வெள்ளி, 18 நவம்பர், 2022

உலக நாயகனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்திய தமிழ் திரைத்துறையில் மற்றொரு பரிணாமம்

 



அறிமுகம் (Introduction)

கமல் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த ஆனி மாதம் 3ஆம் திகதியன்று உலகம் பூராக உள்ள பல திரயரங்குகளில் வெளிவந்த திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளி வந்ததைத் தொடர்ந்து பல்வேறு விமர்சகர்களால் இப்படத்திற்கான திறனாய்வுகள் வெளியிடப்பட்டு வருவது நாம் அறிந்ததே. அவர்களைப்போலவே நானும் இந்தப்படத்திற்கான திறனாய்வு ஒன்றை எழுதும்பொருட்டு எடுத்த முயற்சியின் வெளிப்பாடே இந்த கட்டுரை. சாதாரணமாக ஒரு படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சில படங்களுக்குதான் ஏற்படும். அவ்வாறான எண்ணம் இந்தப்படத்தின் மீதும் ஏற்பபட்டதால் முதல் நாள் முதல் காட்சியை நீண்ட நாட்களுக்கு முன் முன் பதிவு செய்து பார்த்துவிட்டு வெளியே வந்தால் எப்படியும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதை உறுத்தி;கொண்டிருக்க இரண்டாவது மூன்றாவது தடவையும் பார்த்துவிட்டேன். இதற்கு முன் இப்படி அடுத்தடுத்து மூன்று தடவை எந்தப்படத்தையும் பார்த்ததில்லை. இதுவே முதற் தடவை ஆனாலும் இன்னும் ஒரு தடவை பார்க்கக் கிடைத்தால் பார்த்துவிடவேண்டும் என்ற ஆதங்கம் இன்னும் மனதில் உள்ளது. இந்த ஒரு விடயமே படம் எப்பேற்பட்டது என்பதை கட்டியம் கூறிவிடும். இருந்தாலும் இன்னும் சற்று ஆளமாக படத்திற்குள் புகுந்து படம் பற்றிய பல விடயங்களை ஆய்ந்து இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.

திரைப்படக்குழு (Film Team)

பிரதான குழு (Main Team)

முதலில் திரைப்படத்தில் முக்கிய பங்காற்றிய திரைப்படக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் யார் யார் எனப்பார்த்தால், இந்தப் படத்தை கமலஹாசன் தனது ‘ராஜ்கமல் பிலிம் இன்டர்நசனல்’ (சுயதமயஅயட குடைஅ ஐவெநசயெவழையெட) என்ற திரைப்படத் தயாரிப்பு விநியோக நிறுவனத்துக்கூடாக தயாரித்திருக்கிறார். படத்திற்கான திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கியிருப்பவர் படிப்படையாக தனது திரைத்துறைத் திறணை சிறப்பாக வெளிப்படுத்திவரும் லோகேஸ் கனகராஜ். இந்த திரப்படத்திற்கான இசையை வழங்கியிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும் செயற்பட்டுள்ளனர். இந்த படத்தினுடைய விநியோகத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். விஸ்ணு இடவன் மற்றும் ஹைசன்பேர்க் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும் ரவி ஜி பாடகராகவும் ஈடுபட்டுள்ள அதேவேளை இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் அவர்களும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் குழாம் (Artists)

விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக அருண்குமார் பின்பு விக்ரமாக அடையாளப்படுத்தப்படும் பிரதான பாத்திரமேற்று நடித்திருப்பவர் கமல்ஹாசன். கொலைகாரர்களை அடையாளம் காணும்பொருட்டு பொலிசாரால் நியமிக்கப்பட்ட பிளக் ஸ்குவாட் (Black Squared) ஆய்வு அமைப்பின் பொறுப்பாளராக அமர் என்ற பாத்திரமேற்று பஹத் பாசில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் நேரடியான வில்லனாக சந்தானம் என்ற வேடமேற்றுள்ளார் விஜய்சேதுபதி. கௌரவ வேடம் என்று குறிப்பிடப்பட்டாலும் மிகப்பிரதானமான வேடம் இவருடையது என்ற பிம்பத்தை ரசிகர்களிடம் தோற்றுவித்த றொலக்ஸ் என்ற பாத்திரத்தில் சூரியாவும் இதேபோல வீட்டில் வேலைக்காரியாக டீனா என்ற பாத்திரத்தில் ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நடித்திருக்கும் மற்றொருவர் வசந்தி. இவர்களுடன் காளிதாஸ் ஜெயராம், நரைன், அர்ஜூன்தாஸ், ஷிவானி நாராயணன், காயத்திரி சங்கர், சந்தான பாரதி, மாயா என்று ஒரு பெரும் நடிகர் பட்டாளமே இத் திரைப்படத்தில் நடிகர்களாக தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கதைச்சுருக்கம் (Story)

விக்ரம் திரைப்படத்தின் கதை மிகவும் வித்தியசமான கோணத்தில் கருவை மையப்படுத்தியதாக தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே ஒரு குழுவினால் மற்றொரு போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கு சொந்தமான போதைப்பொருள் கடத்தப்படடுள்ளது. அதை யார் கடத்தினார்கள் அது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதை தேடி படத்தின் நேரடி வில்லன் தனது தேடலை ஆரம்பிக்கிறான். இந்த வில்லன் தான் விஜய்சேதுபதி தனது மூன்று மiவிகளுடன் குதூகலமாக வாழ்க்கை நடாத்துவதோடு மிகப்பெரிய போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபடுபவன் இவன். அந்த போதைப்பொருள் கடத்தல் குழாமை பிடித்து கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸ் குழாமின் முக்கியஸ்தர்களை ஒரு முகமூடிக் கும்பல் கொலை செய்து அதனை ஒளிப்படாமாக்கி பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இதில் கொல்லப்படுபவர்களில் முக்கியமானவர்களாக காண்பிக்கப்படுபவர்களில் ஒருவர் கமலின் வளர்ப்பு மகன் அதாவது கமலை தந்தையாக தத்தெடுத்தவர் மற்றொருவர் பொலிஸ் அல்லாத படத்தின் கதாநாயகனான கமல். இந்த கொலைகளை செய்தவர்கள் யார், ஏன் செய்கிறார்கள், இவர்களின் பின்புலம் என்ன என்பவற்றை தேடி ஆய்வுக்காக பொலிஸ் பொறுப்பதிகாரி செம்பன் வினோத் ஜோஸ்pன் வேண்டுதலுக்கமைவாக தனது குழுவுடன் புறப்படுபவர் தான் அமர் என்ற பஹத் பாசில். அவரது ஆய்வின் மூலமாக சரியான காரணங்களையும் நபர்களையும் நெருங்கும் போது எதிர் பாராத அதிர்ச்சி தரும் ஆச்சரியத்துடன் பாதிப்படம் நிறைவுக்கு வருகிறது. முதல் பாதி நிறைவில் ஏற்பட்ட ஆச்சரியங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் விடையளிப்பதாக அமைவதே படத்தின் மீதிப்பாதி. கைதி படத்தின் கதை, 1996இல் வெளிவந்த விக்ரம் படத்தின் கதை இதற்கு பின்னர் எப்படித் தொடரக்கூடும் என்பவை படக்கதையுடன் தொடர்புபடுத்தி பிணைக்கப்பட்டுள்ளன. மிக ஆழமாகச் சென்று கதையை இன்னும் தெளிவாக குறிப்பிடப்போனால் படத்தை பார்க்க செல்பவர்களின் இரசனைக்கு குந்தகம் ஏற்படும், அத்தோடு திரைப்படத் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாகிய அனைவரும் படத்தை திரையில் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு பாதிப்பு ஏற்படும் ஆகவே கதையை இத்தோடு மட்டுப்படுத்தியிருக்கிறேன்.

கதையின் நகர்வு (Story Movement)

விக்ரம் படத்தின் கதையைப்பொறுத்தவரை திரைக்கதையை எழுதிய லோகேஸ் கனகராஜ் இதற்கு முன்னர் வந்த ஏனைய படங்களின் கதாசிரியர்கள் கையாளாத முறையில் கதை நகர்வை கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் பல இடங்களிலே ஆச்சரியங்களை உருவாக்கி ரசிகர்கள் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்க வேறொரு கோணத்தில் கதையை நகர்த்தியிருப்பது அவரது சிந்தனை போக்கின் புத்தாக்கத் திறனை வெளிக்கொணர்ந்திருக்கிறது. உலக நாயகனும் படத்தின் நாயகனுமான கமலை ஆரம்பத்திலேயே கொலை காரர்கள் கொலை செய்வது போல் நிதர்சனமாக காண்பிக்கும் இவர் அந்த இடத்திலேயே ரசிகர்கள் மத்தியில் முதலாவது ஆச்சரியத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதன் பின்னர் கொலைகாரர்களை கண்டு பிடிக்கப் புறப்படும் பிளக் ஸ்கொட் ஏஜன்ட் கொலை காரர்களை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கையாளும் நுட்பங்களை பிரமாதமாக உள்ளே நுளைத்துள்ளார்.

ஏற்கனவே லோகேஸ் கனகராஜால் இயக்கப்பட்டு வெளிவந்த கைதி திரைப்படத்துடனும் 1986இல் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் கதையுடனும் இந்தக் கதையை பிணைத்திருப்பதானது அவரின் கதை கோர்ப்பு ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. முன்பு வெளிவந்த படங்களுடன் இந்தப்படத்தின் கதையை பிணைப்பதற்கு மிக ஆழமாக சிந்தித்து தொடர்புபடுத்துவதற்காக நீண்ட காலத்தை செலவளித்திருந்தால் மட்டுமே இது கைகூடும். ஏனைய இயக்குனர்கள் வழக்கமாக கையாளும் ஒரு கதையை தொடங்கி அப்படியே அடுத்தடுத்த காட்சிகளை தொடர்ச்சியாக அடுக்கிக்கொண்டு போகும் கதைப் பாணியை கைவிட்டு பல சந்தர்ப்பங்களில் திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் நுளைத்து வெவ்வேறு கோணங்களில் கதையை திசை திருப்பி திசை திருப்பி நகர்த்தியிருப்பது ரசிகர்கள் படத்தினை தொய்வில்லாமலும் சோர்வில்லாமலும் உற்சாகத்துடன் தொடர்ந்து பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.

இங்கு உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கும் டீனாவின் பாத்திரம் எதிர்பார்க்க முடியாத ஒரு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் பல கேள்விகளுக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்த வீட்டில் டீனா போன்றதோர் பாத்திரம் கொண்டுவரப்பட்டதற்கான வலுவான காரணங்களை கதைக்குள் காண முடியவில்லை. கதா நாயகன் தனது மகனுக்கும் மருமகளுக்கும் பேரப்பிள்ளைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டதா? அப்படியாயின் ஏன் மகனை காப்பாற்றுவதற்கான முனைப்புகள் காண்பிக்கப்படவில்லை? பேரனை மட்டும் பாதுகாப்பது நோக்கமாயின் கொலை செய்யப்பட்டவர் கதா நாயகனின் உண்மையான மகன் இல்லையா? இதன் பின்புலத்தில் வேறு ஏதாவது ஒரு காரணம் மறைக்கப்பட்டுள்ளதா? பேரனுக்கு இப்படியான பெரிய ஆபத்து வரும் என்பது நாயகனால் முற்கூட்டியே கணிக்கப்பட்டிருந்ததா? அதற்கான சான்றுகள் ஏன் கதையில் காண்பிக்கப்படவில்லை? கதானாயகனின் மருமகள் அவளுடைய பிள்ளையில் பெரியளவான அக்கறையோ பாசமோ காட்டாது கதை நகர்த்தப்பட்டிருப்பதில் ஏதோ ஒரு மர்மம் மறைக்கப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கிறது. இவற்றுக்கு விடைகள் இந்தப்படத்தின் அடுத்த பாகத்திற்காக மறைக்கப்பட்டுள்ளதா என்ற எதிர் பார்ப்பும் கதையில் தூண்டிவிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக நாயகன் பேரப்பிள்ளை மீது காட்டும் பாசமும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் மாபியாக்களின் செயற்பாடுகளும் அவர்களுடன் மறைமுகப் பிணைப்பில் செயற்படும் பொலிஸ் பிரதானியின் செயற்பாடுகள் பற்றிய விடயங்களும் இறுதியாக அந்த பெரிய போதைப்பொருள் மாபியாவை அடக்குவதற்கான முனைப்பில் கதாநாகன் ஈடுபடும் போக்குகளும் கதையாக நகர்த்தப்பட்டிருக்கிறது. இறுதியாக கதைக்குள் நுளைக்கப்பட்டிருப்பது மாபியாக்களின் தலைவன் றொலெக்ஸ் (சூரியா). கதையில் இவர் பற்றிய சந்தேகமும் எழாமலில்லை. இவர்தான் உண்மையான தலைவனா? அல்லது இதற்குள் ஏதாவது மர்மம் புதைக்கப்பட்டு அது அடுத்த பாகத்தில்தான் வெளிவருமா என்ற பெரும் மர்மம் சூட்சுமமாக திணிக்கப்பட்டிருக்கிறது போன்றே தோன்றுகிறது.

பாத்திரங்களும் பாத்திரப்பகிர்வும் (Artists and role distribution)

ஒரு வித்தியாசமான கதையமைப்பை கோர்வையாக வெவ்வேறு கோணங்களில் இருந்து சம்பவங்களை தெரிவு செய்து கொண்டுவந்து அவற்றுக்குள் உறுதியான பிணைப்புக்களையும் தொடர்புகளையும் புகுத்தி கதையை அமைத்த கதாசிரியர் அந்த கதைக்கு அமைவாக பொருத்தமான கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருப்பதோடு அந்தப் பாத்திரங்களுக்கிடையிலான நடிப்பங்குகளையும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் தேவைக்கமைவாகவும் பொருத்தியிருக்கிறார். அதேபோலவே திரைப்படத்தில் வரும் கதாநாயகன் முதற்கொண்டு அனைத்துப் பாத்திரங்களும் தங்களது பொறுப்பை இயக்குனரின் எதிர் பார்ப்புக்கமைவாக சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள் .ஒவ்வொரு கதா பாத்திரத்திற்கும் உரிய நடிகர்கள் இயக்குனரால் சுழியோடி திரைக்கதைக்கு பொருத்தமாக கண்டு பிடிக்கப்பட்டு புகுத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு அனைத்துப் பாத்திரங்களையும் கதைத் தேவைக்கேற்ப முழுமையாக அதேவேளை, சமமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களின் தனித்தன்மைகள் முழுமையாக தவிர்கப்பட்டு இயக்குனரின் எதிர்பார்ப்புக்கமையவே பாத்திரங்களின் நடிபங்கு மேற்கொள்ப்பட்டிருப்பதை இந்தப் படத்தில் சிறப்புத் தன்மையாக பார்க்கலாம்.

கதா நாயன் கமலை பொறுத்தவரை அவரது தனித்தன்மையில் இயக்குனரின் இந்த செயற்பாடு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். காரணம் கமலைப்பொறுத்தவரை மற்ற கதாநாயகர்களைப் போல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துக்கொண்டு அதில் தனது சுயத்தை வெளிப்படுத்துபவரல்ல மாறாக பாத்திரத்தின் தன்மைக்கேற்ப தனது சுயத்தை மாற்றிக்கொள்வதையே அவர் பெரிதாக விரும்புவதுண்டு. ஆகவே அவருடைய அந்த மனப்பாங்கு இங்கு அவருக்கு பெரியளவில் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திக்கிறார். ஒரு இளம் வயது நடிகருக்கு நிகராக தானும் இளைஞராக மாறி சகல சண்டைக்காட்சிகளிலும் தனது ஆற்றலை தொய்வின்றி தெறிக்கவிட்டிருக்கிறார். நடிப்பில் நடிகர் திலகத்திற்கு அடுத்து உலக நாயகன்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

பாத்திரப் பகிர்வில் முதற் பாதியில் கமலை காணவில்லை என்ற பல ரசிகர்களின் தவிப்பு இந்த படத்தை பொறுத்தவரை நியாயமானதாக எனக்கு தெரியவில்லை. கதையமைப்புக்கமைவாக அவர் படத்தின் முதல் பாதியில் பல இடங்களில் வந்துள்ளார். அந்த காட்சிகள் அப்படி அமைக்கப்பட்டிருக்காவிட்டால் படத்தின் இரண்டாம் பாதி முற்றாக சோபை இழந்ததாகவே இருந்திருக்கும். இந்த வகையிலான பாத்திர அமைப்பு கையாள்கை கூட இயக்குனரின் சாதுரியமென்றே எடுத்துக்கொள்ள முடிகிறது.

சந்தானம் என்ற பெயரில் வில்லன் பாத்திரத்திரமேற்று நடித்திருக்கும் விஜய்சேதுபதி தனக்கென ஒரு நடிப்பு பாணியை உருவாக்கி வைத்துக்கொண்டு அப்படியே நடிப்பவரல்ல. அநேகமாக அவரும் கமலைப்போலவே படத்திற்கேற்ப தனது நடிப்புத் திறனை கதைக்கும் இயக்குனரின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் இயல்பாகவே உருவாக்கிக்கொள்பவர். அதனை விக்ரம் படத்திலும் கையாண்டு உலக நாயகனின் நடிப்புக்கு நிகராக தனது நடிபங்கை வழங்கியிருக்கின்றமை மிகச் சிறப்பு.

கொலை காரர்களை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணியில் ஈடுபடும் பிளக் ஸ்குவாட் அமைப்பின் பிரதானியாக அமர் என்ற பெயரில் பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் பஹத் பாசில் ஏனைய அனைத்து நடிகர்களுக்கும் சற்றும் சளைத்தவனல்ல என்று எண்ணும் விதமாக அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது படத்தின் வெற்றிக்கு இன்னும் உரமூட்டியிருக்கிறது. இவருடைய பாத்திரம் கதைக்கருவுக்கு அமைவாக சரியான இடத்தில் மிகச் சரியாக லேகேஸினால் புகுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆய்வாளருக்குரித்தான சிறப்புத் தேர்ச்சி அவரிடம் இருப்பதை அவரது அபார நடிப்புத் திறன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடுத்து பாத்திரம் மற்றும் பாத்திர பகிர்வுக்குள் ஒருவராக பங்கெடுத்துக்கொள்பவர் இப்படத்தில் டீனா என்ற பெயரில் வேலைக்காரி வேடமேற்று நடித்திருக்கும் வசந்தா. இதற்கு முன் பல படங்களில் நடனக் கலைஞராக இவரை பார்த்த ரசிகர்களிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இவரது பாத்திரத்திற்குள் மிகப்பெரிய மர்மத்தை புகுத்தியிருக்கும் இயக்குனருக்கு கடுகழவு ஏமாற்றத்தைத்தானும் கொடுக்காது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாகவும் இவரது நடிப்பைபற்றி விசேடமாக குறித்து பேசுமளவுக்கு தனது பாத்திரத்தை நடித்திருக்கிறார்;

மற்றொன்று இப்படத்தின் சிறப்பு பாத்திரமாக இறுதிப்பகுதியில் இயக்குனரால் உள்ளே சேர்க்கப்பட்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது கர்ஜனையுடன் கூடிய நடிப்பால் திரையரங்கையே அதிர விட்ட சூரியாவின் றொலக்ஸ் என்ற பாத்திரம். மூன்று நிமிட காட்சி என்று சொல்லப்பட்ட போதிலும் அந்த சொற்ப நேரம் படத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குனர் மிகக் கச்சிதமாக ரசிகர்கள் மத்தியில் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்புக்களை சூரியா மூலம் ஆழமாக விதைத்து வேரோடவிட்டு படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

கதைக்கும் காட்சிக்கும் ஏற்றாற்போலவும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் முன்னைய கைதி படத்துடனான தொடர்பு போன்றவற்றையெல்லாம் பிணைத்துவிடும் வகையில்  மேலும் பல பாத்திரங்கள் இந்தப் படத்தில் புகுத்தப்பட்டு அனைவருக்கும் காட்சிகள் தேவைக்கமைவாக பகிரப்பட்டு படம் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் நடிபங்கை எதிர் பார்க்கைகளுக்கும் மேலே பல படிகள் முன்னேறி வெளிப்படுத்தியருப்பது மெய்ச்சப்படவேண்டியதே.

இசையமைப்பு (Music)

படத்திற்கான பின்புல மற்றும் பாடல்களுக்கான இசையமைப்பு படத்திற்கு தற்காலத்து இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றாற்போல வளர்ந்துவரும் இசையமைப்பாளர் அனிருத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவரது இசையால் திரையரங்கமே அதிரும்படியாக இசையமைப்பு அமைந்திருந்தது மெய்ச்சத்தக்கது. பாடல்களுக்கும் இசையால் உரமூட்டியிருக்கிறார் அனிருத். இருப்பினும் முன்னைய விக்ரம் படத்தின் இசையுடன் ஒப்பிடுகையில் இன்னமும் பல புதுமைகளை இவர் தனது இசையமைப்பில் புகுத்துவதற்குரிய அனுபவங்களை பெறவேண்டியிருக்கிறது என்பதும் புலப்படுகிறது.

நடனம் (Dance)

படத்தில் வரும் பாடல்களில் நடனக் காட்சியமைப்பை நடன இயக்குனர் சான்டிதான் மேற்கொண்டிருக்கிறார் என்பது பத்தல பத்தல பாடலின் நடனத்தை பார்க்கும்போதே புரிந்துகொள்ளமுடிகிறது. பொதுவாகவே கமல் நடனத்தில் சளைத்தவர் அல்ல. ஆகவே இந்தப் பாடலில் கமலுடைய சொந்த நடனமுறைமையையும் சில இடங்களில் புகுத்தியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

கலை இயக்கம் (Art Direction)

படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற முறையில் பொருத்தமான காட்சியமைப்புக்களை கலை இயக்குனர் மேற்கொண்டிருக்கிறார். மிகவும் குறிப்பிட்டுக் கூறுவதாயின் பாடல் காட்சிகள், போதைப்பொருட் கடத்தல் காரர்களின் இடங்கள், ஆய்வாளர் ஆய்வு மேற்கொள்ளும் காட்சிக்குரிய இடங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இடம்பெறும் இடங்கள் யாவும் அந்தந்த காட்சிகளுக்கு தேவையான வகையில் காட்சியமைப்புகளை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார் கலை இயக்குனர். மிக முக்கியமாக இறுதி சண்டைக்காட்சிக்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் காட்சிப்படுத்தல் மிக நுட்பமாக சிந்தித்து கையாளப்பட்டுள்ளமைக்கு கலை இயக்குனர் சதீஸ் குமாரை வெகுவாக பாராட்ட வேண்டும்.

ஒளிப்பதிவு (Camara)

விக்ரம் திரைப்படத்தில் ஒளிப்திவு செய்வதற்காக புதிய வகை ஒளிப்படக் கருவி பயன்படுத்தப்பட்டிருந்தமையால் பல காட்சிகள் ஒரே வீச்சில் செயலி கட்டளை மூலம் படமாக்கப்பட்டமை காட்சியமைப்புகளை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது என பொதுவான ஒரு அபிப்பிராயம் இருந்தாலும் ஒளிப்பதிவாளரின் மதிநுட்பமான படப்பிடிப்பு முறைமை இன்றி இது கைகூடாது என்ற சொல்லக்கூடிய அளவுக்க படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் அங்குலம் அங்குலமாக ரசித்து படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கிறார். காட்சியமைப்புக்களும் மிகச்சிறப்பாக பொருத்தமான கோணங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. படத்தின் வெற்றிக்கான முக்கியமானவர்களுள் இவரும் இணைத்துக்கொள்ளப்படவேண்டியவர் என்றால் அது மிகையாகாது.

படத் தொகுப்பு (Editing)

இயக்குனரின் எதிர் பார்ப்புக்களை கச்சிதமாகக் கையாளக்கூடிய படத்தொகுப்பாளர் ஒருவர் லோகேஸ் கனகராஜூக்கு கிடைத்திருப்பது பாக்கியமே என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு கனகச்சிதமாக ஒவ்வொரு காட்சிகளையும் தொகுத்திருக்கிறார். வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களை எந்தவிதமான தொய்வுமின்றி பொருத்தமான காட்சிகளை பொருத்தமான இடத்தில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் புகுத்தி அவற்றுக்கிடையிலான தொடர்பை அல்லது பிணைப்பு போன்றவற்றை சிறிதளவும் பிசகாமல் தொகுத்திருப்பது தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகமுக்கியமாக குறித்துரைக்கப்படக்கூடியதாகவே இருக்கிறது. இந்தளவுக்கு தரமாக படத்தொகுப்பு மேற்கொள்ளப்படவில்லையாயின் இந்தப்படம் இவ்வளவுதூரம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லையெனக் கூறலாம். அவ்வளவு பிரமாதமாக படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப்படத்தில் கணணி மூலமாக கிராபிக் வேலைகளுக்கு பெரிய அளவில் இடம் தராமல் முழுக்க முழுக்க படத் தொகுப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி தரமான தொகுப்பாக படத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

தொகுப்பு

என்னைப்பொறுத்தவரை எந்தவொரு திறனாய்வும் அதன் படைப்பாளரை அவரது ஆர்வம் முயற்சி போன்றவற்றில் இருக்கும் ஆர்வத்தை குறைத்துவிடாது அவரை மென்மேலும் ஊக்குவிப்பதாக அமையவேண்டும் என்பதில் அதிக விருப்பமுடையவன். குறைகள் இருப்பினும் அந்த குறைகளை நேரான முறையிலே சாதகமான மாற்றங்கள், திருத்தங்களை எடுத்துக்காட்டி அவற்றை திருத்துவதற்கான அல்லது மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதே நல்ல திறனாய்வுக்கு அழகு. அதையே இந்த திறனாய்விலும் நான் முயற்சித்துள்ளேன். இந்த ஆய்வில் நான் மேலே குறிப்பிட்ட சிறப்பான பலவிடயங்களையும் அதேபோல் சில கவனத்தில் பதிவதற்குரிய சிறிய திருத்தங்கள் மற்றும் சந்தேகங்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவை தவர வேறு ஆழமான கருத்துப் பிறழ்வான மற்றும் காட்சிப் பிறழ்வான விடயங்கள் இப்படத்தில் கண்டுகொள்வது மிகக்கடினமே. மொத்தத்தில் இவ்வாறானதொரு சிறந்த படைப்பபை தந்த லோகேஸ் கனகராஜ் எதிர் காலத்தில் பல விருதுகளுக்கு உரித்துடையவர் என்பதே எனது கருத்து. அவர் மட்டுமல்ல இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் திறனை மிகச் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அவர்களுக்கு எந்த முறையிலும் சளைத்தவர்களில்லை என்பதை திரைப்படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்த ஏனைய படக்குழுவினரும் தங்கள் திஙனை வெளிப்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் திரைப்படம் பேஸ் பேஸ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக