பருவம் மூன்று (Season
3)
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
பிக்போஸ் தமிழ் 3 பங்குபற்றுனர் |
இப்போது நாங்கள் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பருவத்திற்கு செல்வோம். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி பெரும் தலை (Bigg Boss) பருவம் 3 நிகழ்வு கோலாகலமாக பிரமாண்டமான மண்டபத்தில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க ஆரம்பமாகியது. பங்கு பற்றுனர் அறிமுகமும் விசேட கலைநிகழ்வுகளும் இதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டு இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் இந்த பருவத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பங்குபற்றுனர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
பருவம் மூன்றின் பங்குபற்றுனர்கள்
பருவம் மூன்றிற்கான பங்குபற்றுனர்கள் கலைத்துறையுடன் தொடர்புபட்ட வெவ்வேறு பிரிவுகளில் இருந்தும் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். நாட்டியக் கலைஞர்கள், நடிகர்கள், இசையமைப்பாளாகள்;
, பாடகர்கள், செய்தி வாசிப்போர், மாடல்கள் மற்றும் இயக்குனர்கள் என பலர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில் மிகவும் முக்கியமான விடயம் யாதெனில் இலங்கையைச்சேர்ந்த இருவர் இம்முறை இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இலங்கையின் பிரபல முன்னணி வானொலி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா மற்றும் பிரபல ஆண் மாடல் தர்சன் தியாகராஜா போன்றவர்களே அவர்கள். இவர்கள் உள்வாங்கப்பட்ட
மையானது இலங்கை ரசிகர்களதும் புலம்பெயர் தமிழர்களதும் ஆதரவை இந்த நிகழ்சியில் அதிகரிப்பதற்கே என்பது பொதுவான அபிப்பிராயமாக
திகழ்கிறது.
பருவம் மூன்று ஆரம்பித்து முதல் வாரம் சற்று அமைதியாக நிகழ்வுகள் நகர்ந்துகொண்டிருந்தது. முதல் வாரத்தில்பேசும்படியாக பெரியளவிலான சர்ச்சைகள் இல்லாமலே நிகழ்வு நகர்ந்தது. தற்போது 10 நாட்கள்
கடந்த நிலையில் படிப்படியாக நிகழ்சி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தற்பொழுதுதான் பங்கு பற்றுனர்களின் உண்மை முகங்கள் மெதுவாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. முதலாவது பருவத்தில் இருந்த சுவாரஷ்யம் இரண்டாவது பருவத்தில் சோபையிழந்தே காணப்பட்டது எனலாம். ஆயினும் மூன்றாவது பருவம் முதல் பருவத்தைப் போலவே விறுவிறுப்பாக நகர்வது போல் தெரிகிறது. நாளுக்கு நாள் நிகழ்சியின் சுவாரஷ்யம் அதிகரித்தே செல்கிறது.
இம்முறை நிகழ்சியல் பங்குபற்றும் மோகன் வைத்தியநாதன் முதல் பருவத்தில் பங்குபற்றிய சினேகனின் இடத்தை நிரப்புவார்போல் தெரிகிறது. இவர் வயதால் சற்று மூத்தவராக இருக்கின்ற போதும் அவருடைய செயற்பாடுகள் சில சந்தர்ப்பங்களில் சினேகனை நினைவுபடுத்துகின்றது. அது மட்டுமன்றி அவ்வப்போது சிறிய அளவிலான தூண்டிவிடும் சகுனி வேலையையும் பங்குபற்றுனர்மத்தியல் உருவாக்கிவிடுகிறார்.
முதல் பருவத்தில் பங்குபற்றிய ஆரவ் இடத்தை நிரப்புவதற்கென்றே தெரிவு செய்யப்பட்டு உள்ளே கொண்டுவரப்பட்டவர்போல் கவின் என்ற பங்குபற்றுனர் தென்படுகிறார். இவர் ஒரே நேரத்தில் மூன்று பெண் பங்குபற்றனர்களோடு தனது காதல் லீலைகளை ஆரம்பித்திருக்கிறார். அவர்களுள் கூடுதலாக இலங்கையின் லொஸ்லியா பக்கம் அதிக கவனத்தை இவர் காட்ட முயற்சிக்கிறார். ஆனாலும் லொஸ்லியா இன்னமும் பிடிகொடுக்காமல் அவருக்கு அல்வா கொடுத்து வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணா என்று வேறு அழைத்து கவினை கடுப்பேத்தியிருக்கிறார். இந்த அண்ணா சென்டிமென்டால் கவின் குளம்பிப்போயிருக்கிறார். இது மாறுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
முதலாம் மற்றும் இரண்டாம் பருவங்களில் வில்லிகள் பலர் இருந்தார்கள் சகுனிகளும் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. முதலிரண்டு பருவங்களையும் பார்த்த ரசிகர்களுக்கு அவர்கள் யார் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். அதைப்போலவே இம்முறையும் சிலர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் வனிதா விஜயகுமார் தான் இம்முறை முன்நிலை வகிக்கிறார். அவர் தனது வில்லித் தனத்தை தற்போதே காட்டத் தொடங்கிவிட்டார். வில்லி வேலையுடன் சகுனி பாத்திரத்தையும் கச்சிதமாக அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறார். இவரது வில்லித்தனத்தையும் சகுனி வேலையையும் லோஸ்லியாவிடத்திலும் இவர் காட்டத் தொடங்கிவிட்டிருருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான ஒன்று. லொஸ்லியா இரட்டை வேடம் போட்டு இங்கும் அங்கும் கோள் சொல்கிறார் என்று ஒரு புரளியை தன் சகபாடிகளிடம் விதைத்திருக்கிறார் இவர். இதனால் இலங்கை ரசிகர்கள் மிகவும் கடுப்பாகிப்போய் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வனிதாவிற்கு எதிராக பல மீம்ஸ்கள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சேரன் பொதுவாக எல்லோராலும் நல்ல நபராகவே பார்க்கப்படுகிறார். அவர் மீது சக பங்குபற்றுனர்களில் அனேகமானவர்கள் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அமைதியாக அவர் செய்யும் சில வில்லத்தனங்கள் வெளியே இரக்கும் ரசிகர்களுகக்குத்தான் தெரிகிறது. தனது அப்பா போன்றவர் சேரன் என்று கருதிய லொஸ்லியாவையே அடுத்த முறை வெளியேற்றப்படவேண்டியவராக சேரன் தெரிவு செய்தது இந்த வில்லத் தனத்திற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது.
இலங்கையின் பங்குபற்றுனர்கள் இருவரும் ஓரளவு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வியைளாடிக்கொண்டிருப்பது புலனாகிறது. தர்சன் அவ்வப்போது பொதுவான கருத்துக்களையும் பிரச்சனைகளின்போது சரியான தீர்வுகளையும் மிக நிதானமாக முன்வைப்பது அவரது சிறந்த திறணை வெளிப்படுத்துகிறது. லொஸ்லியாவைப் பொறுத்தவரை இவர் முதல் இரண்டு பருவங்களையும் ஒழுங்காகப் பார்த்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. முதல் பருவத்தின் வெற்றிபெறக்கூடியவராக இருந்து இடையில் வெளியேறியவராகிய ஓவியாவையும் இரண்டாவது பருவத்தின் வெற்றியாளர் ரித்விக்காவையும் இவர் பின்பற்றுவதுபோல இவருடைய சில செயற்பாடுகள் தெரிகிறது. அது மட்டுமல்ல முதல் வாரத்திலேயே இவர் அனேகமான ரசிகர்களின் அபிமானத்திற்குரியவராக மாறிவிட்டார். இவருக்காக லொஸ்லியா ஆமி என்ற அமைப்பையும் உருவாக்கிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். இவருக்கெதிராக தற்போது வீட்டிற்குள்ளே உருவாகியிருக்கும் சூழ்சிகள் ஒரு கட்டத்தில் ஓவியாவின் நிலைக்கு இவரைகொண்டு சென்று அனேகரின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு ஓவியாவைப்போல் இடையிலேயே தானாகவே வெளியேறி விடுவாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஒரு காட்சியில் இவர் மற்றொரு ஆணோடு இணைந்து ஜோடி நடனம் (Couple Dance) ஆடுவதும் காண்பிக்கப்பட்டது இவர் மெதுவாக அந்த சூழலுக்குள் தன்னை இசைபாக்கிக்கொள்கிறாரோ எனவும் எண்ணவைக்கிறது.
சரவணன் மிகவும் அமைதியாக தனது நாட்களை வீட்டிற்குள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார். இவர்நீண்ட நாட்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவை அதிகரித்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவது தெரியவில்லை.
மதுமிதா என்ற போட்டியாளர் முழுக்க முழுக்க நேர்மையானவராக தன்னைக் காட்டிக்கொள்ளப்பார்க்கிறார். அவ்வப்போ நன்றாக மற்ற போட்டியாளர்களில் வில்லங்கம் பிடித்தவர்களாக தெரிபவர்களை போட்டுவாங்குகிறார். இம்முறை வெளியேற்றப்படுவர்களின் தெரிவிற்குள் இந்த மதுமிதா மற்றும் சரவணன் போன்றவர்களின் பெயர்களும் உண்டு. அதில் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுவதாக கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவருகிறது. ஆயினும் கடைசிநேரத்தில் மாறும் வாய்ப்புக்களும் உண்டு.
சண்டி டான்ஸ் மாஸ்ரர் இந்த வீட்டிற்குள் எல்லோரையும் குஷியாக வைத்திருக்கும் ஒரு நபராக வலம் வந்துகொண்டிருக்கிறார். மிகவும் அவதானமாக வெளியேற்றப்படுவோர் தெரிவின்போது மற்றவர்களின் பார்வை தன்பக்கம் திரும்பி விடாதபடி தனது பாத்திரத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார். இவருடைய செயற்பாடுகள் காரணமாக இம்முறை வீடு கலகலப்பாக இருக்கிறது. இதனால் பிக்போஸ் முடிந்தளவு இவரை இறுதிவரை காப்பாற்றவே முயற்சிப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
அபிராமி, மீரா மிதுன், சாக்க்ஷி அகர்வால் மற்றும் செரின் ஆகியோர் தான் இந்த வீட்டிற்குள் மிகவும் மோசமான சண்டைக்காரிகளாக தங்களை காட்டிவருகிறார்கள். இவர்களாது சண்டைக்கும் போட்டிக்கும் அளவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அபிராமியின் செயற்பாடுகள் முதல் பருவத்தில் பங்குபற்றி ஆர்த்தியை நினைவு படுத்துகின்றது. இவர்களால்தான் இந்த முறை பிக்போஸ் வீடு களைகட்டியிருக்கிறது என்றால் மிகையாகாது. இவர்களுக்குள் மலேசியாவில் இருந்து வந்து பங்குபற்றிக்கொண்டு இருக்கும் முகேன் ராவ் இருபக்கம் அடிவாங்கும் மந்தளம் ஆகிப்போய் அடிபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வாரத்தில் இவர்களது சண்டையே ஒளிபரப்பும் நிறுவனத்தின் ரசிகர்களை அதிகரிக்கப்போகிறது என்கின்ற அளவுக்கு முகேன் மற்றும் மீரா இருவருக்கும் இடையில் இடம்பெற்ற அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு பற்றிய கலந்துரையாடல் சாக்க்ஷி யினால் வேறுவிதமாக மாற்றப்பட்டு ஏனைய பெண் போட்டியாளர் களுடானான சண்டைக்கான கருப்பொருளாக உருவாக்கி உரமிடப்பட்டு உலாவ விடப்பட்டிருக்கிறது.
இது ஒரு போட்டி இங்கு உண்மையை எதிர்பார்க்க முடியுமா?
பொதுவாக இது உண்மை நிகழ்வு என்று கூறப்படுகிறது. அதைபோலவே இங்கு ஒவ்வொருவருடைய உண்மையான மறுபக்கம் வெளியே காணக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையான மறுபக்கம் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமாகவும் உண்மைத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதில்தான் சந்கேம் எழுகிறது. இவ்வாறு நான்குறிப்பிடுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நீங்களே ஒரு தடவை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஒரு போட்டியில் பங்குபற்றுகின்றீர்கள் இறுதியாக வெற்றி பெறுபவருக்கு பெரும் தொகை பணப்பரிசு காத்திருக்கிறது. இந்த பரிசு கடைசியாக எஞ்சியிருப்போரில் வெற்றிபெறுபவருக்குத்தான் கிடைக்கும் என்ற நிலைமை இருக்கின்றது. இப்போது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? எவ்வாறாயினும் கடைசிவரை இருப்பதற்கு என்னென்ன யுக்திகளையெல்லாம் கையாளமுடியுமோ அவற்றையெல்லாம் கையாளத்தான் முயற்சிப்பீர்கள் அல்லவா. இவ்வாறான சூழலில் நிங்கள் உங்கள் சக போட்டியாளர் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவராக எவ்வளவு பிடித்தவராக இருந்தாலும் உங்கள் இலக்கு உங்கள் வெற்றியாகத்தானே இருக்கும். இந்த போட்டியாளர்களுக்குள் சிலர் இதற்கு விதிவிலக்கானவர்களாகவும் இருக்கலாம். அவ்வாறான ஒருவராக இரண்டாவது பருவத்தில் பங்குபற்றியிருந்த யாசிக்காவை நாங்கள் அடையாளப்படுத்தலாம். அவர் தான் வெற்றி பெறுவதில் உள்ள ஆர்வத்தைவிட தனது நண்பி ஐஸ்வர்யா வெற்றிபெறுவதில் கூடுதலான கவனத்தை செலுத்தினார். இவரைப்போல் எல்லோரும் இருக்க முடியாதுதானே. ஆகவே போட்டி என்று வருகின்றபோது இங்கு உண்மை முகங்களை காணமுடியாது. எல்லோரம் எப்படியும் நடித்துத்தான் ஆகவேண்டும் அதுதான் சாதாரண நடைமுறையாக இருக்கும்.
இன்னும் நிறையவே இந்த நிகழ்ச்சி பற்றி கூறிக்கொண்டே போகலாம். நாட்கள் போகப் போக நிலைமைகள் மாறுவதற்கேற்ப சுவாரஷ்யம் அதிகரிக்கும். அப்போது கூறுவதற்கு ஏதுவாக இப்போதைக்கு நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
இன்னும் நிறையவே இந்த நிகழ்ச்சி பற்றி கூறிக்கொண்டே போகலாம். நாட்கள் போகப் போக நிலைமைகள் மாறுவதற்கேற்ப சுவாரஷ்யம் அதிகரிக்கும். அப்போது கூறுவதற்கு ஏதுவாக இப்போதைக்கு நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
எழுத்தாக்கம்
யாழ் நரேஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக