்றிப்போய்விட்டதால் புத்தகத்தை பெறும்போது எனது நூலகத்திற்கு மற்றொரு நூல்கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் அதனை படித்து முடிக்க எவ்வளவு நாளாகும் என்ற யோசனை மற்றொருபுறம் என்னை குளப்பியது. காரணம் அது ஒரு நாவல் அதேவேளை 198 பக்கங்களையுடைய பெரிய புத்தகம். தற்போது எல்லாமே கைக்கடக்கமாக பழகிப்போய்விட்டதால் அதனுடைய பக்க எண்ணிக்கை சற்று சஞ்சலத்தை உண்டுபண்ணியது. மேலும் ஒரு விடயம் யாதெனில் அந்த நாவலை எழுதியவர் ஒரு புதிய எழுத்தாளர் அதே வேளை இந்த நாவல் அவரது முதலாவது நாவல் என்ற விடயம் மேலும் அதனை படிப்பதில் தயக்கத்தை உண்டுபண்ணியது. அந்த நூலை படித்து முடித்ததும் உடனடியாகவே இந்த கட்டுரையை எழுததொடங்கிவிட்டேன். அந்த நாவலை படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உளக்கிளர்ச்சியே என்னை இந்த ஆய்வை எழுதத் தூண்டிற்று.