சென்னையில் மேடையேறிய முதல் இலங்கைத் தமிழ் நாடகம்
ஒரு காலப்பகுதியில் மேடை நாடகங்கள் இலங்கையில் கொடிகட்டிப்பறந்தது. தென் பகுதியில் சிங்கள நாடகங்களும் வடக்கு கிழக்கில் தமிழ் நாடகங்களும் பிரபல நாடக தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு சிறந்த நாடக கலைஞர்களின் பங்களிப்போடு மேடையேற்றப்பட்டு வந்தன. தென் பகுதி சிங்கள நாடகங்களுக்கு இணையாக வடக்கு கிழக்கின் தமிழ் நாடகங்களும் சளைக்காமல் உருவாகி வந்தன் அறுபதுகளில் சற்று முன்னேற்றம் கண்டிருந்த தமிழ் நாடக மேடையேற்றங்கள் காலத்துக்கு காலம் மெருகேற்றப்பட்டு நாடக பாரம்பரிய வடிவங்கள் மாற்றம் பெற்று முன்னேற்றம் கண்டு வந்தன. இந்த வகையில் முன்னேற்றம் கண்ட தமிழ் நாடகங்கள் தமது சொந்தப்பிரதேசங்களில் மாத்திரமன்றி தென் பகுதியிலும் மேடையேற்றப்பட்டன.
இவ்வாறு வடபகுதியில் நாடகக் கலையை வளர்பதில் முன்நின்று தமது பங்களிப்பை வழங்கியவர்கள் பலர் அவர்களுள் ஒருவர்தான் திரு. வாசகர் அவர்கள். பல நாடகக் கலைஞர்களை உத்வேகமளித்து உயர் நிலைக்கு கொண்டு சென்ற பெருமையில் இவரது பங்கு மிகப் பெரியது என்றால் மிகையாகாது. கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடுடைய சொர்ணலிங்கம் அவர்களுக்கு அடுத்த படியாக இலங்கைத் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சிபற்றி அதிகம் சிந்தித்தவர்களில் கே. எம். வாசகர் முக்கியமானவர். நாடக வடிவங்களில் மாற்றம் உருவாக்கப்பட்டு எமக்கே உரிய தனித்துவாமான நாடக வடிவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவாவும் இவரிடத்தில் இருந்தது. இவரது தயாரிப்பிலும் நெறியாள்கையிலும் உருவாக்கப்பட்டதுதான் “நீ இல்லையேல்” என்ற மேடை நாடகம். கே.எம். வாசகர் அவர்களின் இந்த “நீ இல்லையேல்” என்ற மேடை நாடகமே முதன் முதலில் சென்னை மாநகரில் மேடையேற்றப்பட்ட ஈழத் தமிழ் நாடகமாகும். இந்த நாடகம் சென்னையில் மிகவும் வரவேற்பைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு வாசகர் அவர்களால் தயாரித்து நெறியாழ்கை செய்யப்பட்ட இந்த நாடகம் சிங்கள மொழியில் “ ஒப நத்னம்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. செங்கை ஆழியான் எழுதிய “வாடைக் காற்று” நாடகத்தை திரைக் கதையாக எழுதியதின் முக்கிய பங்காளி என்ற பெருமையும் இவரையே சாரும்.
தமிழ் பாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக