பெண் இலக்கிய படைப்பாளினி பத்மா சோமகாந்தன்
அறிமுகம்
“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கொப்ப தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர்களாக வலம் வந்து பல படைப்புக்களை தமிழ் வளர்ச்சிக்காய் தந்த பல எழுத்தாளர்கள் பற்றி யாம் அறிவோம். இவர்களுட் பலர் இவ்வுலகை நீத்தோராகிவிட்ட அதேவேளை இன்னும் பலர் வாழும் எழுத்தாளர்களாக பல்வேறு விடயங்களை படைத்து தமிழுலகிற்கு ஈந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு படைப்புலகில் இலுக்கும் எழுத்தாளர்களுள் பலர் பெண் படைப்பாளிகாளாக மிகச்சிறந்த பல படைப்புக்களை தந்து சாதனை படைத்திருக்கிறார்கள் பலர் சாதனைகளை இன்னமும் படைத்து வருகின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சாதனை படைத்து வரும் பெண் படைப்பாளர்களுள் மிகப்பிரபல்யமான அதேவேளை தமிழ் உலகால் வியந்து பராட்டப்படும் மற்றும் கௌரவிக்கப்படும் தனித்துவமான ஒரு பெண் படைப்பாளிதான் ‘பத்மா சோமகாந்தன்’
ஜூலை மாதம் 14ஆம் திகதி 2020 வரை தனது படைப்பாற்றல் ஆளுமையை தமிழ் உலகில் நிலைநிறுத்தி தொடந்து பல படைப்புக்களை தந்து கொண்டிருந்த திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் இன்று இந்தக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் தருவாயில் (17 ஜூலை 2020) எம்மிடையே இல்லை. இவருடைய இருப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவரது பேனா முனையிலிருந்து பல்வேறு வடிவங்களாக வெளிவந்த எழுத்தாக்கங்களிலிருந்து அறியமுடியும். ஆனால் இயற்கையுடன் ஒவ்வொரு உயிரும் அனுசரித்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது ஆகவே இவருடைய மறைவும் மனதகுலத்தின் சக்திகளுக்கு அப்பாற்பட்டதே.
குடும்பப்பின்னணி
திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் வைகாசி மாதம் 3ஆம் திகதி 1934ஆம் ஆண்டு உலகு வியக்கும் தமிழர் எம் தாயக மண்ணில் அவதரித்தார். இலங்கையின் வடமாணத்தின் பிரபலமான மாவட்டமாகிய யாழ்ப்பாண நகரினை அண்மித்த வண்ணார்பண்ணை எனும் ஊர் தான் இவரை எழுத்துலகிற்கு தந்த மண். வண்ணார்பண்ணையில் ஓட்டுமடம் வீதி என அழைக்கப்படும் வீதியிலேயே இவரது பிறப்பிடம் அமைந்திருக்கிறது. இவரது தந்தை பஞ்சந்தீஸ்வரக் குருக்கள் தாய் அமிர்தாம்பிகை அம்மாள் ஆவர். பஞ்சந்தீஸ்வரக் குருக்கள் அமிர்தாம்பிகை அம்மாள் தம்பதிகளுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் அவர்களுள் பத்மா சோமகாந்தன் நான்காவது மகள். முதலாவதாக ஆண்மகனும் அதற்கடுத்து அனைவரும் பெண் பிள்ளைகளுமாவர். இவருடைய இயற்பெயர் பத்மா ஆயினும் பாடசாலையில் பத்மாம்பாள் என்றே அழைத்தனர் எனவும் அதற்கு காரணம் பொதுவாக ஐயர் குடும்பத்துப் பெண்களை அம்பாள் என அழைக்கும் வழக்கம் காலாகாலமாக சமூகமட்டத்தில் பொதுவாக இருந்து வந்ததே என தெரியப்படுத்துகிறார். இவர் பிரபல எழுத்தாளர் பிரம்மஸ்ரீ நாகேந்திரக் குருக்கள் சோமகாந்தன் அவர்களை மணமுடித்து இருவரும் இனிதே இல்லறம் நடாத்தி வந்தனர். கணவர் இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் பணியாற்றியவர். இவரது துணைவரான நாகேந்திரக் குருக்கள் சோமகாந்தனும் ஒரு பிரபல எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். இவர் 2006ஆம் ஆண்டு இயற்கையெய்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இல்லற வாழ்வின் நற்பேறாக இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் கிடைத்தனர். இவருடைய தாயாரின் மூத்த சகோதரர் பிரம்மஸ்ரீ சபாரத்தின ஐயர். இவரும் ஒரு எழுத்தாளர் காரை நகரிலிருந்து ‘கலிகால தீபம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர்.
கல்வியும் தொழிலும்
திருமதி பத்மா சோமகாந்தன் ஆரம்பக் கல்வியை யாழ். இந்துத் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். இங்கு ஐந்தாம் வகுப்புவரை பயின்ற இவர் அதன் பின்னர் இந்து மகளிர் கல்லூரியில் தனது சகோதரிகளுடன் சேர்ந்து இணைந்து அடுத்த கட்ட கல்வியைத் தொடர்ந்தார். உயர் கல்வி கற்பதற்கு உறவினர்கள் மத்தியலிருந்து பெரும் எதிர்ப்பு வந்தபோது அவருடைய தாயார் முழுமையான ஆதரவை வழங்கி படிப்பை தொடர வைத்தார். இவரது சமூக கட்டமைப்பில் ஏனைய பெண்களுடன் ஒப்பிடுகையில் இவரது தாயார் சற்று வித்தியாசமான ஒரு புதுமைப்பெண் ரகத்தை சேர்ந்தவர் அதனால் பிள்ளைகளுக்கு முழுமையாக சில சுதந்திரங்களை வழங்கியிருந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியை கற்கும்போது ஐயரம்மாவிற்கு படிப்பு எதற்கு என்றவாறான சமூகத்தின் எதிர்ப்பு வசைபாடலுக்கு முகம்கொடுத்த அனுபவத்துடனேயே தனது கல்வியைத் தொடர்ந்தார், அது மட்டுமன்றி அந்தக் காலப்பகுதியில் நிலவிய பெண்கள் கல்வி கற்பதற்கு எதிரான சமூகத்தின் ‘மற்ற சமூகத்தவருடன் சமமாக இருந்து கற்பதா’ என்ற குலபேத எதிர்ப்புக்கும் முகம்கொடுத்து மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே கல்வியைத் தொடர்ந்தார். படிப்பை முடித்துக்கொண்டு ஆசிரியப் பணியைத் தனது விருப்பு மிக்க தொழில் தேர்வாக தேர்ந்தெடுத்தார். குறிப்பிட்ட காலங்கள் ஆசிரியராக பணியாற்றிய இவர் பணிநிலை உயர்வு பெற்று நல்லூர் சாதனா கல்லூரியினதும் பின்னர் யாழ். மங்கையற்கரசி வித்தியாலயத்தினதும் அதிபராகப் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு பணிநிலை உயர்வுடன் மாற்றலாகி யாழ் கல்வி திணைக்களத்தில் யாழ்ப்பாணத்தின் உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றினார். இவ்வாறு தனது பணி நிலையைத் தொடர்ந்த இவர் தனது பணி நிலை ஓய்வினைத்தொடர்ந்து கொழும்பு நகரிற்கு சென்று அங்கே தனது வாழ்க்கையை தொடர்ந்தார்.
கலையுலகப் பிரவேசமும் சாதனைகளும்
இவர் 1951ஆம் ஆண்டு பாடசாலையில் கல்வி பயின்றுகொண்டு இருந்த காலப்பகுதியில் அப்போது இலங்கையில் பிரபலமான தமிழ் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்த ‘தினகரன்’ பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் தான் எழுதிய ‘இரத்தபாசம்’ என்ற சிறுகதையை அனுப்பி பங்குபற்றியதன் மூலம் கலையுலகத்திற்குள் எழுத்தாளராக முதலடி எடுத்து வைத்தார். இந்த சிறுகதையை நேரடியாக தனது இயற்பெயரில் எழுதாமல் ‘புதுமைப் பிரியை’ என்ற புனை பெயரிலேயே எழுதியிருந்தார். அதேவேளை இந்த சிறுகதைப் போட்டியில் இவர் முதற்பரிசையும் பெற்றுக்கொண்டார். இவரோடு இதே போட்டியில் பங்குபற்றியிருந்த எழுத்தாளர் டானியல், எழுத்தாளர் டோமினிக் ஜீவா ஆகியோர் இரண்டாம் மூன்றாம் நிலைகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவரது முதலாவது படைப்பின் மூலம் கிடைத்த வெற்றி மேலும் உத்வேகத்தை தரவே தொடர்ந்து தமிழ் எழுத்துலகில் பல்வேறு விதமான படைப்புகளை வழங்கி தனக்கென ஒரு இடத்தை தேடிக்கொள்வதில் அம்மையார் முனைப்புடன் செயற்பட்டதோடு அதனை நிலை நாட்டி, சாதிக்கவும் செய்தார்.
தனது சிறுவயதிலேயே வாசிக்கும் ஆர்வம் தனக்கு அதிகமாக இருந்தமையால் கல்கி, திராவிட நாடு மற்றும் ஆனந்த விகடன் போன்ற இதழ்களை ஆவலுடன் படிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அத்தோடு துணுக்குகள் கேலிச் சித்திரங்கள் போன்றவை தனது மனதை ஈர்த்ததால் நூல்களை தேடி வாசிக்கும் பழக்கம் இன்னும் அதிகரித்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும் “அவற்றை வாசிக்கும் போது மனதுக்குள் பல்வேறு வகையான புதிய சிந்தனைகள் உலாவரும் அந்த சிந்தனைகளையும் நாம் எழுத்துருவாக்கி புதிய படைப்புகளைத் தரலாமே என்ற ஆர்வம் தூண்டப்படும்” அவ்வாறு தூண்டப்பட்ட ஆர்வமே தன்னை தொடர்ந்து எழுதத்தூண்டியிருந்தது என தனது கலையுலக பிரவேசத்தை பற்றி குறிப்பிடும்போது தெரிவிக்கிறார்.
பத்மா சோமகாந்தன் அவர்கள் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், பெண்ணியம் சார்பான ஆய்வுகள் சமயம் சார்பான ஆக்கங்கள் மற்றும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் போன்றவற்றில் முனைப்புடன் நாட்டம் காட்டி பல ஆக்கங்களைப் படைத்தார். இவர் எழுத்தாக்கற் படைப்புகளோடு மட்டும் தன்னை மட்டுப்படுத்தி விடாமல் மேடைப் பேச்சுக்களிலும் பங்குபற்றி தனது பேச்சாற்றலை வெளிப்படுத்தும் பொருட்டு பல பேச்சரங்குகளில் கலந்து பல்வேறு தலைப்புகளில் சொற் பொழிவாற்றி பேச்சுத்திறணையும் இலக்கிய உலகிற்கு அறியத் தந்தார். தமிழகத்தில் திமுக வின் எழுச்சி, அறிஞர் அண்ணாவின் பேச்சு கலைஞர் கருணாநிதியின் எழுத்து போன்றவையும் இவரைப் பாதித்திருந்ததாகவும் ஆதலால் இவருடை மேடைப் பேச்சுக்களில் அறிஞர் அண்ணாவின் சாயல் கலந்திருக்கும் எனவும் அதன் காரணமாக மேடைப்பேச்சுக்களில் கலந்துகொள்ள செல்லும்போது அண்ணாதுரை செல்கிறார் என தன்னை ரசிகர்கள் மறைமுகமாக குறித்துரைப்பதுண்டு எனவும் குறிப்பிடுகிறார். தமிழரசுக் கட்சியின் மேடைகளில் அந்தக்காலங்களில் இவரது பே;சசுக்கள் இடம்பெறும் அந்த பேச்சைக் கேட்பதற்கென்றே ஒரு பெரும் கூட்டம் வரும் காரணம் ஒரு பெண் அதுவும் பிராமணப் பெண்ணின் பேச்சு என்பதே.
இவ்வாறு இவர் பேசிய கூட்டங்களில் தமிழரசுக் கட்சியுடனான அரசியல் ஈடுபாடு காரணமாக கலந்துகொள்ள வந்தவர்தான் இவரது கணவர் சோமகாந்தன். அவர் பிராமண குலத்தை சேர்ந்தவராயினும் முற்போக்கு சிந்தனைகளை உடையவர் ஆகையால் இருவருக்கும் மனம் ஒத்துப்போக திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர் மீது சோமகாந்தனுக்கு விருப்பு ஏற்பட அதனை இவரிடம் தெரிவித்திருக்கிறார் அவரும் சோமகாந்தன் தங்கள் சமூகத்தை சார்ந்தவராகையால் தடங்கல்கள் ஏற்பட வாய்பில்லை என்ற நம்பிக்கையோடு பெற்றோரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ள அவரும் அவ்வாறே பெற்றோருடன் கலந்து பேசி ஏற்படுத்தப்பட்டதே இவர்களது திருமண பந்தம். ஏனைய காதலர்கள் போல் நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் பெற்றோரிடம் தெரியப்படுத்தி திருமணபந்தத்தில் இணையும் காதல் ஜோடிகள் போலல்லாது சம்பிரதாய பூர்வமான ஒரு சாதாரண திருமணமாகவே இவர்களது திருமணத்தை எடுத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இசைத்துறையிலும் நடனத்துறையிலும் ஆர்வம் இருந்தபோதும் அவற்றை முழுமைப்படுத்த இவரால் முடியவில்லை. நாட்டியத் துறையில் சோபிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் தனது சகோதரியுடன் சேர்ந்து பயிற்சிக்கூடம் ஒன்றில் நடனப்பயிற்சியை ஆரம்பித்தார். அங்கு நடனக் கலையை பயில ஆரம்பித்து பயிற்சியின் சில கட்டங்களை கடந்து செல்வதற்குள் பயிலக அரங்கிலே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப்படம் இப்பயிற்சியை தொடர்வதற்கு இவருக்கு மிகப்பெரிய தடையாக அமைந்ததாகவும் இதற்கு அக்காலத்தில் நிலவிய பெண்களுக்கெதிரான இறுக்கமான சமூக கட்டமைப்பே காரணமெனவும் குறிப்பிடுகிறார். தினக்குரல் பத்திரிகையின் ‘சாதனைப் பெண்’ எனும் பகுதியில் படைப்புக்களை வெளியிட்டு வந்தமை இவரது மற்றொரு சிறப்பம்சமாகும். அத்தோடு நிறுத்திவிடாது இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காலாண்டிதழாக பெண்கள் சார்பான விடயங்களைத் தாங்கி வெளிவரும் ‘பெண்ணின் குரல்’ எனப்படும் ஒரு முற்போக்கு சஞ்சிகையின் ஆசிரியராக 11 ஆண்டுகள் செயலாற்றிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இலங்கையிலிருந்து வெளிவரும் ‘சொல்’ எனும் சஞ்சிகையின் கௌரவ ஆசிரியராக சிலகாலம் செயற்பட்டதோடு அதில் சில படைப்புகளையும் எழுதிவந்தார். அம்மையார் அவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று பல்வேறு இலக்கிய அமர்வுகளில் கலந்துகொண்ட அநுபவத்தையும் பெற்றிருந்தார்.
பத்மா சோமகாந்தன் அவர்களுடைய படைப்புக்கள் அனேகமாக பெண்ணியம் மற்றும் பெண் விடுதலை சார்பானதாகவே வெளிவந்தன. அவ்வாறான படைப்புக்களுக்கே இவர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இவ்வாறு பெண்ணியம் சார்பான படைப்புக்களில் நாட்டம் கொள்வதற்கு சிறுபராயத்திலும் கல்வி கற்கும் காலத்திலும் சமூகத்தில் நேரடியாகக் கண்டுணர்ந்த இறுக்கமான சமூகக் கட்டமைப்புக்களும் கட்டுப்பாடுகளுமே காரணம் என கூறுகின்றார். பெண் கல்வி கற்பதில் அக்காலப்பகுதியில் சமூகமட்டத்தில் இருந்த தடைகள், பெண்கள் மீதான சீதன கெடுபிடிகள், பெண்கள் வேலை செய்வதில் சமூகத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பு குடும்பங்களுக்குள்ளும் சமூகத்திலும் ஆண் ஆதிக்கத்தன்மை மற்றும் குடும்பங்களில் ஆண்களின் மதுப்பாவனை காரணமாக பெண்கள் அனுபவித்த துன்பங்கள் போன்ற பல விடயங்கள் இவரது இலக்கியப் படைப்புகளின் உருவாக்க சிந்தனைகளில் ஆழமான பாதிப்பை உண்டுபண்ணியதே இவ்விடயங்களை முதன்மைப்படுத்தியதான படைப்புக்களை அதிகம் எழுதுவதற்குக் காரணமாக அமைந்ததாக தனது கருத்தை பொதுவாக தெரியப்படுத்துவதோடு அவருடைய எழுத்துக்கள் மூலமாகவும் தெரியப்படுத்தியிருக்கிறார்.
இவரது படைப்புக்கள்
இவர் எழுதத்தொடங்கிய 1951ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பல்வேறு தலைப்பகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார். பத்மா சோமகாந்தனின் ஆக்கங்களுள் மிகவும் முக்கியமானதும் துணிச்சல் மிக்கதுமான படைப்பு 1956இல் வெளியிடப்பட்ட ‘புத்தன் பரம்பரை’ என்ற சிறுகதை. இந்த சிறுகதை 1956இல் தமிழ் தலைவர்களால் காலி முகத்திடலில் நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை தொடர்ந்து அங்கு மற்றொரு சமூகத்தால் நாடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களைப் பின்னணியாக வைத்து அவரது சிறுபராயத்திலேயே எழுதியமைதான் மிகவும் வியப்புக்குரியதாகும்.
இவர் வெளியிட்ட தொகுப்புக்களில் மிகவும் மாண்புமிக்கதாக இவர் கருதுவது, வெவ்வேறு துறைகளில் முதன்மை நிலை வகிக்கும் 24 பெண்களை தெரிவுசெய்து அந்த பெண் ஆளுமைகள் பற்றி ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ எனும் தலைப்பில் இவரால் வெளியிடப்பட்ட நூல் என குறிப்பிடுகிறார். வெவ்வேறு துறைகளில் உள்ள பெண்களின் வெளியுலகிற்கு தெரியாமல் மறைந்திருக்கும் ஆற்றல்கள் தொடர்ந்தும் மறைக்கப்படாமல் வெளிக்கொண்டு வரப்படவேண்டும், பெண்களின் திறண்களை உலகம் நன்கு அறியவேண்டும், அவை சரியான முறையில் பதிவு செய்யப்படவேண்டும் என்பதே இந்த தொகுப்பு நூலை வெளியிட பிரதான காரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதைவிட மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் சிறார்களின் நலன் கருதி ‘Stries from Hindu Mythology’ (இந்து புராணங்களிலிருந்து கதைகள்) என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையின் நீண்ட வரலாற்றையுடைய அநேக மக்களின் அபிமானம் பெற்ற வீரகேசரி பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ‘நெஞ்சுக்கு நிம்மதி’ எனும் கேள்வி பதில் பகுதியில் வாராந்தம் எழுதியவை நூலாக வெளிவந்துள்ளது. மேலும் கொழும்பு தமிழ் சங்கத்தால் வெளியிடப்படும் ‘சங்கத் தமிழ்’ சஞ்சிகையில் பல்வேறு தமிழ் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்தார்.
இவரது எழுத்துக்களால் உருப்பெற்று வெளிவந்த மேலும் சில படைப்புக்கள்
• ஈழத்து தமிழ் பெண் ஆளுமைகள்
• நெஞ்சுக்கு நிம்மதி இந்நூல் மங்கையர் கேசரியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இவர் வழங்கிய ஆலோசனைகளை உள்ளடக்கி தொகுப்பு நூலாகவே இது வெளியிடப்பட்டது.
• ‘பக்த அனுமன் கதை’ இந்த நூல் சிறுவர்களை மனதில் இருத்தி அவர்களுக்காகவே பத்மா சோமகாந்தனால் படைக்கப்பட்ட சிறுகதை நூல்
• ‘புதிய வார்ப்புகள்’ இந்நூல் இவருடைய 11 சிறுகதைகளை உள்ளடக்கியதாக குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பெண்கள் சார்பான பல கவனத்தில் எழுக்கப்படவேண்டிய பிரச்சனைகள் அநேகமான கதைகளில் புடம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது
• ‘கடவுளின் பூக்கள்’
• ‘வேள்வி மலர்கள்’
• ‘கரும்பலகைக் காப்பியங்கள்’
• இற்றைத் திங்கள் 2013இல் வெளிவந்தது. ஈழவரலாற்றின் துயர்களை பதிவுசெய்யும் கதைகளையுடைய நூலாக இது பிரதிபலிக்கின்றது.
• பாரா முகங்கள் சில பார்வைகள் 2008இல் வெளி வந்தது. சமூக பொருளாதார அரசியல் சார்ந்த பிரச்சனைகளை ஆழமாக அலசி பதிலிறுக்கும் நூலாகவே இது கருதப்படுகிறது.
பெண்களின் குரல் என்ற சஞ்சிகையின் ஆசிரியராக சிலகாலம் இவர் பொறுப்பு வகித்த காலத்தில் அந்த சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் சில ஆசிரியர் தலையங்கங்களாகவும், கட்டுரைகளாகவும் மற்றும் சிறுகதைகளாகவும் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளிவந்த ஒவ்வொரு படைப்புக்களும் ஆக்கபூர்வமானவைகளாக இருந்த அதேவேளை சமகால நிகழ்வுகள் பலவற்றை படம்பிடித்துக் காட்டுவனவாயும் படைக்கப்பட்டுள்ளன.
எமது கருத்து, சீரளிவுக்குள்ளாகும் பெண்களின் வாழ்க்கை, தேசத்திற்கு உணவூட்டல், நியாhயம் (சட்டங்கள் சார்பான விடயங்கள்), தந்தை வழி சமூக அமைப்பின் அதிகார இல்லம் மற்றும் கமத் தொழிலில் பெண்களின் அமைப்பு போன்றவை இவரது ஆசிரியர் தலைப்பாக பெண்களின் குரல் சஞ்சிகையில் வந்த படைப்புக்களில் குறிப்பிடக்கூடிய சிலவாகும்.
பெண்களும் படைப்பு இலக்கியமும், சிறுவர் இலக்கியம், யாழ்-குடாநாட்டில் நிலவும் நீர் நெருக்கடியும் ஆணையிறவு நந்நீர்த்திட்ட அவசியமும், விடிவு எப்போது, இனி அடுத்தது என்ன, போர்ச்சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்த தொடர்கதைக்கு முடிவு எப்போது? என்பவை கட்டுரைகளாகவும் திருமதி ரெங்கநாயகி பத்மநாதன் அவர்களுடனான நேர்காணலும் இதே சஞ்சிகையில் வெளிவந்த மேலும் சில படைப்புகளாகும்.
மேலே கூறப்பட்ட ஆசிரிய தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளோடு மட்டும் நின்றுவிடாது சிறு கதைகள் பலவும் இச்சஞ்சிகையில் இவரது படைப்புக்களாக வெளிவந்திருந்தன. அவற்றில் காணக்கிடைத்த சில சிறு கதைகளாக ‘அட்டை’இ
‘நச்சுப் புழுக்கள்’இ ‘இப்படியும் ஒரு வதை’இ
‘கூவித் தோற்ற குயில்’இ
‘சக்தி திரண்டால்’இ ‘ஒரு தீக்கோழி தலையை உயர்த்திப் பார்க்கிறது’ போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றுக்கும் மேலாக இவரால் எழுதப்பட்ட ‘நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்’ என்ற தலைப்பிலான ஆளுமை வல்லிக்கண்ணன் பற்றிய கட்டுரை 14 தை 2007 தினக்குரல் வாரவெளியீட்டில் வெளிவந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்டு 1996 ஆடி 5, 6, மற்றும் 7 ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட இலக்கிய பேரரங்கின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் ‘ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
கௌரவங்களும் விருதுகளும்
மேற் கூறப்பட்டவாறான பல்வேறு படைப்புக்களை தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்த இவர் சில விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் உரித்துடையவராவார். இவர் பெற்றுக்கொண்ட பரிசுகளும் பட்டங்களும்
‘இலக்கிய கலா வித்தகி’
‘செஞ்சொற்செல்வி’
‘லில்லி தேவசிகாமணி பரிசு’ (புதிய வார்ப்புகள் என்ற நூலுக்கு)
சார்க் பெண்கள் அமைப்பின் பரிசு (வேள்வி மலர்கள் நூலுக்கு)
வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்தியப் பரிசு
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற 21வது கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலக்கிய தம்பதியர் பட்டம் கனடாவில் இலக்கிய அமர்வு ஒன்றில் கலந்து கொள்ள இவர் கணவர் சகிதம் தம்பதிகளாக சென்றிருந்தபோது இவருக்கும் இவரது கணவருக்குமாக சேர்த்து இந்த பட்டம் சிறப்பு பட்டமாக வழங்கப்பட்டது.
இவ்வாறு மேற் குறிப்பிட்ட பல்வேறு பட்டங்களையும் கௌரவங்களையும் பரிசில்களையும் இவர் பெற்றிருந்தமை இவரின் இலக்கிய பங்களிப்பிற்கு கிடைத்த அங்கீகாரங்களாக கருதும் அதே வேளை இவை இவரது சாதனைகளோடு ஒப்பிடுகையில் போதுமானவையா என்ற மனச்சஞ்சலமும் எழத்தான் செய்கிறது.
பத்மாவின் படைப்புக்கள் மற்றும் பதிவுகளில் இருந்து
எழுத்துலகின் மூத்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவராகிய பத்மா சோமகாந்தனின் படைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெளியீடாக ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ என்ற வெளியீட்டை குறிப்பிடலாம். இந்த வெளியீடு தெரிவு செய்யப்பட்ட வெவ்வேறு துறைகள்சார்ந்த 23 பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளாலேயே முழுமை படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலில் முதலில் அவர் வழங்கியுள்ள கட்டுரை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராகிய அதேவேளை கௌரவம் மிக்கவராக கருதப்பட்ட செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பற்றியதாகவே அமைந்துள்ளது. தங்கம்மா என்ற பெயருக்கு ஏற்றாற்போல் அவரது உள்ளமும் தங்கமானது என்று ஆரம்பித்து அவர் சேவைகள் பற்றிய பல விடயங்களை ஆய்வு செய்து வழங்கியுள்ளார். அடுத்து ஒரு பிரபலமான பாடகியும் வானொலி நிலைய இசைப்பகுதி பொறுப்பாளர் பற்றியும் தனது ஆழமான தேடலில் கிடைத்த தகவல்களை தத்துரூபமாக தொகுத்து தந்திருக்கிறார் அதனைத் தொடர்ந்து ஒரு பெண்ணிய ஆய்வாளர் மற்றும் செயற்பாட்டாளர் பற்றியும் அதன் பின்னர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியை பற்றி, சமய இலக்கிய ஆர்வலர் ஒருவர் பற்றி, ஒரு வைத்தியர் பற்றி, சோசலிசப் பெண்ணியவாதி ஒருவரைப்பற்றி என்று இப்படியே ஒவ்வொரு விசேட துறைகளில் உள்ளோர் பலரை தேடி அடையாளம் கண்டு அவர்களை ஆய்ந்தறிந்து அவசிமிக்க விபரங்களோடு அடுக்கடுக்காக கட்டுரைகளை இந்த நூலில் சளைக்காமல் எழுதி வழங்கியுள்ளார்.
பத்மா சோமகாந்தன் அவர்கள் எழுதி வெளியிட்ட ‘ஈழத்து தமிழ் பெண் ஆளுமைகள்’ எனும் நூல் மற்றொரு ஆளுமைகள் பற்றிய படைப்பே. மேலும் இந்நூல் பல ஆளுமைகள் பற்றி தேடி ஆய்ந்து நிறைவான தகவல்களோடு அவர்கள் பற்றிய பல விபரங்கள் அடங்கிய கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட மற்றொரு சிறந்த நூலாகும். இந்நூலின் முகவுரையில் பெண்களுடைய ஆளுமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற தனது உள்ளத்தில் இருந்த ஆதங்கத்தை “பெண்கள் பேனாவைக் கையில் எடுத்துக்கொண்டால் அன்றி, எம்மவரின் ஆளுமையைப் பதிவுசெய்ய யாராவது முன்வரமாட்டார்களா? என்ற ஏக்கம் மனதைக் குடையவே, படபடவென்று பந்திகள் கட்டுரைகளாக உருவமெடுத்தன” என வெளிப்படுத்துகிறார். ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ மற்றும் ஈழத்து பெண் ஆளுமைகள்’ ஆகிய நூல்கள் வரலாற்றுப் பதிவுகளுக்கு மிகவும் இன்றியமையாத நூல்களாக எடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் சாதனையாளர்களாக இருந்தவர்கள் மற்றும் தற்காலத்தில் சாதனையாளர்களாக இருப்பவர்கள் பலருடைய விபரங்கள் இன்று ஒரே தொகுப்பாக கிடைப்பது மிகவும் கஸ்டமான ஒன்றே அப்படி கிடைத்தாலும் அவை முழுமை அடையாதவைகளாகவே இருக்கின்றன. அத்தோடு பல சாதனையாளர்கள் பற்றிய பதிவுகள் இன்னமும் யாராலும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் அவர்கள் வரலாற்றிலிருந்தும் மறந்துபோகப்பட்டவர்களாகும் நிலை தோன்றியுள்ளது. அவர்கள் பற்றிய பதிவுகள் இன்மையானது இலக்கியம் கலை ஆகிய துறைகளுக்கு அவர்கள் ஆற்றிய பங்கு மறைந்து போய்விடுவதற்கு ஏதுவாகிவிடும். வரலாற்றில் பதிவுகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதற்கு உதாரணமாக வீ. எம். குகராஜா மற்றும் கே. எம். வாசகர் (அரங்க ஆற்றுகைக்கு பாரிய பங்காற்றியவர்) போன்றவர்களோடு மேலும் பலரை குறிப்பிடலாம். ஆகவே பத்மா சோம காந்தனின் இந்த இரண்டு வெளியீடுகளும் வரலாற்று பதிவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களே.
‘புத்தன் பரம்பரை’ என்ற (இவருடைய இரண்டாவது) சிறுகதையில் ஒரு தலைமையால் தவறாக வழிநடாத்தப்பட்ட சிங்கள மொழிச் சகோதரன் தவறை உணர்ந்து மனம் வருந்தி மனம் மாறுவதை விரிவாக மூன்று பிரதான பாத்திரங்களுக்குள் கதையை புனைந்து மிகுந்த ரசனையோடு எழுதியுள்ளார். அதேவேளை நடாந்து முடிந்த சம்பவங்களின் சுருக்கமான கருவை தனக்கேயுரித்தான மிடுக்கோடு உணர்சி வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாக மிகவும் தத்துரூபமாக தனது இளம்பராயத்திலேயே அதுகும் இலக்கிய படைப்புலகத்துள் காலடி எடுத்துவைத்த ஆரம்பகட்டத்திலேயே சிறப்பாக செப்பனிட்டு தந்திருக்கிறார். இக்கதையில் 1956ஆம் ஆண்டு நிகழ்;;வு இடம்பெற்ற இடத்தில் நடந்த சம்பவங்களின் தன்மையை இவர் ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் வெளிப்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். முன்னின்று ஏற்புடையதல்லாத செயல்களை நடாத்தி முடித்த பிரதான பாத்திரம் மனம் வருந்தி புத்தனின் முன் தனது தவறை உணர்வதைப்போன்ற முறையிலேயே கதையை வடித்திருக்கின்றார்.
இவரது மற்றொரு படைப்பு ‘இற்றைத் திங்கள்’ என்ற சிறுகதை. இந்த சிறுகதை வெளி நாட்டில் இருந்து வரும் ஒரு பெண் தனது சொந்த மண்ணில் நீண்ட காலத்திற்குப்பின் சென்று கால்பதிப்பதும் முக்கியமாக தனது நண்பியை சந்திக்க ஆர்வத்தோடு தேடிச்செல்வதும் சென்று சந்தித்த சொற்ப வேளையில் யுத்தத்தின் கோரத்தில் கணவனை இழந்த தன் நண்பியின் தற்போதய வாழ்க்கை முறையை நேரடியாக கண்டுணர்வதை மிகவும் நாசூக்காக சொல்லியிருக்கிறார். கதைக்குள் யுத்தத்தின் வடுக்களை வெவ்வேறு கோணத்தில் ஆங்காங்கே சுருக்கமாக பிற்பாதிப்புகள் ஏற்படாதவாறு கூட்சுமமாக விபரித்திருக்கிறார். கதையில் பிரதான பாத்திரமாகிய தனது நண்பியின் தற்போதய நிலையை நேரடியாக கூறாது சில பாத்திரங்களை இடையே காண்பித்து தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிட்டார். இந்த சிறுகதை தாயக பிரதேசத்தின் நிலைமையை சந்தடியில்லாமல் வெளிக்கொணர்நது படம்போட்டு காட்டும் ஒரு துணிச்சலான படைப்பாக கருதக்கூடியதாக இருக்கிறது.
பத்மா சோமகாந்தன் அவர்கள் தனது எழுத்துலகப் பிரவேசம் பற்றி தெளிவுபடும் பொருட்டு மல்லிகை சஞ்சிகையில் ‘எனது இலக்கியப் பயணத்தின் பிள்ளையார் சுழி’ என்ற தலைப்பில் சுவார~;யமான ஒரு படைப்பை வழங்கியுள்ளார். அதனையும் ஒரு சிறுகதை நயத்தோடும் அநுபவப் பகிர்வு வடிவத்திலும் மிகவும் அழகாக ஒழுங்குபடுத்தி வழங்கியுள்ளார். அதனை படிக்கின்றபோது ஒரு கதையை வாசிப்பது போன்ற உணர்வு உள்ளத்தில் எழுகின்றது. இந்த ஆக்கத்தை அவர் சுதந்திரன் பத்திரிகையின் சிறுகதைப்போட்டிக்கு அவரது முதலாவது சிறுகதையை அனுப்பிவிட்டு அதன் பின்னர் வந்த தைப்பொங்கல் தின விழாவை மையப்படுத்தி அந்த நிகழ்வின் சம்பவங்கள் பலவற்றை கோர்த்து பொங்கல் விழா நாளாகிய அந்த தினமே தனது இலக்கியப்பயணத்தின் பிள்ளையார் சுழியாக மலர்ந்த நாளாகக் காட்டி முடித்திருக்கிறார்.
‘சக்தி’ என்ற சிறுகதையில் ஆசிரியை கதாபாத்திரம் ஒன்றை வைத்து அந்த ஆளுமை பதவி நிலை உயர்வுக்கு சகல தகுதிகளும் இருந்தும் பெண் என்ற காரணத்தால் எவ்வாறு தடைகளை சந்திக்கிறார் என்பதை அநுபவ ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் வெளிக்கொணர்ந்திருக்கிறார். அதே வேளை ஒரு பெண்ணால் எத்தனையோ விடயங்களை சிறப்பாக கையாளமுடியும் என்பதை தெரியப்படுத்துவதற்காக சர்வதேச மகளிர் தின பத்திரிகை ஆக்கங்கள் பற்றிய வெளிப்படுத்துகை மூலமும் கோவில் தலைமை ஏற்றிருக்கும் அம்மா என்ற கதாபாத்திரம் பற்றி பேருந்து வண்டியில் இருவர் பேசிக்கொள்ளும் சம்பாசணைகள் மூலமாகவும் இளையோட விட்டிருக்கிறார். ‘மனிதச் சருகுகள்’ என்ற மற்றொரு சிறுகதையில் அகதி முகாம் வாழ்வில் பெண் பாத்திரம் ஒன்றையும் அந்தப் பெண்ணின் தந்தை என்ற பாத்திரத்தையும் தருவித்து மகளின் பொருட்டு ஒரு தந்தையின் வேதனைகளை வெளிக்கொணர்ந்து முகாம் வாழ்வு பெண்களுக்கு எத்தகைய கடினமான வாழ்வு என்பதை உலகுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார். இந்தக் கதை வாசகர்களின் மனதை உருகவைக்கும் அளவிற்கு மிகவும் உள்;ர உணர்ந்து எழுதப்பட்டிருப்தன் மூலமாக எழுத்தாளினியின் எழுத்தாற்றல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மற்றொரு சிறுகதையாகிய ‘உயரப் பறந்தாலும்’ என்ற கதை வெளி நாட்டு வாழ்க்கை இதில் ஒரு பெண் அவளது கணவனால் தொடுக்கப்படும் சீதனக் கொடுமையில் சிக்கித் தவிக்கும் காலாகாலமாக பெண்களுக்கே உரித்தான மற்றொரு பிரச்சனை இன்னொரு கோணத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பல இடங்களிலே போகப்பொருளாக பார்க்கப்படுகின்ற விடயத்தை ‘செருப்பு’ என்ற கதையின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி இவருடைய ஒவ்வொரு கதைகளும் சமூகத்திலே பெண்ணியம் சார்ந்து காணப்படுகின்ற வெவ்வேறு வகையான பிரச்சனைகளை வித்தியாசமான கதைகளுக்கூடாக தருகின்ற ஒரு துணிச்சலான படைப்புக்களாகவே காணப்படுகின்றன. அவ்வாறே இவரும் ஒரு துணிச்சல் மிக்க படைப்பாளினியாகவே பல்வேறு வகையான விடயங்களையும் தனது எழுத்தாற்றலால் கையாண்டிருக்கிறார்.
முடிவு
பத்மா சோமகாந்தனை பொறுத்தவரை அவர் தனது சமூக பின்புலத்தையும் அவர்களுடைய ஆச்சார வழக்கங்களையும் வெளியுலகிற்கு அவ்வப்போது ஞாபகப்படுத்துவதிலும் எப்பொழுதும் அதனை விட்டு விலகியதில்லை என்பதை உறுதிப்படுத்துவதிலும் மிகவும் கவனாமாக இருந்துள்ளார் என்பதை அவர் பற்றியதாக வெளிவந்த சில நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளினூடாக கண்டு உணரக்கூடியதாக இருக்கிறது.
இவர் குறிப்பிட்ட சில காலம் ‘சொல்’ எனும் இதழின் ஆசிரியராகவிருந்து அதிலும் அவ்வப்போது எழுதி வந்தார். இசை ஆளுமைகள் பற்றி இவர் வீரகேசரி பத்திரிகையின் ‘கலைக்கேசரி’ சஞ்சிகையில் ‘நினைவுத் திரை’என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவந்தார். சிலகாலம் ‘ஊடறு’ என்ற அமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து ஊடகத் துறையில் செயற்படும் பெண்களின் ஆளுமையை விருத்திசெய்யும் பொருட்டும் அவர்களின் நன்மைகளை கவனிக்கும் பொருட்டும் அந்த அமைப்பை சிலகாலம் வழி நடாத்திவந்தார். அது மட்டுமன்றி தனது கணவரான சோமகாந்தனுடன் இணைந்து ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்’ செயற்பட்டமை இங்கு பதிவுசெய்யப்படவேண்டிதே. இறுதிக்காலத்தில் இந்த அமைப்பின் உப தலைவராகவும் இவர் செயற்பட்டார். இவ்வாறு தனது இறுதிக்காலம் வரை தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனது எழுத்தாற்றலால் பங்களிப்புச் செய்து வந்த ‘பத்மா சோமகாந்தன்’ வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 15ஆம் திகதி 86வது அகவையில் தனது கலையுலக பங்களிப்புகளை நிறத்திக்கொண்டு கொழும்பில் மீளாத் துயிலில் ஆழ்ந்தார். இவரது படைப்புக்கள் தொடர்ந்தும் இவர் இப்புவியில் படைப்புக்களால் வாழ்வதை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக