திங்கள், 10 ஆகஸ்ட், 2020

"கம்பான்" பற்றி அறிந்துகொள்வோம்

"கம்பான்" பற்றி அறிந்துகொள்வோம் 


 கரைவலை
கம்பான் என்ற சொல்லை இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனேகமாக இதனோடு தொடர்புபட்டவர்களுக்கு இதை தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால் தொடர்பற்றவர்களில் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தவிர்ந்த ஏனையோர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. நான் கூட இந்த சொல்லை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. அண்மையில் தான் நான் இந்த சொல்லை அறிந்தேன். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சஞ்சிகையில் கட்டுரையொன்றை படிக்கின்ற போது இந்த சொல் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்மில் அநேகருக்கு சொல் அகராதிகளுடன் அதிகம் பரீட்சயமில்லை. சொல் அகராதிகளுடனான பரீச்சயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் இந்த சொல்லைப் பார்த்தபோது தான் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே கம்பான் என்ற சொல்லானது ஒருவகையான கயிறைக் குறிக்கிறது. அனேகமாக கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களில் ஒரு பகுதியினர் கரைவலை என்ற வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் கடற்கரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அதற்குரிய வலையை கடலில் ஆழத்திற்கு கொண்டு சென்று இந்த கம்பான்;  கயிற்றில் முடிந்து வலையை வளைத்துப் போடுவார்கள். அந்த வலையை ஈரவலை என்றும் குறிப்பிடுவார்கள். வலையின் இருமரங்கிலும் முடியப்பட்ட கம்பான் கயிறு கடலின் கரைக்கு கொண்டுவரப்பட்டு அதைப்பிடித்து பல மீனவர்கள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் கரையிலிருந்து இழுப்பார்கள். வலை கரையை வந்து சேரும்வரை இழுப்பார்கள். இந்த கரைவலை மீன்பிடியின் பொருட்டு வலையுடன் இணைக்கப்பட்டு வலையை கரையைநோக்கி இழுப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த கயிறு தான் கம்பான் கயிறு என அழைக்கப்படுகிறது.

இந்த வகையான கயிறுதான் கப்பல்களை துறைமுகங்களில் கட்டுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். கம்பான் கயிற்றை நாங்கள் இன்னொரு சந்தர்ப்பத்திலும் பார்த்திருப்போம். அது எந்த சந்தர்ப்பமெனில் விளையாட்டு விழாக்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பமே. அங்கே இடைவேளை நெருங்கும் வேளையில் அல்லது விளையாட்டு விழாக்கள் இறுதி சந்தர்ப்பத்தை நெருங்குகின்ற நேரத்தில் கயிறு இழுத்தல் எனப்படும் பாரம்பரிய விளையாட்டு போட்டி ஒன்று இடம்பெறும். இந்தப் போட்டி இரண்டு பக்கமும் இரு வேறு போட்டிக் குழுக்கள் இருந்து ஒரு குறிப்பிட்ட நீளமான மிகவும் பருமனான கயிற்றை இழுப்பார்கள். கயிறு எந்தப் பக்கத்தினரால் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி இழுக்கப்படுகிறதோ அந்த பக்கத்திலிருந்த அணியைச் சார்ந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த போட்டிக்காக பயன்படுத்தப்படுகின்ற அந்த பருமனான கயிறு இங்கு நான் குறிப்பிடும் கம்பான் கயிறே ஆகும். இதில் இன்னொரு சுவாரசியமான விடயம் யாதெனில் இந்த கம்பான் என்ற சொல் சிங்கள மொழியில் அதே கயிறிற்கு கம்ப என்ற சொல்கொண்டு அழைக்கப்படுகிறது. கம்பான் என்பதே கம்ப என்று திரிபடைந்து வழக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம் என கருத வாய்ப்பிருக்கிறது. பின்னர் இந்த சொல் பற்றிய எனது தேடுகையில் இந்த கயிறை வேறு எவ்வகையில் எல்லாம் அழைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அவ்வாறு கிடைத்த ஏனைய சொற்பிரயோகங்களாக கம்பாகம்’, கம்பாம்’, அமாறு கயிறு’, அமாற்கயிறு’, அமார்’, மற்றும் கப்பற் கயிறு’, போன்றவை அடையாளம் காணப்பட்டன.

 தமிழ் பாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக