பிள்ளை மனம் கலங்குதென்றால்…..
மெல்ல
சூரியன் தன் கதிர்களை பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். வானம் செக்கச் செவேலென சிவந்து
இருந்தது. முகில் கூட்டங்கள் அவசர அவசரமாக சூரியக்கதிர்களை கடந்து சென்றுகொண்டிருப்பது
அவற்றின் நிழல் பூமியில் படுவதில் தெரிந்தது.
அன்று
தீபாவளி பண்டிகை நாள். சூரியாவின் வீட்டில் எல்லோரும் காலை நேரகாலத்தோடு எழும்பிவிட்டார்கள்.
தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும் எல்லா வீடுகளிலும் கொண்டாட்டம் தடல்புடலாகத்தானே
இருக்கும். அதே தடல்புடலும் கலகலப்பும் தான் சூரியாவின் வீட்டிலும்.
முக்கியமான விடயம் என்னவென்றால் கொரோனா என்ற கொடிய நோய் அரக்கன் காரணமாக கடந்த வருடம் தீபாவளிப் பண்டிகையை யாருக்குமே கொண்டாட கிடைக்கவில்லை. அந்த உலக நாடுகள் அனைத்தையும் பதம் பார்த்து தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த தருணம். அது நம் நாட்டையும் பாரிய அளவில் பதம் பார்த்துக்கொண்டிருந்தது.
அதனால்
நாடு முழுவதும் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையால் எங்கும்
கொண்டாட்டங்கள் எதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வருடம் கட்டுப்பாடுகளில்
தளர்வுகள் ஏற்பட்டதால் இந்து மக்கள் அனைவரும் இந்த முறை பண்டிகையை இரட்டிப்பு மகிழ்சியுடன்
சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அனைத்து
இந்து மக்களையும் போலவே சூரியா வீட்டிலும் கொண்டாட்டத்திற்கான சிறப்பான ஆயத்தங்கள்
நடந்துகொண்டிருந்தன. சூரியா எழுந்தவுடன் காலையிலேயே முழுகி தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு
தேனீரை தயார் செய்து எடுத்து வந்து அனைவருக்கும் பகிர்ந்துகொண்டிருந்தாள்.
ரோசனும்
வழக்கத்துக்கு மாறாக இன்று எல்லோருடனும் சேர்ந்து நேரத்துக்கு எழும்பியிருந்தான். ரோசன்
சூரியாவின் மூன்றாவது மகன். எழும்பியது முதல் அங்குமிங்கும் ஓடி அலைந்து திரிந்தான்.
பல்லும் விளக்கவில்லை முகம் கழுவவுமில்லை. தாயார் தேனிரை கொணர்ந்து கொடுக்க அதையும்
மேசையின்மேல் வைத்துவிட்டு தொடர்ந்து எதையோ தொலைத்தவன் போல் அலைந்து திரிந்தான்.
சிவப்பி….
சிவப்பி… சிவப்பி…. சிவப்பி…. என்று கூப்பிட்டுக்கொண்டே தொடர்ந்து அலைந்து திரிந்தான்.
குட்டி
என்ன ரீய மேசையில வச்சிட்டு ஓடித் திரியிறீங்க…. வந்து குடியுங்கோ… அம்மா சூரியா அவனை
அழைத்தாள் அவன் கண்டுகொள்ளாது தனது தேடலில் மூழ்கியிருந்தான். குட்டி என்பது ரோசனை
சிறு வயதுமுதல் குடும்பத்தில் அனைவரும் செல்லமாக அழைக்கும் பெயர்.
ரீ
ஆறப்போகுது… வந்து குடிச்சிட்டு போங்கோவன்….
வாறனம்மா..
கொஞ்சம் இருங்களன்… அதுக்குள்ள அவவுக்க அவசரமா…கிடக்கு…
மீண்டும்
ஒரு தடவை சூரியா அவனை அழைத்தாள்
கொஞ்சம்
கத்தாம இருங்களன் வாரனெண்டுதானே சொல்லுறன்…. என்று அதட்டலாக கூறிவிட்டு தனது தேடலைத்
தொடர்ந்தான்.
சிவப்பி…
சிவப்பி……
அப்பிடி
என்னத்தத்தான் விடியக்காத்தால தேடிக்கொண்டிருக்கிறானோ…. எனக்கு நிறைய வேலையிருக்குது…
நீங்க என்னென்டாலும் செய்யுங்கோ… என்று கூறிக்கொண்டு தனது மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினாள்
சூரியா.
அரிசியை
கழுவி உலையில் போட்டாள் சூரியா. அன்று வீட்டில் அதிகம் பேர் அக்காவின் குடும்பம், தங்கையின்
குடும்பம் என்று ஆட்கள் அதிகம் வீடு கலகலவென்று இருந்தது. சூரியாவின் அம்மாவும் பூவரசங்குளம்
காணியில் இருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இன்று எல்லோருக்கும் மதிய சாப்பாடு
இங்குதான். அதனால் தான் அவசர அவசரமாக காலை வேளைக்கே எழும்பி ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொருவராக
செய்யத் தொடங்கியிருந்தார்கள்.
தேடித்
தேடி களைத்துப்போன ரோசன் வீட்டின் கொல்லைப்புறமாக சில பேர் கதைத்துக் கேட்கும் சத்தம்
கேட்கவே அந்தப்பக்கமாக பார்த்து வரலாம் என்று சென்றான்.
அங்கு
சென்றவன் சிறிது நேரத்தில் மீண்டும் வந்து முன் படிக்கட்டில் அமர்ந்து ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தான்.
அவனது அழகான முகம் கறுத்து ஏக்கம் கலந்த முகமாக குழம்பிப்போய் மிகவும் சோர்வாக காணப்பட்டான்.
அவனுடைய
மனக்கண்முன் முதல் நாள் மாலை இருந்த மகிழ்ச்சியும் சந்தோசமும் ஒட்டுமொத்தமாக சிதறிப்போய்
காணாமலாகிவிட்டிருந்தது.
அன்றைய
தினத்திற்கு முந்தய நாள் அவனுடைய அம்மம்மா பூவரசன்குளம் காணியில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக
அங்கு வந்திருந்தாள். வரும்போது தோட்டத்திலிருந்து சில மரக்கறி மற்றும் பழ வகைகளையும்
எடுத்து வந்திருந்தாள். அத்தோடு கூடவே கொழு கொழு என்று நன்கு கொழுத்துப் போயிருந்த
சாவல் ஒன்றையும் கொண்டுவந்திருந்தாள்.
எல்லாவற்றையும்
சூரியா இங்க வா… என்று சூரியாவை அழைத்து இந்தா காணியில இருந்து கொண்டு வந்தனான்… மரக்கறி
சிலத நாளைக்கு சமையலுக்கு எடுக்கலாம் தானே… என்று அவளிடம் கொடுத்தாள். அத்தோடு அந்த
பழ வகைகளையும் கொடுத்து இதில பழங்கள் கொஞ்சம் இருக்கு… இப்ப சிலத வெட்டி எல்லாருக்கும்
சாப்பிட குடுத்திட்டு மற்றத நாளைக்கு வைக்கலாம்… என்று கொடுத்தாள்.
சூரியா
அவை அனைத்தையும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு உள்ளே சென்று வைத்துவிட்டு அடுக்களைப்பக்கம்
தேனீர் வைக்க போக ஆயத்தமாக சூரியா… சூரியா…. என்ற தாயின் குரல் மீண்டும் கேட்க திரும்பவும்
வந்தாள்.
இந்தா
இதை கொண்டு போய் நல்லா கட்டி வச்சுப்போட்டு…. நல்லா சாப்பாடு போட்டு விடு… நாளைக்கு
மதியம் சமையலுக்கு எடுக்கலாம்… என்று கூறி கொண்டு வந்திருந்த சாவலையும் அவளிடம் கொடுத்தாள்.
அங்க
இருந்து இதையும் காவிக்கொண்டு வந்தனீங்களா… எப்பிடி இவ்வளவு தூரம் கொண்டு வந்தீங்களோ…
உங்களுக்கு வேற வேலையில்லயா… நாளைக்கு இங்க ஏதாச்சும் வாங்கலாம்தானே… என்று கூறிக்கொண்டு
உள்ளே சென்றாள்.
குமார்…
இங்க பாருங்களன் அம்மா நாளைக்கெண்டு சாவல் ஒண்டு கொண்டு வந்திருக்கிறா…
குமார்
வந்து சாவலைப் பார்த்துவிட்டு நல்ல உருப்படிதான்… ஒரு கட்டு கட்டலாம் நாளைக்கு…சரி
கொண்டுபோய் அங்க மரத்தில வடிவா கட்டி வையுங்க… நாளைக்கு காலையில பாப்பம் என்று கூறிக்கொண்டே
குளியலறைக்குள் நுளைந்தான்.
இதைக்கண்ட
ரோசன் ஓட்டமாய் ஓடி வந்து அந்த சாவலை அம்மாவிடம் இருந்து பறிக்க முயன்றான். சூரியா
என்ன செய்யிறீங்கள்… அது கொத்திப்போடும் விடுங்க கொண்டே கட்டி வைப்பம்… என்று கூறிக்கொண்டு
முன்னால் இருந்த ஒரு சிறிய தூணில் கயிற்றால் கால்களை கட்டிவிட்டாள்.
ரோசனுக்கு
கொள்ளை சந்தோசம். இப்படி கொழுத்த கோழியை இதற்கு முன் அருகாமையில் கண்டதில்லை. அவன்
அதன் அருகே போய் அதனோடு கதைத்துக் கதைத்து விளையாடத் தொடங்கினான். அதற்கு அரிசி, மிக்சர்,
கடலை பருப்பு என்று கண்டதெல்லாம் மாறிமாறி எடுத்து வந்து கொடுத்து சாப்பிட போட்டுக்கொண்டிருந்தான்.
அவர்கள் வீட்டு நாய் அந்த சாவலுக்கு அருகில் வந்து ஒரு உறுமல் விட அதையும் துரத்திவிட்டு
தொடர்ந்து அதனோடு விளையாடிக் கொண்டிருந்தான்.
அது
நன்கு கொழுத்து இருந்ததால் மிக அழகாகவும் இருந்தது. அதன் முதுகை தடவிக்கொடுத்து விளையாடிக்கொண்டிருந்த
அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
ஏய்..
உனக்கு ஒரு பேர் வைக்க வேணுமே…. அப்பதானே கூப்பிட லேசா இருக்கும்…. என்ன பேர் வைக்கலாம்….
தலையை சொறிந்து சொறிந்து யோசித்தான்… பல பெயர்கள் அவன் மனதில் வந்து போயின எதுகும்
திருப்தியளிக்கவில்லை. தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தான்.
திடீரென
ஒரு நல்ல பெயர் அவன் மனதில் தோன்றியது. அது சிவப்பும் கறுப்பும் கலந்த சாவல். சிவப்பு
அதிகமாகவே காணப்பட்டது. அதனால்தான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது.
ஏய்
நீ சிவப்பு தானே… அதனால… நான்…. உனக்கு…. சிவப்பி எண்டு பேர் வக்கிறன் சரியா… இனி சிவப்பி
எண்டுதான் கூப்பிடுவன் என்ன… சரியா… சொல்லு என்று கேட்டுக்கொண்டே சிவப்பி… சிவப்பி..
என்று பலமுறை பெயரை சொல்லி கொண்டாடினான்.
அம்மா…
அம்மா… என்று சூரியாவை அழைத்தான்
அவளும்
பதிலுக்கும் என்ன குட்டி… என்றாள்
நான்
இதுக்கு சிவப்பி எண்டு பேர் வச்சிட்டன்… இனி சிவப்பி எண்டு தான் கூப்பிடோணும் சரியா…
ஆ…
சரி… சரி… வடிவான பேர்…. என்று கூறிக்கொண்டே தன்னுடைய வேலைகளில் மூழ்கிப்போனாள் சூரியா.
ரோசனுக்கு
அது ஆணா பெண்ணா என்ற வித்தியாசம் கூட தெரியவில்லை. அந்த பிஞ்சு வயதிற்கு இன்னும் அந்த
விளக்கம் போதாமல்தான் இருந்தது. அதன் தலையை தடவுவதும், நெஞ்சோடு அணைத்து முத்தமிடுவதும்,
முதுகை தடவி விடுவதும் என்று அதனோடு தொடர்ந்து செல்லம் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தான்.
அந்த சொற்ப நேரத்தில் சிவப்பியும் ரோசனோடு மிகவும் நெருக்கமாகிவிட்டிருந்தது. அவனோடு
சேர்ந்து அதுவும் விளையாட தொடங்கியிருந்தது.
இப்படியே
நேரம் போனது கூட தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்த ரோசன் தயார் அழைக்கும் சத்தம் கேட்டு
தன்நிலைக்கு வந்தான்.
குட்டி…
வாங்கோ நல்லா நேரம் போயிட்டுது… வந்து மேல கழுவிக்கொண்டு சாப்பிட்டிட்டு தூங்குங்கோ…
நாளைக்கு காலைல வெள்ளண எழும்பவேணுமெல்லோ…
வாரனம்மா…
இன்னும் கொஞ்ச நேரம் சிவப்பியோட விளையாடிற்று வாறன்… இப்படியே அடுத்த அரை மணி நேரமும்
போனது தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தவனை சூரியா வந்து வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு
சென்று மேல் கழுவ வைத்து பின்னர் இரவு உணவையும் போட்டு சாப்பிட வைத்தாள்.
அப்பொழுதும்
தான் சாப்பிடும் உணவில் அவ்வப்போது வந்து அந்த சாவலுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டை
போட்டு சாப்பிட வைத்துக்கொண்டே தானும் சாப்பிட்டான். சாப்பிட்டு முடிந்ததும் திரும்பவும்
அந்த சாவலுடன் விளையாட சென்றவனை மீண்டும் வலுக்கட்டாயமாக இப்ப தானே குளிச்சிட்டு வந்தனீங்கள்…
திரும்ப வெளிய போய் ஊத்தையில விளையாட வேண்டாம் இப்ப போய் படுங்கோ… என்று வலுக்கட்டாயமாக
அழைத்துச் சென்றாள்.
அப்ப
நாளைக்கு காலம விளையாட விடவேணும் சரியா… தாயிடம் கேட்டான் ரோசன்
ஓமோம்
நாளைக்கு காலம விளையாடலாம் குட்டி இப்ப போய் படுங்க… என்று கூறி படுக்கையை சரி செய்து
அவனை படுக்க வைத்தாள்.
ரோசன்
அந்த நிகழ்வுகளுடனும் காலையில் சிவப்பியோடு விளையாடும் கனவுகளுடனும் அப்படியே அயர்ந்து
தூங்கிவிட்டான்.
இப்போது
நேற்று இரவு அவ்வளவு நேரம் விளையாடி முடித்து காலையில் விளையாடுவோம் என்ற கனவுகளுடன்
தூங்கிய அவன் அதே நினைவுகளோடுதான் எழும்பி வந்து சிவப்பியை தேடு தேடு என்று களைத்துப்போய்
வந்து ஆழ்ந்த கவலையோடு இந்த படிக்கட்டில் அமர்ந்திருக்கிறான்.
அவனுக்கு
முன்னால் ஒரு நீளமான வரிசையில் எழும்புக்கூட்டம் ஒன்று ஊர்ந்து நகர்ந்துகொண்டிருந்தது.
தொடர்ந்து போய்கொண்டிருக்கும் அந்த எறும்புக்கூட்டம் தங்களுடன் உணவுகளை காவிக்கொண்டு
சென்றுகொண்டிருந்தன. அவ்வப்போது எதிர் திசையில் வரும் எறும்புகள் சில எறும்புகளிடம்
காதில் ஏதோ சொல்லிச்சொல்லிச் செல்வது போலவும் கொஞ்சிக்குலாவிச் செல்வது போலவும் இருந்தது.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோசன் மனதிற்குள் அவை எவ்வளவு அமைதியாக உணவை எடுத்துக்கொண்டு
ஒற்றுமையாக செல்கின்றன என்பதை நினைத்தாலும் அதனை பெரிதாக ரசிக்க முடியாதபடி இனி சிவப்பி
இல்லையே என்ற ஆதங்கம் அவனை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.
குட்டி….
குட்டி…. என்ன நீங்க இன்னும் ரீயையும் குடிக்காம அப்பிடி என்னதான் யோசிச்சுக்கொண்டு
இருக்கிறீங்க… ரீ நல்லா ஆறிப் போச்சு… கெதியா வாங்கோ… என்று கத்தி அழைத்தபடியே என்னதான்
நடக்கிறதென்று பார்க்கும்பொருட்டு வெளியே வந்த சூரியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரோசனின் முகத்தையும் அவனிருந்த நிலைமையையும் பார்த்து என்ன குட்டி… அப்பனுக்கு என்னாச்சு…
என்று கேட்டபடியே அவனருகில் சென்று அவனது தலையை வருடினாள் சூரியா.
அவன்
அவளது கையை தட்டி வீட்டு மிகுந்த கோபத்தோடு அவ்விடத்தை விட்டு எழும்பி செல்ல முயற்சித்தான்.
சூரியாவுக்கு
ஒன்றும் புரியவில்லை. என்னப்பன்… அப்பிடி என்னதான் ஆச்சு… விடிய வெள்ளனயே.. அதுகும்
பெருநாள் நாத்து இப்பிடி ஒடிஞ்சுபோய் இருக்கிறீங்க… என்னண்டு சொல்லுங்கோவன்…. சொன்னாத்தானே
அம்மாக்கு தெரியும்… என்று கூறி மீண்டும் அவன் தலையை வருடி அவனை தன் அருகில் இழுத்து
அணைத்தாள்.
நீங்க
போங்க அங்கால… நான் எவ்வளவு ஆசையா… இருந்தன்… சிவப்…. என்று கூற வெளிக்கிடும்போது சாதுவாக
விக்கல் வரத் தொடங்கியது. அப்படியே அவள் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு கொல்லைப்புறமாக
சென்றான். அவளும் செய்வதறியாது எதுகுமே புரியாத புதிராக இருக்க அவனுக்கு பின்னால் இழுபட்டுக்கொண்டு
சென்றாள்.
அப்படியே
இழுத்துக்கொண்டு போய் நிற்கவும் ரோசனின் தந்தை குமார் அந்த சாவலின் கழுத்தில் சுருக்குப்போட்டு
உரிப்பதற்கு தொங்க விடவும் சரியாக இருந்தது. அப்போது சூரியாவின் அக்காவும் அங்கே என்ன
சாவலை உரிச்சாச்சா… நல்ல சதை இருக்குமென்ன… என்று கேட்டுக்கொண்டு வந்து பார்த்துவிட்டு
திரும்பிச் சென்றாள்.
சாவல்
ஒரு தடவை கால்களை உதறியது. என்னம்மா… இதுக்கென்ன… இப்ப உரிச்சிட்டா தானே நேரத்துக்கு
சமைக்கலாம்… இண்டைக்கு சமைக்கத்தானே அம்மம்மா அத கொண்டு வந்தவ… என்று சூரியா சொல்லவும்
சிவப்பி காலை உதறியதை பார்த்துக்கொண்டிருந்த ரோசனுக்கு கண்கள் முட்டிக்கொண்டு நீர்
வெளியே வர தயாராகியது.
நீங்க
போங்க அங்கால…. நான் எவ்வளவு ஆசையா விளையாடிக்கொண்டிருந்தன்… என்ட பிறென்ட் சிவப்…
என்று கூறும்போதோ கண்களில் இருந்து கண்ணீர் பொலு பொலுவென்று கொட்டத் தொடங்கியது.
அதைப்
பார்த்த சூரியாவிற்கு கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை… என்ன செய்வதென்று தெரியாது
குழம்பிப்போனவள் அவளை அறியாமலே கொஞ்சம் பொறுங்கப்பா… அத அவுட்டு விடுங்க… டக்கெண்டு
அவுளுங்க… என்று சொல்ல குமாரும் செய்வதறியாது உடனே அந்த சாவலை அவுட்டு விட்டான்.
அவுட்டு
விட்டதும் சாவல் நிலத்தில் இருந்து கழுத்தை உதறி தன்னை சுதாகரித்துக்கொண்டது. உடனே
அதை தூக்கிக்கொண்டு ஓடினான் ரோசன். கொண்டு சென்று அதன் கழுத்தை தடவிவிட்டுக்கொண்டிருந்தான்.
அப்போது
வெளியே இருந்து சூரியா என்ன… கோழி வெட்டியாச்சா… என்று கேட்டுக்கொண்டே சூரியாவின் அம்மா
உள்ளே நுளைந்தாள். அவளைக் கண்டதும் சிவப்பி உதறிக்கொண்டு ஓட்டமாய் ஓடிச் சென்று அவளை
துரத்தி துரத்தி கொத்தத் தொடங்கியது. அவளுக்கு காலிலே காயம் வந்து இரத்தம் சொட்டத்
தொடங்கியது. சூரியாவின் அம்மாவைத் தொடர்ந்து அக்காவும் என்ன ஆச்சு… எவ்வளவு இறைச்சி
வந்திருக்கு… என்று கேட்டுக்கொண்டு வர அவளையும் துரத்தித் துரத்தி கொத்தத் தொடங்கியது
சிவப்பி.
இதைப்
பார்த்து சிரிக்கத் தொடங்கிய ரோசனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கொக்களம் கொட்டி
சிரி சிரியென்று சிரித்தான்.
குமார்
உடுப்பை மாட்டிக்கொண்டு வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே வந்து
அதன் இயக்கி விசையை உதைத்து இயக்கினார். அப்படியே அவனுக்கு பின்னால் வந்த சூரியா ஒரு
நாலு கிலோ வாற மாதிரி வாங்குங்க…. எல்லாருக்கும் இண்டைக்கு இங்க சாப்பாடுதானே… எல்லாரும்
கோழிக்கறி சாப்பிடுவாங்கதானே…. ஒருவரும் விரதமும் இல்லை… என்று கூற குமாரும் சரி..
சரி… என்று கூறி தலையை ஆட்டிக்கொண்டு சிவப்பி தனது மாமியாரை துரத்துவதைப் பார்த்து
வாய்க்குள் சிரித்துக்கொண்டு புறப்பட்டான்.
சூரியாவும்
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம்…. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு மீண்டும்
அடுக்களைப்பக்கம் சென்றாள். ரோசன் மலர்ந்த முகத்தோடு சிவப்பியோடு விளையாடிக்கொண்டு
அம்மம்மாவை நோக்கி சிவப்பியை ஏவிவிட்டுக்கொண்டிருந்தான். அவனது முகத்தில் இருந்த எல்லா
குழப்பமும் காணாமல்போய் இருந்தது. இனி அவன் உலகம் சிவப்பியோடு தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக