அறிமுகம்
ஆதி காலம்தொட்டு ‘கற்பகதரு’ என்று அழைக்கப்படும் ஒரு பயிரினம் தான் இந்த ‘பனை’ மரம். இது புல்லினத்தைச் சார்ந்த ஒரு பயிர் என்று ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆயினும் நாம் பனை மரம் என்றே தற்போது பொதுவாக அழைத்து வருகின்றோம். இதன் மூலமாக பல்வேறு வகையான பயன்களை பெறக்கூடியதாக இருப்பதாலும் பனையை போல் வேறு பயிர்களோ மரங்களோ அதிக பயனைத் தராதமையாலும் இதனை ‘கற்பகதரு’ என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. எந்தவிதமான உள்ளீடுகளுமின்றி அதனுடைய ஆயுட் காலம் முழுவதும் பல்வேறு விதமான பயன்களை இது வழங்கிவருகிறது. ஆயுள் முடிந்த பின்னரும் இதனுடைய ஒவ்வொரு பாகமும் எந்தவிதமான கழிவுகளுமின்றி பெறுமதிமிக்க பயன்களை தர வல்ல ஒரு மரம் என்றால் அது மிகையாகாது. இதனுடைய ஆயுட்காலம் ஏறத்தாள 100 வருடங்கள் வரை இருப்பதோடு அதனைத் தாண்டியும் உயிர்வாழும் பனைகளும் உண்டு.
பரம்பலும் காணப்படும் நாடுகளும்
இவை முதலில் ஆபிரிக்காவிலேயே காணப்பட்டதாகவும் ஆபிரிக்காவே இதனுடைய பூர்வீகம் எனவும் பின்னார் ஆபிரிக்காவிலிருந்து மனித இனம் வெவ்வேறு பிரதேசங்களுக்கு சென்றவேளை இதனை தம்மோடு எடுத்துச் சென்று பயிரிட்டதால் ஏனைய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என்று அறிஞர்களும் ஆராட்சியாளர்களும் குறிப்பிடுகின்றனர். இதனை அவர்கள் தம்மோடு எடுத்துச் சென்றமைக்கும் இதனுடைய பல்வகையான பயன்களே முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. பொதுவாக தற்போது பனை வளம் இருக்கும் நாடுகளை உற்று நோக்கின் அனேகமான ஆசியநாடுகளிலேயே இது காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, மியான்மார், இந்தேனேசியா, வியட்நாம் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளிலேயே அதிகம் காணப்படுகிறது. இது தவிர மேற்கு ஆபிரிக்க நாடாகிய கொங்கோவிலும் அதனை அண்டிய சில ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. மற்றொரு முக்கியமான விடயம் யாதெனில் பனை மரங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களில் பெரும்பாலும் காணப்படுவதில்லை மாறாக மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலுமே அதிகப்படியாகக் காணப்படுகின்றது.
இந்தியாவில் 10.2 கோடி பனைமரங்கள் உள்ளதாக ‘கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமம்’ உனும் அமைப்பு எடுத்த கணக்கெடுக்கினை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிடப்படுகிறது. இந்த கண்கெடுப்பின்படி தமிழகத்தில் மட்டும் 5 கோடி பனைமரங்கள் இருப்பதாகவும் நெல்லை, இராமநாதபுரம் மற்றம் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலேயே மேற் கூறப்பட்ட தொகையாகிய 5கோடியில் 50 வீதமான மரங்கள் அடர்த்தியாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேபோலவே மிகுதியான 50 வீதமான மரங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மரங்கள் செங்கல்பட்டு, சிவகங்கை, நாமக்கல், சென்னை மற்றும் சேலம் போன்ற பகுதியில் அடர்த்தியாக காணப்படுவதாகவும் ஏனைய மாவட்டங்களில் 30 இலட்சத்தைவிட குறைந்தளவான பனைமரங்களே காணப் படுவதாகவும் இந்த ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ஆசியாவில் பனைவளம் அதிகமாகக் காணப்படும் மற்றொரு நாடாகிய இலங்கையில் இதன் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வுவுனியா போன்ற போன்ற பிரதேசங்களில் 10,508,000 பனை மரங்கள் உள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 450,000 பனை மரங்கள் உள்ளதாகவும் இவற்றுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மரங்கள் உள்ளதென கருதப்படும் புத்தளம், அநுராதபுரம் மற்றம் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 162,000 பனை மரங்கள் உள்ளதாகவும் இலங்கை பனைவள ஆராட்சி நிறுவனத்தின் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இது தவிர ஏனைய மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில பிரதேசங்களில் பனை மரங்கள் காணப்படுகின்றன.
பனை மரத்தின் வகைகள்
கால் நடைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் மாடு 100ற்கம் அதிகமான இனங்களைக்கொண்டதாக உள்ளதைப்போலவே பனை மரங்களும் ஏனைய மரங்களுக்கில்லாத அளவு அதிகப்படியான இனங்கள் உள்ள ஒரு வான் பயிர் இனமாக அறியப்படுகிறது. இதன் பிரகாரம் பனை மரங்களில் 34 வகைகள் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பனையில் கிளைகள் உள்ள மரங்களும் உள்ளதாகவும் இந்தியாவில் கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்கா, இலங்கை வல்லிபுரம் மற்றும் மதுரைக்கு அருகில் இருக்கும் மேலக்கல் போன்ற சில இடங்களில் இவை காணக்கிடைப்பதாகவும் தெரியவருகிறது.
1. ஆண்பனை 2. பெண்பனை 3. சாற்றுப்பனை 4. கூந்தப்பனை 5. குமுதிப்பனை 6. தாளிப்பனை 7. திப்பிலிப்பனை 8. ஆதம்பனை 9. சீமைப்பனை 10. ஈழப்பனை 11. ஈச்சம்பனை 12. கூறைப்பனை |
13. இளம்பனை 14. குடைப்;பனை 15. கிச்சிலிப்பனை 16. உடலற்பனை 17. காந்தம்பனை 18. தாதம்பனை 19. இடுக்குப்பனை 20. சீனப்பனை 21. ஈரம்பனை 22. பாக்குப்பனை 23. அலாம்பனை 24. குண்டுப்பனை |
25. சனம்பனை 26. நிலப்பனை 27. அலகுப்பனை 28. வாதப்பனை 29. வலியப்பனை 30. கதலிப்பனை 31. காட்டுப்பனை 32. ஏசறுப்பனை 33. ஏரிலைப்பனை 34. கொண்டைப்பனை போன்றவையே அந்த 34 வகையான பனைமர வகைகளுமாகும் |
பனையிலிருந்து கிடைக்கும் பயன்கள்
பனை மரத்தை பொறுத்தவரை வேறு எந்தப்பயிரும் தராத பெரும் எண்ணிக்கையிலான பயன்களை தருவதாக முன்னரே குறிப்பிட்டிருந்தேன். பனையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பல்வேறுவகையான பயன்களை பெறக்கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வளங்களின் துணையோடு பல வகையான உணவுப்பொருட்களையும் உணவுப்பொருட்களல்லாத வீட்டுப் பயன்பாட்டு மற்றும் அலங்காரப் பொருட்களையும் உற்பத்தி செய்தும் நேரடியாகவும் பெறக்கூடியதாக இருக்கிறது.
இவற்றிற்கும் மேலாக பனையை பயிரிட்டு பராமரிப்பதானது பயிரிடும் நபர்களுடைய தற்சார்பு பொருளாதாரத்தை மூன்று தலைமுறைகளுக்கு மேல் வழங்கக்கூடியதாக இருப்பதை குறிப்பிடலாம். இன்று நாம் கையடக்க அளவிலான இலத்திரணியல் உலகத்திற்குள் பிரவேசித்துவிட்டோம் இதையும் தாண்டி எதிர்காலத்தில் இன்னும் வெவ்வேறு வளர்ச்சிப்படிகளை நோக்கி செல்லும் அளவிற்கு உலக அறிவியல் வளர்ந்து செல்கிறது ஆனால் இந்த வளர்ச்சிகளுக்கெல்லாம் தேவையான ஆரம்ப கற்பித்தல்கள் போதனைகள் யாவுமே பனை தந்த ஓலைச்சுவடிகளில் மூதாதையர் மேற்கொண்ட பதிவுகளிலிருந்து பெறப்பட்டவையே. அகர முதல எழுத்தெல்லாம் கற்பாறைகளுக்கு அடுத்தபடியாக பனை ஓலைச்சுவடிகளிலிருந்தே என்றால் மிகையாகாது.
பனையிலிருந்து பெறப்படும் உணவுப்பொருட்கள்
உணவுப்பொருட்களிளெல்லாம் முதன்மையானது பதனீர் இது தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீருக்கு நிகராக நேரடியாக எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது பருகக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இது வரட்சியான கால நிலை நிலவும் காலங்களில் இதனைப் பருகுவதன் மூலம் உடலின் உ~;ணத்தன்மையை குறைப்பதற்கு ஏற்றாவறான குளிர்மைத் தன்மை நேரடியாகவே உண்டு. பதநீரிலிருந்து வேறு உணவாக பயன்படுத்தக்கூடிய வேறு சில பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பனையிலிருந்து கிடைக்கும் ஏனைய உணவுப்பொருட்கள் வருமாறு
பனையிலிருந்து பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் நேரடியாகக் கிடைப்பதோடு வேறு சில உள்ளீடுகளையும் சேர்த்து வெவ்வேறுவகையான உணவுப்பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பனையிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களில் இயற்கையான சத்துக்களும் மருத்துவக் குணங்களும் உள்ளதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. அநேகமாக அறியப்பட்ட உணவுப்பொருட்களை தொடர்ந்து கீழே காணலாம்.
🌴நுங்கு 🌴பனம் பழம் 🌴பூரான் 🌴பனாட்டு 🌴பாணிப் பனாட்டு 🌴பனங்காய் 🌴பனங்கள்ளு 🌴பனம் (மது) பானம் 🌴 விநாகிரி 🌴பனங் கருப்பட்டி 🌴பனை வெல்லம் 🌴 சில்லுக் கருப்பட்டி 🌴பனங் கற்கண்டு 🌴பனஞ் சீனி 🌴பனங் கிழங்கு 🌴பச்சை ஒடியல் 🌴ஒடியல் பிட்டு 🌴ஒடியல் கூழ் 🌴புழுக்கொடியல் 🌴பனம்பழக் கழி 🌴பனம் பழப் பணியாரம் 🌴பனம் டொபி 🌴அரும்புக் குருத்து 🌴பனம் பாகு 🌴பனங்கிழங்கு மா 🌴சுக்கு கருப்பட்டி 🌴பனங்கிழங்கு சத்து மா 🌴பனம் பழம் ஜூஸ் 🌴பனம் ஜாம் 🌴பனம் பிஸ்கட் 🌴பனம் கேக் போன்றவை இவற்றுள் மிகவும் முக்கித்துவம் வாய்ந்தவையாகும்.
உணவுப்பொருள் அல்லாத பனைசார் ஏனைய பயன்படு பொருட்களாவன
பனையிலிருந்து மக்கள் தமது தேவைகளின்பொருட்டு பொதுவாக பயன்படுத்தப்படும் சில பொருட்கள் நேரடியாக பெறப்படும் அதேவேளை சில பொருட்கள் உற்பத்தி செய்தும் வடிவங்கள் மாற்றப்பட்டும் பெறப்படுகின்றன. அவற்றுள் முக்கியமான பலவற்றை தொடர்ந்து காணலாம்.
🌴 முதிர்ந்த ஓலை 🌴 பனங் குருத்து 🌴பனை ஓலைச் சுவடி 🌴ஓலைத் தொப்பி 🌴நீற்றுப்பெட்டி 🌴கடகம் 🌴பனை ஓலைப்பாய் 🌴கூரை வேய்தல் 🌴வேலி வேய்தல் 🌴தடுக்கு 🌴பனை ஓலைப் பெட்டி, 🌴துலா 🌴கிணற்றுப் பட்டை 🌴மூரி மட்டை அடைப்பு 🌴கங்கு மட்டை 🌴விறகு 🌴தும்புப்பொருட்கள் 🌴கூரை மரம் 🌴கூரை சிராகை 🌴பொதி செய்யும் பெட்டிகள் 🌴பல்வேறு அளவுகளிலான பைகள் 🌴பற்குச்சி 🌴தும்பு தூரிகை பல்வேறு அளவுகள் 🌴உமல் 🌴விசிறி 🌴கிணற்றுப்பட்டை 🌴பனம் சவற்காரம்
🌴கேக்பெட்டி போன்றவை
பனையிலிருந்து உருவாக்கப்படும் அலங்காரப்பொருட்கள்
உணவுப்பொருட்கள் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களைப்போலவே பனையிலிருந்து கிடைக்கப்பெறும் மூலப்பொருட்களைக்கொண்டு பல்வேறுவகையான அலங்கார பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் வகைகளும் வடிவங்களும் காலத்துக்கு காலம் மாறுபட்டும் அதிகரித்தும் செல்கின்றன. காலத்துக்குக் காலம் புதிய புதிய உற்பத்திகள் கண்டுபிடிப்பாளர்கள் மூலமும் வடிவமைப்பாளர்கள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டு பாவனையின்பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அரச மற்றும் தனியார் பனை அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இச்செயற்பாடுகளில் முன்நின்று ஈடுபடுகின்றன. இவ்வாறு இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அலங்காரப்பொருட்களில் குறிப்பிடக்கூடிய சில பொருட்களின் விபரங்கள் வருமாறு
🌴தட்டிகள் 🌴பூக்கள் 🌴தள விரிப்புகள் 🌴கால் மிதிகள் 🌴தட்டுகள் 🌴பூக்கூடை 🌴அர்சனைக் கூடை 🌴கேடயங்கள் 🌴தளபாடங்கள் 🌴கட்டில் 🌴மேசை 🌴கதிரை செட் 🌴சுவரில் தொங்கவிடும் அழகு வடிவங்கள் 🌴மிருகங்களின் வடிவம் 🌴பறவைகளின் வடிவங்கள் 🌴பூக்கொத்துகள் 🌴பூச்சாடிகள் 🌴பூக்கள் 🌴பாத்திர றாக்கைகள் 🌴புத்தக றாக்கைகள் 🌴புகைப்பட சட்டகம் 🌴உடுப்பு றாக்கை 🌴பூச்சாடி இவற்றை விட இன்னும் பல பொருட்கள் உருவாக்கப்படுகின்றன அத்தோடு மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களில் சில வெவ்வேறு பல வடிவங்களில் தயாரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
நிறைவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக