"பெற்றோர், ஆசிரியர், மாணாக்கர், கனவான்கள் மற்றும் அரச அதிகாரிகட்கு அவசியமான பாடம் புகட்டும் பள்ளிக்கூடம்தான் இந்த ராட்சசி திரைப்படம்”
அறிமுகம்
ராட்சசியில் ஜோதிகா |
விமர்சனம் என்று வருகின்றபோது எந்த விடயத்தைப்பற்றி விமர்சிக்கிறோமோ அதைப்பற்றி நேரான பார்வையில் அந்த விமர்சனத்தை முன்வைக்கின்றபோதுதான் எதிர்காலத்தில் நாம் எதிர்பார்கின்ற மாற்றங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றங்களையாவது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களில் காணக்கூடியதாக இருக்கும் என்பது எனது ஆளமான நம்பிக்கை. அத்தோடு விமர்சனங்கள் ஒரு படைப்பாளியை
வசைபாடுவதற்காகவோ அல்லது அவருக்கு துதிபாடுவதற்காகவோ மேற்கொள்ளப்படுவதாக இருக்ககூடாது. அதற்குமாறாக நல்ல சாதகமான மாற்றங்களை உருவாக்குவதற்கான பங்களிப்பை வழங்குவதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் நாம் முன்வைக்கும் விமர்சனம் காத்திரமான மாற்றங்களை படைப்பாளிகளின் எதிர்காலப்படைப்புகளில் உருவாக்கும்.
இங்கு நான் முடிந்தளவு சுருக்கமாக எனது விமர்சன கருத்துக்களை அண்மையில் வெளிவந்த “ராட்சசி” திரைப்படம் பற்றி தருவதற்கு முனைந்திருக்கிறேன். பொதுவாக ராட்சசி போன்ற திரைப்படங்கள் கண்டிப்பாக எமது சமூகத்திற்கு தற்போதய காலகட்டத்தில் தேவையான ஒரு திரைப்படமாகவே நான் பார்க்கிறேன். படத்தினுடைய பெயரைப்பார்த்துவிட்டு பல்வேறு விதமான கற்பனைகளை மனதிலே உருவாக்கிக்கொண்டு அந்த கற்பனைகளுக்கு அமைவான காட்சிகளை எதிர்பார்த்துக்கொண்டு திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களுக்கு இது அநேகமாக பெருத்த எமாற்றத்தையே தரும் ஒரு திரைப்படமாக இருக்கும். ஏனெனில் பெயரை வைத்துக்கொண்டு படத்தின் காட்சிகளை கற்பனை செய்வது எல்லா திரைப்படங்களுக்கும் பொருந்துவதில்லை. அதுபோலத்தான் இந்த திரைப்படமும். நான்கூட ஆரம்பத்தில் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு ஆக்ரோசமான உணர்வுகளையுடைய படமாக இருக்கும் என்றுதான் இந்தப் படத்தின் பெயரைப்பார்த்து கற்பனை செய்து வைத்திருந்தேன் ஆனால் படத்தை பார்த்தபோது எனது கற்பனைகள் அனைத்திற்கும் மாறுபட்டதாக திரைப்படம் அமைந்திருந்தது. அதற்காக படத்திற்கும் படத்தின் பெயருக்கும் சம்பந்தமே இல்லையென்றாகிவிடாது. இந்தத்திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாத்திரத்தின் தன்மைக்கு அமைவாகவே படத்தின் பெயரை திரைக்கதை எழுத்தாளர் புனைந்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.
படத்தின் பங்குபற்றுனர் குழு
இயக்குனர் எஸ் வை. கௌதம் ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ராட்சசி. ட்ரீம் வாரியர் என்ற நிறுவனத்தின் எஸ். ஆர். பிரகாஸ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஜோதிகா பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுவதும் ஜோதிகா பாத்திரமான ராட்சசியை மைப்படுத்தியே கதையை நகர்தியிருக்கிறார் இயக்குனர். ராட்சசி ஒரு பாடசாலையின் அதிபர் என்ற கதாபத்திரம் இதுவே பிரதான பாத்திரமாக இருக்கும் அதேவேளை அதிபராக நியமனம் பெற்று வருவதற்கு முன்னர் ஒரு உயர்நிலை இராணுவ அதிகாரி என்கிற கதாபாத்திரமும் ஜோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது அத்தோடு பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு மூத்த ஆசிரியையாக வேடமேற்றிருக்கிறார். ஹரிஸ் பெரடை திரைப்படத்தின் பிரதான வில்லனாக ஒரு தனியார் பாடசாலையின் இயக்குனர் கதாபாத்திரத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியருக்கிறார். சத்யன் மற்றும் முத்துராமன் ஆகியோர் ஏனைய ஆசிரியர் பட்டாளத்துள் முகம் தெரிந்த மற்றும் இருவர் இவர்களோடு அருள்தாஸ் இவர் அந்தப்படத்தில் ஒரு அரசியல்வாதியாக வலம்வருகிறார். ‘அண்ணாத்துரை’ செந்தில் இடையிலே ஒரு குறிப்பிட்ட காட்சியில் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி நிகழ்வு ஒன்றின் நடுவராக பாத்திரம் ஏற்று தனது பங்கிற்கு குறுகிய நேர நடிகராக வந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளராக சீன் ரோல்டன் செயற்பட்டிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய். படத்தொகுப்புப் பணியை படத்தொகுப்பாளர் பிலேமின்ராஜ் மேற்கொண்டிருக்கின்றார். யுக பாரதி மற்றும் தனிக்கொடி போன்ற பாடல் ஆசிரியர்கள் பாடல்களை அமைத்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளுக்கான சண்டைப்பயிற்சியை சுதீஸ் நெறிப்படுத்தியிருக்கிறார். சாண்டி மாஸ்டர் நடனக்காட்சிகளை நெறிப்படுத்தியிருக்கிறார்.
படம்பற்றிய அலசல்
ஆர் பதூர் என்ற ஊரின் ஒரு அரசினர் பாடசாலை அந்தப்பாடசாலை கல்வி, விளையாட்டு பாடசாலைக்குரிய ஏனைய விடயங்கள் பலவற்றிலும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. அந்தப்பாடசாலையை இலக்கு வைத்து பாடசாலையின் அதிபராக பதவி ஏற்று வருகிறார் ஜோதிகா. இந்தப்பாத்திரத்தில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் கீதாராணி. மிகவும் பின்தங்கிய நிலையில் சீர்கெட்டுப் போயிருக்கும் இந்த பாடசாலையில் இருக்கக்கூடிய சகல குறைபாடுகளையும் நீக்கி அப் பாடசாலையின் தரத்தை உயர்த்தும்பொருட்டு சகலவழிகளிலும் தனித்து நின்று போராட அடியெடுத்து வைக்கிறார் ஜோ. அந்த முயற்சியில் அவர் முகம்கொடுக்கும் பிரச்சனைகளை தத்துரூபமாக எடுத்துக்காட்டுகிறார் இயக்குனர் அதற்கேற்றாற்போல தனது தனித்துவமான நடிப்பை எந்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடித்து வெற்றியீட்டிக்கொடுப்பதில் ஒரு பெண்ணாக தான் சளைத்தவரல்ல என்பதை வித்தியாசமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டியுள்ளார் ஜோதிகா. இந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை சொல்வதுதான் படத்தின் கதைச்சுருக்கம்.
ஜோதிகாவைப் பொறுத்தவரை நடிப்பில் திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்ற இரண்டு பாகங்களைகொண்டவர். முதற்பாகத்தில் வேறு கோணத்தில் ரசிகர்களை கவர்ந்து அவர்கள் மனதில் குடிகொண்ட ஜோ சிலகாலம் நடிப்பிற்கு ஓய்வுகொடுத்து இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார். ஆரம்பித்ததில் இருந்து இரண்டாம் பாகத்தை வேறொரு கோணத்தில் ரசிகர்களைகொள்ளை கொள்ளும்படியாக தனது திறனை வெளிக்காட்டி வருகிறார். படத் தெரிவுகள் மூலம் வெவ்வேறு விதமான ரசிகர்கள் மனதில் ஆழமாக தடம்பதிக்கக்கூடிய பாத்திரங்களை மிகவும் நுட்பமாக தேர்வு செய்கிறார். இதற்கு முன்னர் வெளிவந்த ஒவ்வொரு படத்தையும் கவனித்தால் இது புலப்படும்.
ராட்சசி படத் தெரிவும் அவ்வாறே அமைந்திருக்கிறது. இதில் கொடுக்கப்பட்ட பாத்திரம் ஜோதிகாவிற்கென்றே உருவாக்கப்பட்டது போன்ற பிம்பம் படத்தை பார்க்கின்றபோது ஏற்படுகிறது. இதில் அவரது கதாபாத்திரம் ஒரு சர்வாதிகாரத் தலைமையை உணர்துவது போன்ற வடிவத்தில் ஏற்படுத்தப்பட்டு அவரது நடிபாகமும் அவ்வாறே அமைந்துள்ளதால் வெளியில் இருந்து அவரைப் பார்ப்பவர்களின் பார்வைக்கு அவர் ஒரு ராட்சசியைப்போல் தென்படுகிறார். அந்த பிம்பமே ‘ராட்சசி’ என்று படத்தின் பெயராக உருவாக்கப்பட்டிருக்கிறது. கதாசிரியர் ஒவ்வொரு காட்சிகளையும் ஒரு ஒழுங்கில் உருவாக்கி நெறிப்படுத்தியிருப்பது படத்தின் போக்கிலே துல்லியமாகத் தெரிகிறது. பாடசாலையின் முன்னேற்றத்தில் அரசினுடைய பங்கு மறுக்கப்;பட்டிருப்பது காட்சிகள்மூலமாக யாருடைய மனதும் புண்படாதவாறு இங்கு கையாளப்பட்டிருக்கிறது என்றே கூறவேண்டும். அந்த நிலைமையை சீர்செய்வதற்கு பெற்றோர் மாணவர்கள் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பதையும் அதன்மூலம் அரசின் பங்களிப்பை எவ்வாறு மீளகொண்டுவரலாம் என்பதையும் இதில் நாசுக்காக காட்டியிருக்கிறார் கதாசிரியர்.
அடுத்து பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள்> மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையின்றி கடமைக்காக செயற்படுவது அதனால் பாடசாலையின் முன்னேற்றத்தில் பின்னடைவு அதே வேளை அந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி ஒவ்வொருவரையும் மனமுவந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வைப்பதில் உள்ள தடங்கல்கள் அதனை வெற்றிகொண்டு அவர்களை செயற்பட வைக்கும் போது ஏற்படுகின்ற சிறந்த மாற்றங்கள்> மாணவர்களின் கவனயீனம் மற்றும் அசண்டைத்தனமான போக்கு> வழிகாட்டிகளின் சரியான வழிகாட்டுதலின்மை இதன் காரணமாக அவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய தடை அதிலிருந்து அவர்களை விடுபட செய்வதில் ஏற்படும் பின் விளைவுகள்> அதற்கு முகம்கொடுத்து அவர்களுக்குள் மாற்றத்தை கொண்டுவரும்போது அவர்களையறியாமலே அவர்கள் அடையும் வெற்றி போன்றவை இந்த திரைப்படத்தில் மிகச்சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இவ்வாறான மாற்றங்களின் அவசியம் பற்றி சமூகத்திற்கு இந்தப் படத்தின் மூலமாக தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான பாடசாலைகளின் முன்னேற்றத்திற்குள் தடையாக தனியார் பாடசாலைகள் எவ்வாறு தங்கள் தலைகளை புகுத்துகின்றன அதற்கு என்ன காரணம் அவ்வாறான சூழலுக்கு முகம்கொடுத்து எப்படி வெற்றிகொள்வது மற்றும் அதன்மூலமாக அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த மாற்றங்கள் எவ்வளவு பங்களிப்புச் செய்கின்றது போன்ற பலவிடயங்கள் இங்கே சிறப்பாக கையாளப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் மிகவும் நுணுக்கமாக காண்பிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
ஒரு நிறுவனத்திற்குள் பணிபுரியும் வெவ்வேறு விதமான குணவியல்புகளைக்கொண்ட ஊழியர்களை இந்த பாடசாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் மூலமாக கதாசிரியர் காண்பிக்க எடுத்த முயற்சி வரவேற்கக்கூடியது. குறிப்பிட்ட சில பாத்திரங்கள் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அந்த நிலைமைகள் இங்கு காண்பிக்கப்பட்டிருக்கின்றன. எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு தடையாகவும் அவருடைய பணியை வேறு யாருக்கம் விட்டுக்கொடுக்க முடியாது என்ற மமதையோடு செயற்படும் ஊழியரை இதில் வரகூடிய ஒரு ஆசிரியர் மூலம் காண்பிக்கிறார் கதாசிரியர் என்றுதான் சொல்லவேண்டும். அதைப்போலவே பணம் மட்டுமே இலக்காகவும் பாடசாலை வளர்ச்சியில் அக்கறையில்லாமலும் ஆசிரியர்களையே தன்வசப்படுத்த முயற்சிக்கும் மற்றொரு ஆசிரியர். உப அதிபர் பாத்திரமேற்று நடிக்கும் கவிதா பாரதி தனது வில்லத்தனமான நடிப்பை சமயோசிதமாகவும் கச்சிதமாகவும் ஒப்பேற்றியிருக்கிறார். இவர்தான் படத்தின் வில்லனோ என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி இறுதியில் அந்த நினைப்பில் ஏமாற்றத்தை தோற்றுவித்திருக்கிறார் எழுத்தாளர். ஒரு கட்டத்தில் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்படும் நிலைமைக்கு சென்ற இவரது பாத்திரம் அத்தோடு மட்டுப்படுத்தப்படுகிறது மேற்கொண்டு பாதிப்படைந்தவர் செய்யக்கூடிய தீவிரப்போக்குடைய செயல்களில் இவர் பெரிய அளவில் ஈடுபட வைக்கப்படவில்லை என்பது ஏன் என்று புலப்படவில்லை. உண்மையில் இவரையே பிரதான வில்லனாக இறுதிவரை நகர்த்தியிருக்கலாம்.
தான் எல்லா விசயத்திலும் சரியாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு ஏனையவர்களை ஒவ்வொருவிதத்தில் கிண்டலடித்து காலத்தை ஓட்டும் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் சத்யன். இவர் மூலமாக காதாசிரியர் படத்தில் சிரிப்புக் காட்சிகள் இல்லாத குறையை நிவர்த்திசெய்ய முயற்சித்திருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது ஆனால் அது கைகூடவில்லை என்பதே எனது கருத்து. மற்றொருவர் பாடசாலை வரவு பதிவேட்டில் தனது கையெழுத்தை வைத்துவிட்டு தனது தனிப்பட்ட வருமானமீட்டும் தொழிலில் அடிக்கடி காலத்தை கழிப்பதிலேயே குறியாக இருக்கிறார் இப்படி பல்வேறு குணாதிசயங்களை தம்மகத்தேகொண்டவர்களை ஒவ்வொரு பாத்திரத்தின் மூலமாகவும் இந்த படத்தில் காண்பிக்க முயற்சித்திருக்கிறார் இந்தப்படத்தின் கதாசிரியர். இவையெல்லாமே நாளாந்தம் எம்மைச்சூழ இடம்பெற்றுக்கொண்டு இருக்கக்கூடிய விடயங்களே. படத்தை பார்க்கின்றபோது இவையெல்லாம் சமூகத்தில் நாளாந்தம் நாம் காணும் வெவ்வேறு நபர்களை ஞாபகப்படுத்தும்படியாக நமது நினைவுக்கு வந்துபோகிறது.
இந்தப்படத்தினுடைய வில்லனை ஏனைய படங்களில் வரும் வில்லன்களைபோன்று அடாவடித்தனங்கள் அடிதடி> மிரட்டல்> கொலை என்று மிகக்கோரத்தனமாக காண்பிக்காமல் தனது வெற்றியை நிலைநாட்ட சில விரும்பதகாத வழிமுறைகளைக் கையாளும் வில்லனாக மட்டுமே காண்பித்திருக்கிறார் ஆசிரியர். அதற்கு பூக்கொத்து கொடுத்து ஜோதிகாவிற்கு அனுப்பி வைக்கும் காட்சியை மற்றொரு ஆசிரியார் நானும் ஏதோ வெடிகுண்டு என்று நினைத்தேன் என்று சொல்ல, சின்னஞ்சிறுசுகளை கொல்லும் ஈவிரக்கமற்ற கொலைகாரன் என்று நினைத்தாயாட என்னை என் முன்னே நிற்காதே போடா வெளியே என்று கூறி கடிந்து துரத்திவிடும் காட்சி உண்மையில் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. அந்தக்காட்சி சற்று வித்தியாசமாக மனதை சாந்தப்படுத்தும் காட்சியுமாக அமைந்திருக்கிறது.
ஆட்டோ ஓட்டுனராக வரும் மூர்த்தி ஜோதிகா யார் என்றே தெரியாமல் அளவுக்கதிகமாக அரச பாடசாலைகளின் நிலைமைகள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கைகள் பற்றியெல்லாம் பேசுவது நாம் அன்றாடம் எமது வாழ்கையில் சந்திக்கும் ஒரு சராசரி ஆட்டோ சாரதியை நினைவுபடுத்துகிறது. இறுதியாக ‘ஜோ’தான் தலைமையாசிரியர் என்பது தெரியவரும்போது ஆச்சரியப்பட்டு ஜோதிகாவை ராட்சசி என கூறவைத்து அவர்மூலமாகவே படத்தின் பெயர் இதனால்தான் அப்படி அமைந்திருக்கிறது என்பதை நாசுக்காக வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர். இந்த திரைப்படத்தில் குறிப்பிடும் படியாக சிரிப்புக்காட்சிகள் இல்லாத போதிலும் இரண்டாம் வகுப்பு சிறுவனின் செயல்கள் வேறு வடிவத்தில் ரசிகர் மனங்களில் அந்தக்குறையை இல்லாமல் செய்திருக்கிறது.
இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தனது இசையமைப்பு திறனை திரைப்படத்தின் போக்குக்கேற்ப சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறலாம். படத்தின் தேவைக்கும் கதையமைப்பிற்கும் ஏற்றாற்போல ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய் தனது பங்கை சரியாக செய்து முடித்திருக்கின்றார். திரைக் கதையின் போக்கு ஆச்சரியம், திகில், எதிர் பாராத மாற்றம் போன்றவை இல்லாமல் ஒரே தொடராக போய்க்கொண்டிருக்கின்ற காரணத்தால் அதற்கமைய படத்தொகுப்புப் பணியை படத்தொகுப்பாளர் பிலேமின்ராஜ் மேற்கொண்டிருக்கின்றார் என்றுதான் எண்ணத்தோன்றகிறது. உணர்ச்சி மேலோங்கக்கூடிய இடங்களில் கத்தரிக்கவேண்டியவற்றை சரியாக கத்தரித்து சேர்க்கவேண்டியவற்றை சேர்த்து வியக்க வைத்திருக்கிறார். இதை விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெறுவது பேச்சுப்போட்டியில் வெற்றிபெறுவது போன்ற காட்சிகளை பார்க்கும்போது தெளிவாக புலப்படுகிறது. பாடல்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றே கூறவேண்டும். ஓரளவு சிறப்பாக யுக பாரதி மற்றும் தனிக்கொடி போன்ற பாடல் ஆசிரியர்கள் பாடல்களை அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் போக்கிற்கேற்பவும் முதன்மைப் பாத்திரத்தின் சவால்களையும் அதன் வெற்றிகளையும் மையப்படுத்தியதாக சற்று விறுவிறுப்பான உணர்ச்சிமிக்க பாடல்களை படத்தில் சேர்த்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக படத்தின போக்கு இருந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றகிறது. படத்தின் கதைக்கமைவான சண்டைக்காட்சிகளுக்கு பொருத்தமாக சுதீஸ் சண்டைப்பயிற்சியை சரியாக நெறிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. சாண்டி மாஸ்டர் காட்சிகளுக்கேற்ப நடனக்காட்சிகளை உருவாக்கி தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் அவரவர் பங்களிப்புகளை படத்தின் கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொருவரும் வழங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.
படம் சிறப்பாகவும் வரவேற்கக்கூடியதாகவும் சமூகத்திற்கு அவசியமான கதை அமைப்பு உள்ளதாகவும் இருக்கிறது என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாக கூற முற்பட்டாலும் சில தர்க்கரீதியாக பேசப்படக்கூடிய விடயங்களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக ஒரு பாடசாலையில் அனைத்து ஆசிரியர்களுமா பாடசாலையில் அக்கறையின்றி தங்கள் பணியை செய்பவர்களாக இருப்பார்கள் என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. அப்படி அமைவதற்கு வாய்ப்பே இல்லை. ஆகையால் கதாசிரியர் இதனை கவனத்தில் எடுத்திருக்கவேண்டும். அதேபோல அரசு பள்ளியில் கற்கும் மாணவர்கள் எல்லோரும் தங்கள் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தாங்களாக முயன்று முன்னேறும் மாணவர்கள் கட்டாயமாக இருக்கத்தான் செய்வார்கள்.
மாணவர்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவித்து சண்டையை உருவாக்கும் சாதி வேற்றுமை அதனால் ஏற்படும் மாணவர்களுக்கிடையிலான சண்டை அவர்களின் கைகளிலே கட்டியிருக்கும் நூல் போன்றவை அப்படியே சமுத்திரக்கனியின் ‘சாட்டை’ படத்தை நினைவு படுத்துகிறது. இந்தக்காட்சியை தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றகிறது.
பூர்ணிமா அவர்களுக்கு நிறையவே வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான தேவை கதையின் பிரகாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு படத்தில் பெரிய அளவில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றே கூறவேண்டும். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காட்சிக்குள்ளேயே ஜோதிகாவின் முன்னைய காதலும் அதன் மூலம் பூர்ணிமாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையிலான உறவும் தெளிவாக ஆசிரியரால் வெளிக்கொணரப் பட்டிருக்கிறது.
மற்றொரு முக்கியமான அம்சம் தான் திரைக்கதையின் பல பகுதிகள் வேறொரு படத்தில் இருந்து எடுக்கப்பட்டு அந்த கதை இப்படம் படமாக்கப்பட்ட பிரதேசத்தின் நிலைமைக்கமைவாக மாற்றப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. அனேகமாக நம்மவர்கள் ஒரு குறிப்பிட்ட சில ஆங்கிலப்படங்களைத் தவிர ஏனைய ஆங்கிலப்படங்களைத் தேடிப்பார்க்கும் வழங்கம் குறைவே. இந்த வகையில் ராட்சசி படத்தின் அனேக பகுதிகளை அப்படியே வெளிகொண்டுவந்த ஒரு ஆங்கிலப்படம் பல ரசிகர்களுக்கு அதே வேளை விமர்சகர்களுக்கும் புலப்படாமலே போயிருக்கிறது. சில விமர்சகர்கள் இந்தப் படத்தை சமுத்திரக்கனியின் சாட்டை படத்தின் சில காட்சிகளோடு ஒப்பிட்டிருக்கிறார்கள் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஆங்கிலப்படமாகிய லீன் ஒன் மீ (Lean On Me) திரைப்படம் ராட்சசியை பார்க்கும்போது அப்படியே கண்முன்னே மீண்டும் ஓடுகிறது. இந்த திரைப்படம் ஏன் யாருடைய நினைவிற்கும் வரவில்லை என்று மனதில் தோன்றுகிறது.
1979ஆம் ஆண்டு மீகேல் சீபர் (Michael Schiffer) என்பவருடைய திரைகதை ஜோண். ஐp. அவில்சென்(John G. Avildsen) என்பவரின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லீன் ஒன் மீ (Lean On Me). மோர்கன் ப்ரீமான் (Morgan Freeman) என்ற நடிகர் ஜோ கிளாக் (Joe Clerk) என்ற பெயரில் ஜோதிகாவின் பாத்திரத்தில் அதாவது ஒரு சர்வாதிகாரமிக்க தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சீர் கெட்டுப்போய் இருந்த பாடசாலையை சீர்படுத்தி மாணவர்களின் ஒழுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிகப்படியான மாணவர்களை பெறுபேறுகளில் முன்நிலைக்கு கொண்டுவந்து அந்தப் பிரதேசத்தில் முதல் நிலைக்கு பாடசாலையை கொண்டு வருவதே படத்தின் பிரதான கதை. தரம் கெட்டுப்போயிருந்த பாடசாலை கட்டடம் மற்றும் சூழலை சீர்செய்தல்> கற்பித்தலில் அக்கறையற்ற ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி சரியான அக்கறையுள்ள ஆசிரியர்களாக மாற்றுதல், அதிபருக்கெதிராக கிளர்தெழும் பெற்றோரையும் சமூகத்தின் சில முக்கிய பிரமுகர்களையும் எதிர்த்து நின்று இறுதியில் அவர்கள் மாற்றமடையவும் வாயடைத்தும் போகவும் செய்தல்> போதைப்பொருள் வியாபாரம் செய்பவரை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தல், புதிய வடிவத்திலான கற்பித்தல் முறைகளை பாடத்திட்டங்களில் புகுத்தி ஆசிரியர்களை அதில் ஈடுபடுத்தி மாணவர்களை ஆர்வத்துடன் கற்க வைத்தல்> பரீட்சை முடிந்ததும் அதிபர் கைது செய்யப்படல்> அதற்கெதிராக மாணவர்களும் பெற்றோர்களும் கிளர்தெழுந்து மறியல்செய்தல் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் அனேகமாக அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்ததாக பெறுபேறுகள் வெளிவரல் என்று இத்தனை காட்சிகளும் ராட்சசி திரைப்படத்தில் சில மாறுதல்களுடன் ஒப்புவிக்கப்பட்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாக லீன் ஒன் மீ திரைப்படத்தை ஒருமுறை பார்த்தால் தெளிவாக அடையாளம்கண்டு புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இரண்டு படங்களிலும் சீர்கெட்டுப்போயிருக்கும் ஒரு பாடசாலையில் இப்பேற்பட்ட மாற்றங்களை ஒரு சர்வாதிகார தலைமைப்போக்கு மூலமாகவே மாற்றுவதற்கு முயல்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள் ளமையையும் மிக முக்கியமான ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன்.
நிறைவு
மேலே தந்திருக்கக்கூடிய விடயங்களும் என்னால் இங்கு குறிப்பிடப்படாது தவறவிடப்பட்ட விடயங்களும் அடங்கியதே ராட்சசி திரைப்படம். படத்தின் இறுதியிலே “தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் ஒரு பகுதியாகிறார்கள்> எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்” என்ற வாக்கியம் போஸ்டராக காண்பிக்கப்படுவது அனைவர் மனங்களையும் ஊடுருவி தைக்கும்படியாக அமைந்திருந்தது. ராட்சசி ஒரு தனித்துவமான தற்கால மாணவ மற்றும் ஆசிரிய சமூகத்திற்கும் தங்கள் பரதேச பாடசாலைகளின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்ய தவறுகின்ற பொதுநிலையினர்க்கும், அனைத்துப் பாடசாலைகளையும் அரசின் பங்களிப்பு நிதி ஒதுக்கீடு என்று வரும்போது சம அந்தஸ்தில் பார்க்கத் தவறும் தொடர்புடைய அரச அதிகாரிகட்கும் பாடம் புகட்டக்கூடிய ஒரு சிறந்த படமாகவே நான் கருதுகிறேன். இவை போன்ற மேலும் பல சீர்திருத்தத்தை மையப்படுத்திய படங்கள் வெளிவருவது நவீன காலத்தைய கலாசாரத்தில் நாட்டம்கொண்டு அதன் பின்னே செல்லும் சமூகத்திற்கு இன்றியமையாததே.
தமிழ் பாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக