பிள்ளை மனம் கலங்குதென்றால்…..
மெல்ல
சூரியன் தன் கதிர்களை பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். வானம் செக்கச் செவேலென சிவந்து
இருந்தது. முகில் கூட்டங்கள் அவசர அவசரமாக சூரியக்கதிர்களை கடந்து சென்றுகொண்டிருப்பது
அவற்றின் நிழல் பூமியில் படுவதில் தெரிந்தது.
அன்று
தீபாவளி பண்டிகை நாள். சூரியாவின் வீட்டில் எல்லோரும் காலை நேரகாலத்தோடு எழும்பிவிட்டார்கள்.
தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும் எல்லா வீடுகளிலும் கொண்டாட்டம் தடல்புடலாகத்தானே
இருக்கும். அதே தடல்புடலும் கலகலப்பும் தான் சூரியாவின் வீட்டிலும்.
முக்கியமான
விடயம் என்னவென்றால் கொரோனா என்ற கொடிய நோய் அரக்கன் காரணமாக கடந்த வருடம் தீபாவளிப்
பண்டிகையை யாருக்குமே கொண்டாட கிடைக்கவில்லை. அந்த உலக நாடுகள் அனைத்தையும் பதம் பார்த்து
தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த தருணம். அது நம் நாட்டையும் பாரிய அளவில் பதம்
பார்த்துக்கொண்டிருந்தது.