ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கற்பகதரு

 














பசியால வாடேக்க
வாய்க்கு ருசியான
பழமானாய்
பனங்காய்ப் பணி யாரமானாய்
களைப்பால சோரேக்க 
தலை சாய்க்க
சுருண்டு தலையணையாய் 
நீயானாய்
இரவானால் கண்ணயர
ஆளளவு பாயானாய்
தாகம் எடுக்கயில
பதநீராகி குளிர்வித்தாய்
உடலுக்கு சக்திதர
போசாக்கு மாவானாய்
ஆழ் கிணற்றில்
நீர் மொள்க
பெரிய கடகமானாய்
மாரி மழைபெய்யேக்க
நீ நனைந்து கூரையானாய்
கோடை வெயிலடிக்கேக்க
நிழல்தரும் குடையானாய்
மனை வாசல் அழகாக்க
அலங்காரப் பொருளானாய்
விலங்கினின்று பயிர்காக்க
நாற்றிசையும் வேலியானாய்
பூரணை நாள் மகிழ்சிக்கு
ஒடியற் கூழானாய்
நண்பரோட களிப்புறேக்க
சோமபான கள்ளானாய்
விழாக்கள் சோபிக்க
தொங்கு தோ ரணமானாய்
ஊரூராய் ஓடேக்க
எம்முன்னே நீ நின்று
காவல் அரணானாய்
இப்படி எங்களுக்கு 
எல்லாமாய் நீ ஆனதால
உயிர் காக்கும் பயிரானாய்
கற்பகதருவானாய்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக