ந. பாலேஸ்வரி |
அவ்வப்போது வெவ்வேறுவிதமான மிகவும் அவசியமிக்க மற்றும் ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களும் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் என நான் கருதுபவற்றை சுருக்கமான கட்டுரைகளாக தொகுத்துத் தந்துகொண்டிருப்பது எனது எழுத்தை ரசிக்கும் நீங்கள் அறியாதவிடயமே அல்ல. அதுபோலவே தான் இந்த ஆக்கத்திலும் நான் ஒரு முக்கியமான நபரைப்பற்றி மிகச் சுருக்கமாக தர முயற்சித்திருக்கிறேன்.
நாங்கள் கலைத்துறைக்கு பங்களிப்புச் செய்த பல்வேறுவிதமான பல நபர்களைப்பற்றி அறிந்திருக்கிறோம். எழுத்தாளர், நடிகர், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர் என்று இப்படியே கலைஞர் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒவ்வொரு கலைஞர்களும் ஒவ்வொரு விதமான கலைப்படைப்புகளை தமது ரசிகர்களுக்காக தந்துகொண்டே இருக்கிறார்கள். இதற்குள் அடங்கும் ஒரு பகுதியினர் கதைகளை எழுதி வாசகர்களுக்கு விருந்தாக படைக்கும் கலைஞர்கள். இவர்களுள் நாவல்களை எழுதுவோர் சிறுகதை எழுதுவோர் நாவல் மற்றும் சிறுகதை இரண்டும் எழுதுவோர் என பலர் இருக்கிறார்கள். இலங்கையில் அநேகமான மக்களால் அறியப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதை எழுதும் எழுத்தாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்குள் ஒருவர் அதிலும் 12 நாவல்களை இதுவரை தனது வாசகர்களுக்காகத் தந்த ஒரு எழுத்தாயினி இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும் காரணம் அப்படி ஒருவர் இருந்திருக்கிறார். அப்படி ஒருவரை கிழக்கு மண் தந்திருக்கிறது திருமதி ந. பாலேஸ்வரி என்பவரே அவர். மார்கழி மாதம் 7ஆம் திகதி 1929ஆம் ஆண்டு திருகோணமலையில் முகாந்திரம் த. பாலசுப்பிரமணியம் மற்றும் பா. கமலாம்பிகை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் திருகோணமலையின் மனையாவெளி கிராம சேவகர் பிரிவை வாழ்விடமாககொண்டிருந்தார். திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை பயின்றார். பின்னர் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி> உடுவில் மகளிர் கல்லூரி மற்றும் திருகோணமலை புனித மரியாள் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஆசிரியர் கல்விக் கல்லூரியில் பயின்று ஆசிரியையானர். ஆசிரியராக நீண்டகாலம் சேவையாற்றினார். இறுதியில் பிரதி அதிபராகவும் பணியாற்றினார். ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் திருமலை பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் ஒரு உறுப்பினராக செயற்பட்டார்.
இவர் ஈழத்தின் அதிக நாவல்களை எழுதி வெளியிட்ட ஒரே பெண் எழுத்தாளராக தனது எழுத்தாற்றல் மூலமாக பிரபலமான எழுத்தாளராக திகழ்ந்தார். சிறு வயதிலேயே வாசிக்கும் ஆற்றலால் உந்தப்பட்ட இவர் அதிகமான வாசிப்பில் ஈடுபட்;டதன் மூலமாக எழுதும் ஆர்வத்துள் உந்தப்பட்டு அதனால் கவரப்பட்டு எழுத்தாளராக தன்னை உருவாக்கிக்கொண்டார். பாப்பா> ராஜி எனும் புனைப் பெயர்களிலும் தனது இயற் பெயரிலும் இவர் எழுதி வந்தார். பெண்மையின் தனித்துவத்தை தனது எழுத்துக்களில் புகுத்தி அதனை வாசகரிடத்தில் கொண்டுசேர்த்த ஒரே பெண் எழுத்தாளரும் இவர் தான் என அறியப்படுகிறது. தினகரன் பத்திரிகையில் இவர் தனது முதலாவது கதையை “வாள்வளித்த தெய்வம்” எனும் தலைப்பில் வெளியிட்டதன் மூலம் கலையுலகிற்குள் பிரவேசித்தார். அன்று ஆரம்பித்த பயணம் 200ற்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 30ற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 12 நாவல்களையும் எழுதுமளவிற்கு தொடர்ந்தது. எழுத்தாளர் பாலேஸ்வரி அவர்களின் சிறுகதைகள் சில 2 தொகுதிகளாக ‘சுமை தாங்கி’ என்ற பெயரில் 1973இல் நரசு வெளியீடாக ஒன்றும் மற்றும் ‘தெய்வம் பேசுவதில்லை’ என்ற பெயரில் 2000ஆம் ஆண்டு இந்தியா காந்தளகம்
வெளியீடாக மற்றொன்றும் வெளிவந்தன.
இவரது படைப்புகள் இலங்கையின் பிரபலமான பத்திரிகைகள் சஞ்சிகைகளாகிய வீரகேசரி, மித்திரன், ஈழநாடு, தினகரன், சிரித்திரன், ஒற்றைப் பனை, சுடர் மற்றும் ஜோதி ஆகிய வெளியீடுகளிலும் தமிழகத்தின் சில பிரபலமான பத்திரிகைகள் சஞ்சிகைகளாகிய தமிழ் மலர், கல்கி, குமுதம் மற்றும் கவிதை உறவு ஆகிய வெளியீடுகளிலும் அத்தோடு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் உலகம் மற்றும் ஈழநாடு போன்ற சில வெளியீடுகளிலும் மலேசியாவின் தமிழ் மலர் எனும் வெளியீட்டிலும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ந. பாலேஸ்வரி அவர்கள் மித்திரன் வாரமலரில் தொடர்ச்சியாக எழுதிவந்த ‘பூஜைக்கு வந்த மலர்’ எனும் தொடர்கதை நாவலாக 1971ஆம் ஆண்டு மாசி மாதத்தில் முதலாவது பதிப்பும்
1972 சித்திரை மாதத்தில் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது பதிப்பும் வெளிவந்ததோடு இதே நாவல் 1994ஆம் ஆண்டு மீண்டும் மித்திரனில் தொடர் கதையாக வெளிவந்ததும் முக்கியமான விடயமாகும்.
இலங்கை வானொலியின் பிரபலமான ஒரு நிகழ்சியாக இருந்த ‘இசையும் கதையும்’ நிகழ்விற்கு இவர் ஆரம்ப காலங்களில் ஆக்கங்களை எழுதி வந்திருக்கிறார். முன்பு வெளிவந்த ‘தினபதி’ பத்திரிகையில் சிறுகதை தெரிவுக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து பல இளம் எழுத்தாளர்களை வெளியுலகிற்கு கொண்டுவருவதில் ஊக்குனராகவும் செயற்பட்டுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி ஒரு சிறந்த பேச்சாளராகவும் இருந்தார் என்பது அனைவரும் அறிந்திருக்கக்கூடியதாக இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இவரது நாவல்களில் தெரிவுசெய்யப்பட்ட சிலவற்றை திரைப்படமாக்குவதற்கான முயற்சிகளும் நடந்தேறியதாகவும் இறுதியில் கால ஓட்டத்தின் சூழ்நிலை மாற்றங்களால் அது கைகூடவில்லையெனவும் அறியக்கிடைக்கிறது. இவருடைய படைப்புக்களுள் ‘தத்தை விடு தூது’ எனும் நூல் திருகோணமலையைச் சேர்ந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரால் 1892இல் எழுதப்பட்ட ‘தத்தை விடு தூது’ எனும் சிற்றிலக்கியவகை செய்யுளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் ஒரு புலவரும் ந. பாலேஸ்வரியின் நெருங்கிய உறவினருமாவார்.
இவர் பின்வரும் நான்கு விருதுகளையும் தன்னுடைய சாதனைகளின்பொருட்டு பெற்றிருந்தார். அவையாவன
v
‘தமிழ்மணி’ - இந்து சமய கலாசார அமைச்சு – 1992
v
‘சிறுகதை சிற்பி’ மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் - 1996
v
‘ஆளுனர் விருது’ – வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு - 1999
v
‘கலாபூசண விருது’ – அரச விருது - 2002
இவரது நாவல்களின் வெளியீடுகள் விபரம் வருமாறு:
Ø
‘சுடர்விளக்கு’ திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடாக 1966ஆம் ஆண்டு வெளிவந்தது
Ø
‘பூஜைக்கு வந்த மலர்’ வீரகேசரி வெளியீடாக 1971இல். வெளிவந்தது
Ø
‘உறவுக்கப்பால்’ வீரகேசரி வெளியீடாக 1975இல் வெளிவந்தது
Ø
‘உள்ளக்கோயில்’ வீரகேசரி வெளியீடாக 1983இல் வெளிவந்தது
Ø‘பிராயச்சித்தம்’ ரஜனி பப்ளிக்கேசன் வெளியீடாக 1984இல் வெளிவந்தது
Ø
‘உள்ளத்தினுள்ளே’ மட்டக்களப்பு செபஸ்ரியார் அச்சக வெளியீடாக 1990இல் வெளிவந்தது
Ø
‘கோவும் கோயிலும்’ நரசி வெளியீடாக 1990இல் வெளிவந்தது
Ø ‘தத்தைவிடு தூது’ மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சக வெளியீடு 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
Ø
‘மாது என்னை மன்னித்துவிடு’ ஸ்ரீபத்திரகாளி அம்மன் தேவஸ்தான வெளியீடாக 1993இல் வெளிவந்தது
Ø ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ 1993இல் இந்திய காந்தளகம் வெளியீடாக வெளிவந்தது
Ø
‘அகிலா உனக்காக’ மகாராஜ் அச்சகம் இந்திய வெளியீடாக 1993இல் வந்தது
Ø
‘நினைவு நீங்காதது’ மணிமேகலை பிரசுரமாக 2003இல் வெளிவந்தது.
இவருடைய கலைப்படைப்புக்களில் பல தற்போது கிடைக்கக் கூடியதாக இல்லை ஆயினும் சில படைப்புக்கள் இன்னமும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. சில ஆக்கங்கள் சூழ்நிலைகள் காரணமாக அழிந்துபோய்விட்டதாகவும் தெரியவருகிறது. இவருடைய படைப்புக்களில் கிடைத்த பல முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் பல்கலைக்கழக மாணவர்களிடத்து இவரது எழுத்துக்கள் சார்பான ஆவலை தூண்டியது. இதன் காரணமாக இவரது எழுத்துருவாக்கங்களை மையப்படுத்தியதான ஆய்வுக் கட்டுரைகள் நான்கு பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துணை சிறந்த எழுத்தாளராக விளங்கிய ந. பாலேஸ்வரி அவர்கள் 27ஆம் திகதி மாசி மாதம் 2014ஆம் ஆண்டு கலைத்துறைப் பயணத்தையும் உலக வாழ்க்கைப் பயணத்தையும் முடிததுக்கொண்டு இறையடி சேர்ந்தார்.
இந்த கட்டுரை பங்குனி 2021ல் வெளிவந்த கொலுசு மாத சங்சிகையில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.kolusu.in/kolusu/kolusu_mar_21/mobile/index.html#p=20
தமிழ் பாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக