புதன், 8 செப்டம்பர், 2021

குங்கும பொட்டின் மங்களத்தை தன் வரிகளால் தமிழ் திரையுலகிற்கு பறைசாற்றிய மங்கை?

 



குங்கும பொட்டின் மங்களம்

நெஞ்ச மிரண்டின் சங்கமம்

நெஞ்ச மிரண்டின் சங்கமம்

இன்றெனக் கூடும் இளமை ஒன்றென பாடும்

ஆகா என்ன அருமையான பாடல் வரிகள். பாடலில் பல்லவியின் ஆரம்பமே அமர்க்களப்படுத்துகிறதே உள்ளத்தை ஊடுருவி சிலிர்ப்பை ஏற்படுத்திச் செல்கிறதே என்று கேட்போரை சிலிர்க்க வைக்கும் வரிகள் இவை. முதலில் ஆண் படிக்க பின்னர் அதே வரிகளை பெண் பாடுவார். இந்தப் பாடலின் சரணம் எப்படி இருக்கின்றது என்பதை தொடர்ந்து பார்ப்போம். சரணத்தையும் ஆணும் பெண்ணும் மாறிமாறி படிப்து போல படமாக்கப்பட்டிருக்கும்.


எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்

உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே

மான்தளிர் தேகம் தந்ததே

மான்தளிர் தேகம் தேகம் தேகம்

இந்தப் பாடல் வரிகளை பார்க்கின்றபோது ஏற்படும் ஊடலை விடவும் பல மடங்கு அதிகமான உணர்வலைகள் இந்தப்பாடலை செவிகளால் கேட்கின்றபோது எம்மை ஆட்கொள்ளும்படியாக அமைந்திருக்கும். அத்துணை அருமையாக எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இந்தப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். அத்தோடு இந்தப் பாடலை ரி. எம். சௌந்தரராஜன் அவர்களும் பி. சுசீலா அம்மையார் அவர்களும் பாடியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனின் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனங்களில் ஆழமாய்க் குடியிருந்த ‘குடியிருந்த கோயில்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலே இந்த பாடல். இந்த திரைப்படம் எம். ஜி. ஆர். அவர்கள் சூடுபட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடிந்து ஓரளவு உடல் தேறிய பின்னர் நடித்த முதல் திரைப்படம் என்று அறியக் கிடைக்கிறது. இந்த பாடலின் அடுத்த சரணம் இவ்வாறு அமைகிறது.

மனம் சிந்திக்க சிந்திக்க சொல்லும்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண்ணான பெண் என்னை தேடி

கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி கோடி

இந்த ஆக்கத்தில் நடித்தவர்கள் இசையமைத்தவர் என்பதற்கெல்லாம் அப்பால் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயத்தை தெரிந்துகொள்வதன் அவசியம் கருதியே இதனை பதிவு செய்யத்தூண்டியது என் மனம். அது யாதெனில் இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் பற்றிய நமது நினைவுகளை விட்டு மறைந்த சில விடயங்களே. இந்தப்பாடலை எழுதிய பாடலாசிரியர் ஒரு பெண் பாடலாசிரியர். இதைவிட ஆச்சரியம் இவர் ஒரு இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர். இவை அனைத்தையும் விட ஆச்சரியமிக்க விடயம் இவர்தான் தமிழில் திரைப்பட பாடலை எழுதிய முதலாவது பெண் பாடலாசிரியர் என்பது.

இந்த பாடலை எழுதிய அந்த பாடலாசிரியை ‘ரோஷனாரா பேகம்’ என்பவரே. அவர் எழுதி திரைப்படத்தில் வெளிவந்த முதல் பாடலும் கடைசிப் பாடலும் இதுவே. இந்தப் பாடலில் பின்னர் வேறு எந்தத் திரைப்படங்களுக்கும் இவர் பாடல் எழுதவில்லை என்பதே வரலாறு சொல்லும் செய்தியாகவிருக்கிறது. முஸ்லிம் பெண்கள் பொது வெளியில் வருவதே அரிதாக இருந்த சூழலில் ரோஷானாரா பேகம் 1968ஆம் ஆண்டில் இந்தப்பாடலை திரைப்படத்துக்காக எழுதினார். அது மட்டுமன்றி இவர் எழுதிய இவருடய முதலாவது பாடலே பட்டி தொட்டி எங்கும் ஒலித்து அமோக வரவேற்பை பெற்றதோடு இவருக்கு பெருமையையும் தேடித்தந்தது. இந்தப் பாடல் மூலம் அவர் பெற்ற பெருமை இன்றுவரை அழியாமல் இப்பாடல் மூலம் நிலைத்திருக்கின்றபோதும் இவரது பெயர்தான் பலபேருக்க மறந்து போய்விட்டது. இந்த படத்தின் கதாநாயகன் வேடத்தில் நடித்த எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியமையையிட்டு பாடலாசிரியை ரோஷானரா பேகம் அவர்களை நேரடியாகவே மனதார பாராட்டியிருக்கிறார்.

இதனை எழுத இவருக்கு ஊக்கமளித்தவர் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். கோவையில் அந்தக் காலப்பகுதியில் மிகவும் பிரபலமாகவிருந்த சைனிங் ஸ்டார்ஸ் என்ற மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளர் சேக் முஸ்தபா அவர்களின் மகள்தான் இந்த பாடலாசிரியை ரோஷானரா பேகம். இவருடைய தாயார் பேகம் மருத்துவ துறையில் பணியாற்றியவர். இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் சேக் முஸ்தபாவின் நண்பர். இவர்கள் இருவரும் அந்த நாட்களில் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேக் முஸ்தபாவின் மகள் ரோஷானரா கவிதைகள் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். பல கவிதைகளையும் பாடல்களையும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய அந்த கவிதை மற்றும் பாடல்களை அவளது தந்தை அவ்வப்போது விஸ்வநாதன் அவர்களுடன் பகிர்ந்துள்ளார். அந்த வேளையில் அவற்றில் மேற்கொள்ளக்கூடிய அவசியமான திருத்தங்களை யெல்லாம் விஸ்வநாதன் அவர்கள் ரோஷானராவிற்கு சொல்லிக்கொடுப்பது வழக்கமாக இருந்தது. இவ்வாறான சூழலில் தான் சேக் முஸ்தபாவின் வேண்டுகோளுக்கு இணங்க விஸ்வநாதன் அவர்கள் ரோஷானராவிற்கு ‘குடியிருந்த கோயில்’ படத்தில் குங்கும பொட்டின் மங்களம் என்ற இந்த பாடலை எழுதுவதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலுமணியிடம் இவருக்கு பாடலை எழுதுவதற்கான வாய்ப்பை தரும்படி சிபார்சு செய்திருக்கிறார் எம். எஸ். வி. அதன் பிரகாரமே இந்த ஒரு பாடலுக்கான வாய்ப்பு இவருக்கு கிடைக்க அந்தப் படத்தின் மற்றொரு பாடல் மூலம் சூலூர் புலமைப்பித்தன் திரைப்பட பாடலாசிரியராக எம். ஜி. ஆர் அவர்களின் சிபார்சுடன் அறிமுகமானார். இந்த கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது இப்படத்தின் மற்றொரு பாடலை எழுதியதன்; மூலம் திரைப்பட பாடலாசியராக அறிமுகமாகிய புலமைப்பித்தன் அவர்கள் மறைவு குறித்த செய்திகளை அறியக்கிடைத்தது. இவருக்கும் இதுவே முதல் படம் முதல் பாடல். ஏனைய பாடல்களை கவிஞர் வாலி அவர்கள் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரோஷானரா கவிதைகள் பாடல்களை எழுதுவதில் மட்டும் திறண் கொண்டவரல்ல. இவர் பாடல்களை பாடவல்ல குரல்வளம் மிக்க சிறந்த பாடகியும்கூட. புனித பிரான்சிஸ் கொன்வன்றில் படித்த இவர் முறைப்படியான இசையை திரு. கைலாசம் என்பவரிடம் கற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்படங்களின் முதல் பெண் பாடலாசிரியை முதல் முஸ்லிம் பெண் பாடலாசிரியை என்ற பெயரை பெற்ற இவர் அந்த ஒரு பாடலுடன் திரைத்துறையிலிருந்தும் சமூக வெளிப்பாட்டு செயற்பாடுகளிலுமிருந்தும் ஒதுங்கி வாழத்தொடங்கினார். இதற்கான காரணம் அவர் மூலமாக இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அத்தோடு பின்பொரு காலப்பகுதியில் ரி. எம். எஸ். அவர்களது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டதாகவும் அதுவே அவரது முதலும் கடைசியுமான நேர்காணலாகும் என அவர் குறிப்பிட்டிருந்ததாகவும். இது வரை திருமணமே செய்துகொள்ளாது அவர் சார்ந்த சமூகத்துடனும் உறவுகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் செய்தித்தகவல்கள் மூலமாக அறியக்கூடியாதாக இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக