என்னால் எழுதப்பட்ட தன்முனைக் கவிகள் சிலவற்றை உங்கள் ரசனைக்காக இங்கு பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டல்களையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
1
இருவரும் பயணிக்க வேண்டிய
தொலை தூரப் பயணம்
உனக்கு கிடைத்தது பயணச்சீட்டு
நினைவுகளோடு வரும்வரை நான்
2
தையல்ஊசி விற்கிறான்
பாதையோரத்து வியாபாரி
தன் காற்சட்டை கிளியலை
கையால் மறைத்தபடி
3
கோமணத்தோடு உழவன்
கள மேட்டில் களைபறிக்க
கம்பத்தில் கத்தரி வெருளி
முழு ஆடைகளோடு
4
அலை அலையாய் கவிகள்
திரண்டு வருகிறது மனதில்
ஒப்புவிக்க முனைகையில்
எங்கோ சென்று மறைகிறாய்
5
அடித்து உடைத்து செதுக்கப்பட்டு
உருப் பெற்ற கருங்கற்பாறைகள்
புகைப்படக் கருவிகளுக்குள்
அழகுச் சிலைகளாக
6
களத்திலே பகல் முழுவதும்
காளையர் சுமந்த கருவிகளை
மாலையில் தான் காவிவருகிறான்
சுமைகளோடு உழவன்
7
புத்தபிரான் போதனைகள்
ஆன்ம அமைதி ஈந்தது
அவன் வழி வந்தசிலர்
புனிதம் கலைத்தனர்
8
கவிதைகள் புனைந்தன
உன் கண் அசைவுகள்
கற்றுக் கண்டுணர்வதற்குள்
நிறுத்திவிட்டாய் அசைவுகளை
9
கிராமத்து நீரேரியில்
நீந்தி விளையாடுகிறது
பௌர்ணமி இரவின்
நிலா வெளிச்சம்
10
நீண்ட நாட்களின் பின்
நினைவால் மீட்டிய என்
வாழ்க்கை புத்தகத்தில் எத்தனை
நறுமணம் வீசும் வாசமலர்கள்
11
மாலையில் வாடிவிடுவோம்
என்ற மனக்கவலையற்ற
மலர் மாலையை அலங்கரிக்கும்
வாசனை மலர்கள்
- நரேஸ் நியூட்டன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக