புதன், 8 ஜூலை, 2020

உலகத்தமிழ் ஆராட்சி நிறுவன உதயம்

உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அனேகமானவர்களுக்கு தமிழ் சார்பாக உருவாகி இயங்கிக்கொண்டிருக்கும் பல அமைப்புக்கள் பற்றி தெரியும். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு அமைப்புத் தான் உலக தமிழ் ஆராய்சி நிறுவனம் என்பதும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதவேண்டும் ஏனெனில் அத்துணை பிரபல்யமானது இந்த அமைப்பு. இந்த அமைப்பானது 1964ஆம் ஆண்டு தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பல்வேறுபட்ட நாடுகளின் அறிஞர்களை இணைத்து அருட்திரு. சேவியர் நீக்கிலாஸ் ஸ்ரனிஸ்லாஸ் என்ற இயற் பெயர் கொண்ட தவத்திரு தனிநாயகம் என்ற உலகத்தமிழ் மக்களால் அறியப்பட்ட அடிகளார் அவர்களால் உருவாக்கப்பட்டது.

தமிழ் மக்களும் தமிழ் அறிஞர்களும் அதிகமாக வாழும் தமிழகம் இருக்கக்கூடியதாக அதேபோல் தனது தாயகமாகிய இலங்கை இருக்கக்கூடியதாக இதனுடைய தலைமைப் பொறுப்பை மலேசியாவிற்கு வழங்கவேண்டுமென அடிகளார் விரும்பினார். அதற்கு தெளிவான ஒரு காரணத்தையும் அவர் கொடுத்திருந்தார். தமது சொந்த மொழியையுடைய நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது தமிழ் வளர்ச்சி சார்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் போதியளவுக்க அதிகமாகவே இருக்கின்றது. அதற்கு எந்தவிதமான தடைகளும் இருக்கப்போவதில்லை. ஆனால் வேற்று மொழி பேசுகின்ற மக்கள் அதிகமாக வாழுகின்ற தமிழ் மக்கள் சென்று குடியேறி வாழ்கின்ற நாடுகளைப்பொறுத்தவரை தமிழ் வளர்க்கும் செயற்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றன. அத்தோடு அவர்களுக்கு தாம் வாழும் நாடுகளில் தமது மொழியின் எதிர்கால இருப்புப்பற்றிய அச்சமும் திகழ்வதோடு அந்த இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கான ஆர்வமும் அதிகமாகவே காணப்படுகின்றது. தமிழ் வளர்ச்சி சார்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவும் நேரிடும். ஆகவே மலேசியா போன்ற ஒரு நாட்டை தேர்வு செய்தமையானது இந்த அமைப்பு என்கின்ற தைரியத்தோடு செயற்பாடுகளில் ஈடுபட பொருத்தமாகவும் அவர்களுடைய தமிழ் வளர்க்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்கவும் உதவியாக இருக்கும் என்பதே அந்த காரணமாக கருதப்படுகிறது.
இவ்வாறு தனிநாயகம் அடிகளார் ஆரம்பித்து வைத்த இந்த அமைப்பின் ஆரம்ப கால செயற்பாடுகளே இன்று உலகளாவிய ரீதியில் தமிழின் இருப்பை கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பே உலகத் தமிழ் ஆராட்சி மாநாட்டை நடாத்தத் தொடங்கியது. மொத்தம் 26 தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை உருவாக்கியிருந்தனர். இதன் உருவாக்கம் சார்பான முயற்சி 1963இல் அப்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகவிருந்த எம். பக்தவத்சலம் அவர்கள் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு அவர் அதிகம் கரிசனை காட்டாத காரணத்தால் 1964ஆம் ஆண்டு தை மாதம் 7ஆம் திகதி; டில்லியில் தனிநாயகம் அடிகளாரின் முழு முயற்சியின் பயனாக அடிகளாராலேயே உருவாக்கப்பட்டது குறிப்பிடக்கூடிய ஒரு விடயமாகும். தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கமில் சுவெலபில் மற்றும் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்நாள் துணைவேந்தர் . . சுப்பிரமணியம் ஆகியோரும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர்களாக வருகைதந்து கலந்துகொண்டு செயற்பட்டதாக குறிப்புகள் மூலம் அறியக்கிடைக்கிறது.
உலகத் தமிழ் ஆராட்சி மன்றத்தின் முதலாவது தலைவராக பிரான்ஸ் நாட்டின் தமிழ் அறிஞர் பேராசிரியர் ஜேன் பிலியோசா அவர்களும் துணைத் தலைவர்களாக மு. வரதராசன், பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், ஒக்ஸ்போட் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் தோமஸ் பரோ, மற்றும் அமெரிக்க நாட்டின் பேராசிரியர் எமனோ ஆகியோரும் இணைச் செயலாளர்களாக தனிநாயகம் அடிகளாரும் செக்கோசெலவாக்கியா நாட்டின் பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டு செயற்பட்டனர்
தவத்திரு தனிநாயகம் அடிகள் செயலாளராக இருந்து கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஆராட்சி மாநாட்டை 1966ஆம் ஆண்டு சித்திரை 16முதல் 23ஆம் திகதிவரை மலேசிய அரசின் அனுசரணையோடு தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடாத்தி வைத்தார். இந்த மாநாட்டை மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமைதாங்கி நடாத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது முக்கிய அம்சமாகம். இதுவரை 8 மாநாடுகள் நடந்தேறியுள்ளன. அடிகளார் உயிர் வாழ்ந்த காலப்பகுதிக்குள் நான்கு மாநாடுகள் நடந்தேறின. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாநாடு நாடாத்துவது என்பதே ஆரம்ப யோசனையாக இருந்தது ஆயினும் சூழ்நிலைகளும் அமைப்பின் நிதி நிலை இடம் தராமையும் இதுவரை 25ற்கும் அதிகமாக நடந்தேறவேண்டிய மாநாடுகள் நடக்காமைக்கு காரணமாக அமைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1974ஆம் ஆண்டு தை மாதத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது அதில் பங்குபற்றியிருந்த தமிழ் ஆளுமைகள் பலர் ஒன்றுகூடி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை ஆரம்பித்தனர் எனவும் இதற்கான முயற்சியை யாழ் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் மேற்கொண்டதாகவும் ஈழத்துப் பூராடனார் தனது ஈழத்துப் பூராடனாரின் உலகளாவிய தமிழ் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

தமிழ் பாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக