இக்காலப் பகுதியில் தமிழ் பத்திரிகை ஒன்றின்
முக்கியத்துவம் இலங்கையில் செயல்பட்டுவந்த அமெரிக்க மிசனரிமாரின் எண்ணத்தில் தோன்றவே
அவர்கள் தமிழ் பத்திரிகை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த முயற்சியின்
பயனாக இலங்கையில் முதன் முதலில் வெளிவந்த தமிழ் பத்திரிகை எனும் அந்தஸ்தை “உதய தாரகை”
என்னும் பத்திரிகை பெற்றது. அது மட்டுமல்ல இதுவே உலகத்தின் இரண்டாவது தமிழ் பத்திரிகையும்
யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் செய்திப் பத்திரிகையும் என்ற அந்தஸ்தையும் பெற்றது.
தென் இந்தியாவில் ‘தமிழ் பத்திரிகை’ எனும் பெயரில் ஒரு பத்திரிகை ஏற்கனவே
சென்னை துண்டுப்பிரசுரக் கழகத்தினரால் வெளியிடப்பட்டமையே ‘உதயாதாரகை’
பத்திரிகை உலகின் இரண்டாவது தமிழ் பத்திரிகை என்ற இடத்தை பெற்றுக்கொள்வதற்கு காரணமாக
இருந்து என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘உதயதாரகை’ எனப்படும் இப்பத்திரிகை 1841ஆம் ஆண்டு
தை மாதம் 7ஆம் திகதி அமெரிக்க மிசன் எனப்படுகின்ற அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது.
இந்தப்பத்திரிகை ஆங்கிலம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரிகை
தற்போது வாரத்துக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது ஆயினும் ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு
ஒரு முறை வியாழக்கிழமை நாளில் வெளிவந்ததாக அறியக்கிடைக்கிறது. ‘உதய தாரகை’
பத்திரிகையானது ஆங்கிலத்தில் ‘மோர்ணிங் ஸ்டார்’ ('Morning Star') என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டதோடு
‘மோர்ணிங் ஸ்டார்’ என்ற பெயர் ஆங்கில ஆக்கங்கள் வெளிவந்த
பக்கங்களின் பத்திரிகைக்குரிய பெயராக வழங்கப்பட்டு வந்தது.
இந்தப் பத்திரிகையின் ஆரம்ப கால ஆசிரியர்களாக
இருந்தவர்கள் வட்டுக் கோட்டை செமினரியின் ‘ஹென்றி மார்டீன்’
என்ற ஆங்கில ஆசிரியரும் ‘செத்பெய்சன்’ என்ற தமிழ் ஆசிரியருமாவர். ‘செத்பெய்சன்
யாழ்பாணத்தவர். இந்தப்பத்திரிகை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சில பத்திரிகைகள்
ஆங்கிலேயர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும் இந்தப்பத்திரிகையே முதன் முதலாக இலங்கையர்களால்
ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களாகவிருந்த
கரோல் விசுவநாதபிள்ளை மற்றும் ஆணல்ட் சதாசிவம் பிள்ளை போன்றவர்களும் இதன் ஆசிரியர்களாக
இருந்துள்ளனர்.
‘உதய
தாரகை’ பத்திரிகையின் வரவானது மக்களினுடைய வாசிக்கும் பழக்கத்தை
தோற்றுவித்தமையிலும் ஊக்குவித்தமையிலும் பெரும் பங்காற்றியது. அதன் மூலமாக இப்பத்திரிகையின்
முதலாவது வெளியீட்டில் ஆசிரியர் குறிப்பிட்ட விடயங்கள் அடையப்பட்டன என்பதும் மிகப்
பொருத்தமானதே. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இதனுடை சந்தாதாரர்களின் எண்ணிக்கை
800ஐ எட்டியிருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை இந்த எண்ணிக்கை அந்த ஆரம்பகாலத்திலேயே
மிகப் பெரும் எண்ணிக்கையிலான வாசகர் இருந்திருப்பதை கட்டியம் கூறி நிற்கின்றது. வாசகர்களின்
அதிகரிப்பும் ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களின் வாசிக்கும் பழக்கத்தில் ஏற்பட்ட ஆர்வமும்
மிசனரிமார்களின் ஆக்கங்களுக்கு மட்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லாது ஏனையவர்களின்
ஆக்கங்களும் இப்பத்திரிகையில் வெளிவருவதற்கான ஒரு களத்தையும் ஏற்படுத்தி யிருந்தது.
ஆரம்பத்தில் தெல்லிப்பளையிலிருந்து வெளியி டப்பட்ட
இப்பத்திரிகை 1985 காலப்பகுதியில் யாழ் 1ஆம் குறுக்குத்தெரு வேம்படி மகளிர் பாடசாலைக்கு
எதிரிலும் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு முன்பாகவும் அதனது அமெரிக்க
மிசன் பதிப்பகத்திலிருந்து வெளி வந்தமை குறிப்பிடத் தக்கது. முன்னர் இந்த பத்திரிகை
அதனுடைய செய்திகளை வெளியிடு வதில் காட்டிய கரிசனை பத்திரிகையின் கவர்ச்சியில் காட்டியதாக
தெரியவில்லை ஆனால் அண்மைக் காலங்களில் இதன் வடிவமைப்பு கணணி வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டு
குறிப் பிடக்கூடிய அளவு கவர்சிகரமாகவும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. 1989 மற்றும்
1990களில் இலங்கையின் முதலாவதும் உலகின் இரண்டாவது மான இந்த பத்திரிகை பதிப்பகத்தில்
நானும் ஒரு ஊழியனாக கடமையாற்றியதையிட்டு என்குள் நான் பெருமிதம் கொள்கிறேன்.
- தமிழ் பாணன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக