ஞாயிறு, 21 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு


இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை

சத்திய வேத பாதுகாவலன் (“The Catholic Guardian”) என்பது இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க சமயத்தின் பரப்புரைக்கான பத்திரிகையாகும். இது 1876ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை ஆகும். ஆரம்பத்தில் சத்திய வேத பாதுகாவலன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுவந்த இந்தப்பத்திரிகை பின்னர் பாதுகாவலன் என்னும் பெயரில் பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது. இந்த பத்திரிகையானது ஆரம்பத்தில் இரண்டு 
வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிகையாவே இருந்தது ஆயினும் பின்னர் வாரம் ஒரு முறை வெளிவரும் வாரப்பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பத்திரிகை ஆரம்பிக்க முன்னர் உதய தாரகை என்று ஒரு பத்திரிகை அமெரிக்க மிசனால் வெளியிடப்படத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது அதுவே இலங்கையின் முதலாவது தமிழ்ப்பத்திரிகை என குறிப்பிடப்படுகிறது. பாதுகாவலன்” பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக பிலிப் முருகப்பா என்பவர் கடமையாற்றியிருந்தார். இது கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறைமாவட்டத்திலிருந்தே வெளிவருகின்றமை கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புனித சூசையப்பர் அச்சகத்திலேயே இப்பத்திரிகை அச்சிட்டு வெளியிடப்படுகின்றமையும் 1981 ஆம் ஆண்டுகளில் அப்போது இதன் இயக்குனராக இருந்த அருட் தந்தை அன்டன் மத்தாயஸ் அடிகளாரின் முயற்சியினால் இந்த அச்சகம் நவீன இயந்திரங்கள் பொருத்தி உயர்நிலைப்படுத்தப்பட்டதோடு பாதுகாவலன் பத்திரிகையும் மேலும் புதுப்பொலிவுடன் வெளிவர ஆரம்பித்தது. இப்பத்திரிகையானது தற்போதும் புதுப் பொலிவுடன் பல வர்ணப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பாதுகாவலன் பத்திரிகையானது தற்போது மின்நூல் வடிவிலான கணணிமயப்படுத்தப்பட்ட பத்திரிகையாகவும் தனக்கென ஒரு தனியான இணையத்தளத்தைக்கொண்டு தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. இணையத் தளத்தில் பத்திரிகையை பார்வையிட கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக