திங்கள், 16 நவம்பர், 2020

சூரரைப்போற்று இலக்குகள் இல்லாது வாழும் நபர்களுக்கு ஒரு நல்ல படிப்பினை

 

திரைப்பட விமர்சனம்



பொதுவான விபரங்கள்

தயாரிப்பு                                     : 2டி என்டர்டெயின்ட்மன்ட் மற்றும் சிக்கியா என்டர்டெயின்ட்மன்ட்

பிரதான நடிகர்கள்               : சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் பரேஸ் ராவல்

இயக்குனர்                                  : சுதா கொங்காரா

இசையமைப்பாளர்            : ஜி. வி. பிரகாஷ்குமார்

வெளியீட்டு திகதி                 : 12 கார்த்திகை 2020

 

அறிமுகம்

விமர்சனங்கள் அனேகமாக பல்வேறு விதமான படைப்புக்களுக்கும் பொதுவான ஒன்று. இது ஒருவகையான மீளாய்வு முறைமையே என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக தங்களது மீளாய்வை மேற்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு ஆய்வாளர்களினதும் பார்வைக்கும் எதிர் பார்ப்புக்கும் ஏற்ப விமர்சனங்கள் வேறுபடுகின்றன. விமர்சனங்கள் எப்போதும் சாதக பாதக விளைவுகளைத் தோற்றுவிப்பதுண்டு. விமர்சனங்கள் வசைபாடுவதை அல்லது குற்றம் கண்டுபிடிப்பதை விடுத்து மாற்றங்கள் எவ்வாறு அமைந்தால் படைப்பாளரின் எதிர்கால படைப்புக்கள் மேலும் சிறப்பாக அமைய வழவகுக்கும் என்பதை சொல்லும்போது அது சிறந்த படைப்புக்களை வெளிக்கொணர்வதற்கு ஒரு ஊன்றுகோலாக அமையும்.

இந்த அடிப்படையிலேயே படைப்புக்களை விமர்சனம் செய்யும்போது எனது பார்வை எப்போதும் அமைந்திருப்பது வழக்கம். அதை மையப்படுத்தியே சூரரைப்போற்றுஎன்ற அண்மையில் வெளிவந்த சூரியாவின் திரைப்படம் சார் ஆய்வையும் மேற்கொண்டு எனது விமர்சனத்தை வழங்குகின்றேன்.

எனது பார்வையில் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புடன் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில திரைப்படங்கள் நல்ல கதையையும், சில நல்ல காட்சிகளையும், சில நல்ல கருத்துக்களையும் சில கவர்ச்சியையும் மற்றும் சில நல்ல வருமானத்தையும் மையப்படுத்தி வெளிவருகின்றன. இன்று கணிசமான அளவு திரைப்பட உருவாக்கங்கள் கலைப்படைப்பு என்பதை தாண்டி தொழில் சார்ந்து வருமானம் ஈட்டலை பிரதானமான நோக்கமாகக்கொண்டு வெளிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படம் எந்தவகையைச் சார்ந்து வெளிவந்திருக்கின்றது என்பதை இந்த விமர்சனத்தை கடைசிவரை படிக்கும்போது இயல்பாகவே நமக்கு புலப்படும்.

திரைப்படத்தின் பிரதான பங்காளிகள்

இந்த திரைப்படத்தில் பல்வேறு வகைகளில் பல்வேறுவகையானவர்கள் பங்காளர்களாக இணைந்திருக்கிறார்கள். சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு சொந்தமான 2டி என்டர்டெயின்ட்மன்ட் மற்றும் குனீட் மொங்கா அவர்களுக்கு சொந்தமான சிக்கியா என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களால் சூரரைப்போற்று திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகி யிருக்கக்கூடிய சுதா கொங்காரா என்ற பெண் இயக்குனரின் திரைக்கதை தயாரிப்பிலும் இயக்கத்திலும் இத்திரைப்படம் உருவாகி வெளிவந்துள்ளது. விஜயகுமார் அவர்கள் கதை வசனத்தில் பங்களிப்புச் செய்திருக்கிறார். பிரதான நடிகர்களாக சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஸ் ராவல், மோகன்பாபு மற்றும் கருணாஸ் போன்றவர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களாக பங்குபற்றியுள்ளார்கள். சூர்யா மற்றும் அபர்னா பாலமுரளி ஆகியோர் முறையே கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக பிரதான பாத்திரமேற்று நடித்திருக் கிறார்கள் ஊர்வசி சூர்யாவின் தாயாராகவும் பரேஸ் ராவல் பிரதான வில்லனாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கான இசையமைப்பை ஜி. வி. பிரகாஸ்குமார் மேற்கொண்டிருக்கிறார். இதுவே இவர் முதல் தடவையாக சூரியாவின் திரப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சந்தர்ப்பமாக குறிப்பிடப்படுகிறது. சினேகன், யுகபாரதி, விவேக், மாயா மகாலிங்கம், எக்கடேசி, அறிவு மற்றம் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல் வரிகளை எழுதி திரைப்படத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஜி. வி. பிரகாஸ்குமார், சூர்யா, செந்தில் கணேஸ், செந்தில் ராஜலக்சுமி, ஹரிஸ் சிவராமகிருஷ்ணன், டீ, கிறிஸ்ரின் ஜோஸ், கோவிந் வசந்தா, கிருஸ்ணராஜ் மற்றும் சாய்ந்தவி ஆகியோர் பாடல்களை பாடியிருக்கின்றனர் இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட அலசல்

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பல மில்லியன் கணக்கான திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல தடைகளையும் தாண்டி வெளிவந்த திரைப்படம்தான் இந்த சூரரைப்போற்று திரைப்பட மென்றால் அது மிகையாகாது. அண்மைக் காலங்களில் கோவிட் 19 வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக திரைத் துறையில் பல்வேறு சிரமங்கள் தோன்றியிருந்தன. இதன்காரணமாக வெளியீடுகளும் தடைப்பட்டிருந்தன. இச்சூழலானது திரைப்பட ரசிகர்களுக்கு நீண்டகாலமாக சிறந்த தீனியை எவராலும் தரக்கூடியதாக அமைய விடவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறான சூழ்நிலையிலேயே ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் கோவிட் 19 சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரவர் தங்கள் இருப்பிடத்திலிருந்தே திரைப்படத்தை கண்டுகளிக்கும் பொருட்டு அமசன் பிறைம் வீடியோ மூலமாக 12 கார்த்திகை 2020 அன்று சூரரைப்போற்று திரைப்படம் வெளியிடப்பட்டது. இவ்வாறு இப்படம் வெளியிடப்பட்டதானது சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமன்றி பொதுவாக திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் ஆனைப்பசிக்கு சோளம் பொரியாவது கிடைத்தது என்ற மனத் திருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவின் பயணிகள் விமான சேவையில் பல மாற்றங்களை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு பல சவால்களை எதிர்கொண்டு தனது இலட்சியத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்த டெக்கான் என்ற நிவனத்தின் நிறுவுனர் ஜி. ஆர். கோபிநாத் என்பவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியதாக திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பல உண்மை நிகழ்வுகளுடன் சில ஊகங்களையும் கற்பனைகளையும் கலந்து அதற்குள் திரைக் கதைக்கு பொருத்தமான சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ஊடுபுகுத்தி திரக்கதையை வடிவமைத்துத் தந்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்காரா. சாதாரணமாக வாழ்க்கை வரலாறுகள் என்பது திரைப்படங்களை வெற்றிப்படங்களாகத் தருவதில் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத்தள்ளிவிடும் அப்பேற்பட்ட நிலைமையையும் சவாலாக எடுத்துக்கொண்டு ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடிக்கக்கூடிய வகையில் மிக நுட்பமான முறையில் படத்தை நகர்த்தியிருக்கின்றார் சுதா.

நெடுமாறன் (சூர்யா) என்பவர் ஒரு பின்தங்கிய கிராமத்தை சார்ந்த அதேவேளை சற்று வித்தியாசமான சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலுடைய வான்படையில் முன்னாள் குழுத்தலைவராக (கப்டன்) பணியாற்றிய ஒரு துடிப்பான இளைஞர். இவர் கிராம மக்களும் குறைந்த செலவில் விமானத்தில் பயணம்செய்யக்கூடிய நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்ற அசைக்கமுடியாத இலக்கு ஒன்றை தன்னகத்தே உருவாக்கி அந்த இலக்கை அடையும் நோக்கோடு தனது செயற்பாடுகளை முன்னகர்த்தி செல்வதில் முழுக்கரிசனையோடு செயற்பட்டுவருகிறார். இந்த இலக்கை உருவாக்குவதற்கு மிக முக்கிமான காரணமாக இருந்தது இவரது தந்தையின் மரணத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு இவரால் வரமுடியாமல் போன சம்பவமே. விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் தந்தை சுகயீனமுற் றிருந்தமையை அறிந்து அவரை பார்ப்பதற்காக அவசரமாக புறப்படுகிறார். அவரது நண்பர்கள் அவர் விரைவாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு சென்று தந்தையை பார்க்கும்பொருட்டு விமானத்தில் செல்வதற்காக பண உதவியும் செய்து அனுப்பி வைக்கிறார்கள். அவர் விமான நிலையத்திற்கு வந்து விமானச் சீட்டை பெற காத்திருக்கும் போது அவர் எதிபார்த்து வந்த வகுப்புக்கான விமானச் சீட்டு முடிவடைந்துவிடுகிறது அடுத்த வகுப்பு சீட்டை பெறுவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது அந்த தொகை அவரிடம் இல்லாததால் அவர் அங்கிருந்த பலரிடம் உதவி கேட்கிறார் ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. இறுதியாக கார் மற்றும் லாறி மூலமாக தனது பயணத்தை தொடர்கிறார். அந்த பயணம் நீண்ட நேர பயணமாகையால் அவரால் அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்குபற்ற முடியாதுபோய்விடுகிறது. இது மாறனின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துவிட இதை மாற்றி சகல மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கக்கூடிய நிலையை தோற்றுவிப்பதை இலக்காக அமைத்து அதற்குரிய நகர்வுகளை ஆரம்பிக்கிறார். இந்த செயற்பாட்டில் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொள்கிறார் கடைசியில் தனது இலக்கை அவர் அடைந்தாரா என்ற கேள்விக்கு பதிலிறுப்பதே படத்தின் பிரதான கதையம்சமாக இருக்கிறது.

மற்றொருபக்கம் இவரை ஆண்பார்க்க வரும் பொம்மி (அபர்ணா பாலமுரளி), வழக்கமாக பெண் பார்க்க ஆண்கள் செல்வதை பெண்பார்க்க போவது என குறிப்பிடுவர் இங்கு அது மாற்றப்பட்டு பெண் ஆணை பார்க்கப்போவது போல் கதையை அமைத்திருக்கிறார் சுதா. பொம்மியும் மாறனைப் போலவே ஒரு இலக்கை வகுத்துக்கொண்டு வாழ்பவர். தனது நீண்டநாள் கனவான சிறந்த வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றையை அமைத்து ஒரு சுயதொழில் அதிபராக வரவேண்டும் என்பதை இலக்காக அமைத்துக்கொண்டு அந்த இலக்கை அடையும் முயற்சியோடு தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆண் பார்க்க வந்த இடத்தில் இருவரும் தங்கள் இலட்சியங்களை பகிர்ந்துகொள்கிறார்கள் இருவரும் தங்கள் இலட்சியங்களை அடைந்த பின்னர் தான் திருமணம் என்ற நிலைப்பாட்டின் காரணமாக நிட்சயிக்கப்படாமலே விலகிக்கொள்கிறார்கள். ஆனாலும் இருவர் மனதிலும் காதல் தானகவே உள்ளே சென்று அடியாளத்தில் அமர்ந்துவிடுவதை இயக்குனர் சாதுரியமாக காட்டியுள்ளார். இவர் தனது இலக்கை அடைந்தாரா இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்ற வினாவுக்கு விடையளிப்பதும் திரைப்படத்தின் மற்றொரு பிரதான விடயமாக அமைந்திருக்கிறது.

திரைப்படத்தின் கதையானது சமூகத்திற்கு ஊக்குவிப்பு (Motivation) மற்றும் உத்வேகம் (Inspiration) போன்றவற்றை வழங்கக்கூடிய ஒரு படமாகவே அமைந்திருக்கிறது. இந்தப்படத்தைப் பொறுத்தவரை கதையம்சம் இக்காலத்து சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமானதும் அவசியமானதுமாகும் என்பதே எனது அபிப்பிராயமாக இருக்கிறது. வெறுமனே அடி தடி சண்டைக்காட்சிகளையும் காதல் காட்சிகளையும் வைத்து மிகப்பெருமளவு வசூலை எதிர்பார்த்து வெளிவரும் படங்களை பார்த்துப்பார்த்து அதிலே ஊறியிருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான உணர்வை தரக்கூடிய படமாக அமையும். அதேவேளை அவர்களது வாழ்க்கையில் ஒரு இலக்கை உருவாக்கி அந்த இலக்கை அடைவதற்கான சகல சவால்களுக்கும் துணிவுடன் முகம்கொடுத்து வெற்றியை நோக்கி செல்வதற்கான பாடத்தைபுகட்டுவதற்கு உகந்த படமாகவும் இது அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்த படம் ஒரு துணிச்சலான படைப்பு என்றே கூறவேண்டும். சாதாரணமாக தற்போதய திரைப்பட கலாசாரத்துக்குள் ஊறிப்போயிருக்கும் மக்கள் மத்தியல் இப்படி ஒருபடத்தை எடுத்து அதனை வெற்றிபெற செய்திருப்பதையும் நாம் ஒரு இலக்காகவும் அந்த இலக்கு வெல்லப்பட்டதாகவும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. சூரரைப்போற்று திரைப்படத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை தோற்றுவிப்பதாகவே நகர்த்தப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு கட்டத்திலும் சோர்வில்லாமல் காட்சிகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறார் இயக்குனர் சுதா. படம் முடிவதற்குள் வழக்கம்போல வில்லன்களுடன் சிறிய அளவான மற்றும் மிகப்பெரிய சண்டைக்காட்சிகள் மாறி மாறி வரும் என்ற தோற்றப்பாட்டை மறைமுகமாக காண்பித்து கடைசிவரை எந்த ஒரு சண்டைகளும் இல்லாமலே படம் நிறைவடைகிறது ஆனாலும் ரசிகர்கள் யாரும் சோர்வடையாமல் இறுதிவரை படத்தை மகிழ்ச்சியுடன் பார்க்க முடிந்திருக்கிறது. காட்சிகளுக்கிடையிலான தொடர்பு மிகவும் சாதுரியமாகவும் கச்சிதமாகவும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொருத்தமான காட்சிகளை சந்தர்ப்பம் பார்த்து சரியான மிகப்பொருத்தமான இடங்களில் சேர்த்திருப்பது மெச்சத்தக்கது. இது இயக்குனரின் இயக்கும் திறனுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது.

இந்தப்படத்தில் மாறன் (சூர்யா) ஏற்றிருக்கும் பாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. சூர்யாவால் மட்டுமே இந்த பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்க முடியும் என பிரமிப்படைய வைக்கும் அளவிற்கு மிகச் சிறப்பாக தனது பாத்திரத்தை நடித்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு கட்டங்களிலும் அவரது நடிப்ப மெய்சிலிர்க்க வைக்கிறது. நான் சூர்யாவிற்கு சளைத்தவளல்ல என்று கூறும்படியாக பொம்மி (அபர்ணா)யும் தனது பாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருப்பது பாராட்டுக்குரியது. பொம்மி (அபர்ணா)யின் நடிப்பு பிரமாதமாக இருந்த போதிலும் இருவருக்குமிடையிலான ஜோடிப்பொருத்தம் சரியாக அமையவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. அதே வேளை வேறு யாராக இருந்தாலும் இந்த பாத்திரத்தை அபர்ணாவைப்போல் நடித்திருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

மாறன் பொம்மி இடையிலான காதல் காட்சிகள் வித்தியாசமான கோணத்தில் அமைக்கப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். வழக்கமாக ஆண் இயக்குனர்கள் பெண்களின் காதல் உணர்வுகளை தங்கள் பார்வையில் சிந்தித்து காதல் காட்சிகளை அமைப்பார்கள். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சுதா ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளையும் அதனை அவள் வெளிப்படுத்தும் முறையையும் ஒரு பெண்ணாக தனது பார்வையில் நோக்கி வெளிப்படுத்தி யிருக்கிறார். உண்மையிலேயே காதல் காட்சிகளிலும் புதுமையை புகுத்தியுள்ளார் என்றே குறிப்பிடவேண்டும். காதல் காட்சிகள் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விதமாக பொம்மியுடைய நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. இங்கு காம உணர்வு கலக்கப்படாத உள்ளார்ந்தமான காதல் உணர்வு மிகவும் ரசனையுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றமை மிகச் சிறப்பாக இருப்பதோடு வரவேற்பையும் பெறுகிறது. அத்தோடு எந்தவிதமான கவர்சியோ ஆபாசமோ மாறன் பொம்மி இடையிலான காதல் காட்சிகளில் இல்லாமை குடும்பத்துடன் ஒன்றாக இருந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கிறது. இவர்களிடையிலான காதல் காட்சிகளில் மட்டுமன்றி திரைப்படத்தில் எங்கும் ஆபாசத்திற்கோ கவர்ச்சிக்கோ இடம் தரப்படாமை இயக்குனரை மேலும் உச்சத்திற்கு கொண்டுசெல்கிறது.  

அண்மைக்காலங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் சில படங்களில் பார்க்க கிடைத்த ஊர்வசி இந்த திரை காவியத்தில் சூர்யாவின் அம்மாவாக குணசித்திர வேடமேற்று தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். தந்தையின் மரணச்சடங்கு முடிந்த பின் காலதாமதமாகி வரும் சூரியாவுடனான அந்த தருணத்தில் ஊர்வசியின் நடிப்பு அப்பப்பா பிரமாதம் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. தனது இலக்கை அடையும் நோக்கோடு ஒவ்வொரு நகர்வையும் எடுத்துவைக்கும் சூர்யாவை தொடர்ச்சியாக பல சிக்கல்களுக்குள் தள்ளிவிடும் வில்லன் பரேஸ் ராவல் நடிப்பு சுமாராகத்தான் இருக்கிறது. இவருடைய வில்லத்தனம் போதாதோ என்ற அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. அல்லது இந்த திரைக்கதையின் வில்லன் பாத்திரத்திற்கு இவர் பொருத்தமானவராக இல்லையோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

இலக்குகளை அடையும் நோக்கோடு அடியெடுத்து வைக்கும் சூர்யாவின் ஒவ்வொரு நகர்வுகளும் கச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கிறது. திரைப்படம் முழுவதும் சூர்யாவின் இலக்கை மையப்படுத்தி அதைச்சுற்றி சுற்றியே கதையும் படத்தின் காட்சியமைப்புகளும் நகர்த்தப்பட்டிருக்கிறது. சவாலை எதிர்கொண்டு எடுக்கப்படும் ஒவ்வொரு நகர்வுக்கான காட்சியமைப்பும் இயக்குனர் சுதாவினால் மிகுந்த அவதானத்துடன் காட்சியமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மாறனின் மனைவி பொம்மியின் இலக்கு அடையப்படுகிறது ஆனால் அவர் முகம்கொண்ட சவால்கள் ஏதும் படத்தில் காண்பிக்கப்படாதமை ஒரு குறைபாடாகவே தென்படுகிறது. இதனால் கதாசிரியர் பொம்மியின் இலக்குபற்றி திரைப்படத்தில் பேசாமலே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு காட்சியமைப்பிலே ஆண்களை நம்பித்தான் பெண்கள் வாழவேண்டும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து மாறனின் மனைவி பொம்மி அதனை சுட்டிக்காட்டி மாறனுக்கு அவர் கேட்ட தொகையைவிட அதிகமாக கொடுத்து உதவிசெய்து சூர்யாவின் இலட்சியத்துக்கு பக்கபலமாக இருப்பதன் மூலம் காண்பிக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது ஆண் பெண் சமத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு ஈடாக அமைந்திருக்கிறது. இந்த துணிச்சலுக்கு கதாசிரியருக்கு ஒரு சல்யூட் கொடுக்கலாம். ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்த மாறனுக்கு ஒரு கதவு மூடினால் எங்கோ ஒரு இடத்தில் இன்னொரு கதவு திந்தே இருக்கிறது உதவிக்கு யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவது போன்ற காட்சி அவர் கடமையாற்றிய விமானப்படையின் அதிகாரியும் சக ஊழியர்களும் உதவ முன்வருவதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது மற்றொரு சிறப்பம்சமாக எடுத்துக்கொள்ளலாம்.

காட்சியமைப்புகளும் வர்ண ஒப்புமையும் ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராக மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் காட்சியமைப்பிலும் காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதிலும் தொய்வைக் காண முடியவில்லை. படத் தொகுப்பாளர் காட்சிகளை சரியான இடத்தில் சரியாக கோர்ப்பதில் தனது பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். காட்சிகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப இசையை பொருத்தமாக வழங்கி தனது ஆற்றலை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஸ் குமார். திரைப்படத்தில் ஒன்பது பாடல்கள் இருந்ததா என்று ஆச்சரியப்படுமளவிற்கு பாடல்களும், பாடல்வரிகளும் அவற்றுக்கான இசையமைப்பும் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கான இடத்தேர்வுகளும் காட்சியமைப்புக்களுக்கும் திரைக்கதையின் பின்புலத் தேவைக்கும் அமைவாக இயக்குனரால் பொருத்தமாக தேர்வுசெய்யப்பட்டு படபிடிப்பு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

நிறைவு

பொதுவாக சூரரைப்போற்று திரைப்படத்தில் அதிகப்படியாக சொல்லக்கூடிய அளவிற்கு திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என சுட்டிக்காட்டக்கூடிய விடயங்கள் நான் ஏற்கெனவே குறிப்பிட்டவற்றைத் தவிர புதிதாக அடையாளம் காணக்கூடியதாக இல்லை. குடும்பமாக அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்ப திரைப்படம் சகல விடயங்களையும் உன்னிப்பாக கவனத்தில் எடுத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் அண்மைக்காலங்களில் வெளிவந்த திரைப்படங்களுள் சூரரைப்போற்று பல படி முன்னோக்கி நகர்ந்து சிறப்பான அதே வேளை ஒரு தரமான திரைப்படமாகவே இருக்கிறது. அனைவரும் பார்க்கவேண்டிய உத்வேகத்தை தரக்கூடிய அதேவேளை படிப்பினைகளையும் தரக்கூடிய திரைப்படமே சூரரைப்போற்று. எதிர்கால கனவுகளை சிறப்பாக அமைத்து வெற்றிகளை நோக்கி தடையின்றி முன்னேறிச்செல்ல நினைக்கும் இளம் சமூகத்திற்கு சிறந்த படிப்பினைகளை தரக்கூடிய திரைப்படம். ஐந்திற்கு நான்கு புள்ளி ஏழு (5: 4.7) மதிப்பெண்களை தயக்கமின்றி வழங்கலாம். தயாரிப்பாளருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

தமிழ் பாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக