செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட நாயகர்கள் 2

கணபதி ஐயர்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் “கணபதி ஐயர்” நீங்காத இடம் பிடித்த ஒரு கவிராயரும் நாடக எழுத்தாளரும் ஆவார். இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இவருடை பங்களிப்பு மிகப்பெரியதாகும். இவர் பற்றி 19ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகம் பேசப்பட்டுள்ளதாயினும் பின்னைய காலங்களில் அநேகமானவர்களுக்கு ஞாபகத்தில் வராத ஒரு மனிதராக இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. தற்கால எழுத்தாளர்களும் அறிஞர்களும் கணபதி ஐயர் பற்றி அதிகம் நினைவு படுத்தாமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமன்றி இவரைப்பற்றி ஒரு சிலர் மட்டுமே பதிவுகளை மேற்கொண்டுள்ளமையும் மற்றொரு காரணமாக இருக்கலாம். மற்றும் இவர் பற்றிய விரிவான வரலாறுகள் போதுமான தகவல்களோடு காணப்படாமையும் அந்தக்காலத்தில் வரலாற்றுத் தேவையின் பொருட்டான தகவல்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தகவல்கள் சரியாக சேகரித்து பாதுகாக்கப்படாமையும் இலங்கையில் இவரைப்பற்றிய அதிக தகவல்களுடனான படைப்புக்கள் வெளிவராமைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் இவரைப்பற்றி இலங்கையில் சில பிரபலமான
எழுத்தாளர்கள் தங்களது ஆக்கங்களில் குறிப்பிட்டுள்ளமை இன்னமும் அவர் வரலாற்றில் ஆழமாகத் தடம்பதித்துள்ளமைக்கு சான்றாக அமைகின்றது.

யாழ்பாணத்தின் பிரபலமிக்க வட்டுக்கோட்டை எனப்படும் பிரதேசத்தில் இந்தியா காஞ்சிபுரத்திலிருந்து வருகை தந்து குடியேறி இல்லறம் நடாத்தி வசித்துவந்த பாலகிரு~;ண ஐயர் என்பவருக்கு கணபதிஐயர் புத்திரராக வட்டுக்கோட்டையில் அவதரித்தார். இவரது பிறப்பு காலம் பற்றிய விபரங்கள் எங்கும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆயினும் 17ஆம் நூற்றாண்டில் 1709 – 1794 காலப்பகுதியில் வசித்த இலக்கிய மரபு வழி நாடகங்களினுடைய முன்னோடியாக அறியப்படுகிறார். இவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தன்னுடைய உறவினர்களையும் சுற்றத்தாரையும் பிரிந்து இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியா சென்றதாகவும் வடதேசத்தின் பல பிரதேசங்களுக்கும் யாத்திரை சென்று பின்னர் மீண்டும் நாடு திரும்பி தமது சுற்றத்தாருடனும் உறவினருடனும் சேர்ந்து வாழ்ந்தார் எனவும் அறியமுடிகிறது. 

ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவின் திருவையாற்று வைரவ சந்நிதானத்திலே ஒரு இரவு மிகவும் இளைத்து களைப்படைந்தவராக தூக்கமின்றி இருக்கும்கால் அவரிடத்தில் ஓர் புதிய மாற்றம் உண்டாகி சுயம்பாடும் சக்தி கிடைக்கப்பெற்றபோது உடனே அந்த வைரவரின் பேரில் பதிகம் ஒன்றை பாடியதாக சான்றுகள் குறிப்பிடுகின்றன. இவர் வடதேசத்தில் இருந்து ஊர் திரும்பிய பின்னர் தமது சுற்றத்தவருள் ஒருவராகிய சண்முக ஐயர் என்பவரால் தொடங்கப்பட்ட “சுந்தரி” என்ற நாடகம் கீர்தனைகளோடு முடிவுறுத்த சக்தியற்றவராக சண்முக ஐயர் இருந்தபோது அதன் பெயரை “வாளபிமன் நாடகம்” என்று மாற்றி எழுதி அதனை சிறப்புற மெருகூட்டி அனேகரின் நன்மதிப்பை பெறும்படியாக அவர்கள் வியக்கும்படி பாடி முடிவுறுத்தினார். இதுவே இவரது முதலாவது நாடக எழுத்தாக்கமாக கருதப்படுகிறது. இந்த நாடகங்கள் அநேகமாக கூத்து முறையிலான இசை நாடகங்களாக அமைந்திருப்பதும் வாளபிமன் என்ற நாடகமே இலங்கையில் உருவாக்கப்பட் முதல் தமிழ் கூத்து முறை நாடகமாக இருக்கிறது எனவும், கணபதி ஐயர் காலத்துக்கு முன்னர் கூத்து நூல் வடிவங்கள் எழுதப்பட்டதற்கான சான்றுகள் கிகை;கப்பெற்வில்லை எனவும் ஆதலால், கணபதி ஐயரே இலங்கையில் முதல் தமிழ் கூத்து இசை நாடக வடிவத்தை எழுதியவராக கருதமுடிகிறது எனவும் திரு. சு வித்தியானந்தன் அவர்கள் வாளபிமன் நாடக நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  

இவரால் அலங்காரரூப நாடகம், வயித்திலிங்கக் குறவஞ்சி, அதிரூபவதி நாடகம் மற்றும் மலையகந்தினி நாடகம் போன்ற படைப்புக்களும் வட்டுநகர் சங்கரத்தை பிட்டிவயற் பத்திரகாளி அம்மன் பேரிலே பதிகமும் ஊஞ்சற் பிரபந்தமும், பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பாவும் அதைவிட நூறு கவிகளையும் உருவாக்கி தமிழ் உலகிற்கு தந்துள்ளார். ஆசிரியம், கலி, வஞ்சி மற்றும் மருள் போன்றவை இவர் படைத்த கவிகளில் சிலவாகும்.  மேற்படி படைப்புக்களில் வயித்திலிங்கக் குறவஞ்சி வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் மேல் படைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. அதே போல காசிகாண்டக் கதையிலிருந்து எடுத்துப் பாடப்பட்டதே மலையகந்தினி நாடகம் எனவும் விக்கிரமாதித்தராசனாரின் வனவாசத்தை அடுத்ததாகக்கொண்டு அதிரூபவதி நாடகம் படைக்கப்பட்டது எனவும் வாளபிமன் நாடகம் பாரத சரித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் இது அர்சுனனின் மகனாகிய அபிமன்னன் வாட்போரினால் பலராமனின் மகள் சுந்தரியை (சசிரேகை) அடைந்த வரலாற்றை குறிப்பிடுவதனாலேயே இந்த நாடகம் மேற்படி பெயரைப் பெற்றது எனவும் இவர் பற்றி வெளிவந்த பதிவுகளும் சான்றுகளும் குறிப்பிடுகின்றன. அலங்காரரூப நாடகம் நவாலியைச் சேர்ந்த மற்றொரு நபரால் ஆரம்பிக்கப் பட்டதாகவும் பின்பு கணபதி ஐயரால் மெருகேற்றப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டதாகவும் அறியகூடியதாக இருக்கின்றது.

வட்டு நகர் சங்கரத்தை பத்திரகாளி அம்மன் பேரிலே உருவாக்கப்பட்ட ஊஞ்சற் பதிகம் படைப்பு சங்கரத்தை இந்து வாலிபர் சங்கத்தால் 1939ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவீட இந்து மாணவர் சங்கத்தின் வெளியீடாக பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களின் பேரூக்கத்தினால் கா. சிவத்தம்பி அவர்களால் 1963ஆம் ஆண்டு மார்க்கண்டன் நாடகம் என்ற படைப்புடன் சேர்த்து வாளபிமன் நாடகம் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் இந்த நாடகத்துக்குரிய மூலப்பிரதியானது மருதங்குளத்தைச் சேர்ந்த இ. சே. திகரம்பிள்ளையவர்களால் அவரது தந்தையாருக்குரியது எனவும் தந்தை யாரிடம் பெற்றார் எனத் தெரியாது எனவும் கூறி ஏட்டுப்பிரதிகளாக வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்படுகிற அதே வேளை 1843 என ஆண்டு குறிப்பிடப்பட்ட விக்டோரியா மகாராணியாரின் ஆட்சிக்காலத்து அரைக்காசு அந்த ஏட்டுடன் கட்டப்பட்டிருந்ததாகவும் திரு சு. வித்தியானந்தன் அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாடகம் சிலாபம் முன்னேச்சரம் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் வருடாந்தம் ஆடப்பட்டதாகவும் இது ஒரு கூத்து நாடகம் எனவும் அத்தோடு இது வடமொழி மரபில் வரும் தமிழ் கூத்து எனவும் திரு. சிவத்தம்பி அவர்கள் இவ்வெளியீட்டில் குறிப்பிட்டுகின்றார்.

அலங்காரரூபன் நாடகமானது தென்மோடி ரகத்திலான கூத்தாக குறிப்பிடப்படுவதோடு தி. சு. வித்தியானந்தன் அவர்களால் இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக்குழு வெளியீடாக 1962ஆம் ஆண்டு அச்சுப்பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நாடகம் மிக சுவைபொருந்திய நாடகமாகவும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் மிகவும் கொண்டாடப்படும் தென்மோடிக் கூத்துகளில் இது சிறந்ததொன்றாகவும் இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. கிடைக்கப் பெறும் சான்றுகள் சரியானவையாக இருப்பின் அலங்கார ரூபன் நாடகமே இப்பொழுது கிடைத்திருக்கக்கூடிய கூத்து நாடகங்களில் மிகவும் பழமை வாய்ந்த நாடகமாக கருதலாம். இந்த நாடகத்தினுடைய முதன்மை ஏட்டுப்பிரதி காரைதீவைச் சேர்ந்த திரு வைரமுத்து கைலாயபிள்ளை கப்புகனார் அவர்களாலேயே பதிப்பாசிரியருக்கு வழங்கப்பட்டதாக அந்நூலில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இவருடைய இறப்புப்பற்றி இருவேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவரைப்பற்றிய வரலாற்றுக் கட்டுரையைத் தந்த சதாசிவம்பிள்ளை அவர்கள் இவர் 1786ஆம் ஆண்டுக்கு முன்பு இறைபதமெய்தியதாகக் குறிப்பிடும் அதேவேளை தமிழ் புளுரோக் ஆசிரியர் சைமன் காசிச்செட்டி அவர்கள் இவர் 1803ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்ததாக தெளிவாக குறிப்பிட்டுக் கூறுகிறார். இது தவிர இவரது மனைவி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகள் பற்றிய குறிப்புகள் முயன்று தேடியும் கிடைக்கவில்லை ஆதலால் இத்துடன் இவரைப்பற்றிய பதிவு முற்றுப்பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக