இலங்கை அரசாங்க சபையின் முதல் தமிழ் சபாநாயகர்
சேர். வை. துரைசுவாமி |
இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை எனும் ஊரின் மைந்தன். ஆனி மாதம் 8ஆம் திகதி 1874ஆம் ஆண்டு தமிழ் சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலி யார் குடியில் அவதரித்தார். தந்தை ஐயம்பிள்ளை வைத்திலிங்கம். இவருக்கு சகோதரர்கள் ஐந்துபேர் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்னம், இரத்தினகோபால் மற்றும் ராஜகோபால் ஆகியோரே அவர்கள்.
இவர் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளில் கல்கத்தா சென்று பட்டம் பெற்றார் பின்னர் சட்டம் பயின்று 1902ஆம் ஆண்டு சட்ட வல்லுனர் ஆனார். 1905ஆம் ஆண்டு முதலியார் சிற்றம்பலம் சதாசிவம் என்பவரின் மகள் இராசம்மா என்பவரை திருமணம் செய்து இல்லறத்துள் புகுந்தார். இவர்களுக்கு எட்டு பிள்ளைகள் மகேஸ்வரி, நடேஸ்வரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேந்திரா மற்றும் தெய்வேந்திரா ஆகியோரே அந்த எண்மருமாவர்.
இவர் இலங்கை மக்களால் விரும்பப்பட்ட நற்றமிழராகவும் தேசாபிமானியாகவும் அதேவேளை வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள ஒரு தலைவராகவும் கருதப்படுகிறார். சைவத்துக்கும் தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றியவர்களில் இவர் முக்கியமான ஒருவராகக் கருதப்படுகிறார். சைவவிருத்திச் சங்கத்திலும் சைவ பரிபாலன சபையிலும் தலைவராக செயற்பட்டுள்ளார். அத்தோடு யாழ்பாணத்தின் யோகர் சுவாமிகழுடனும் இவருக்கு மிகுந்த நெருக்கம் இருந்ததாக ஆதரங்களில் அறியக்கிடைக்கிறது.
இவர் ஒரு சிறந்த வழக்கறிஞராக அக்காலகட்டத்தில் திகழ்ந்தார் என சான்றுகள் குறிப்பிடுகின்றன யாழ் மாவட்ட நீதி மன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியதோடு யாழ்ப்பாண வழக்கறிஞர்கள் சபையின் தலைவராகவும் நீண்டகாலம் பதவி வகித்திருந்தார். மேலும் சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தொண்டனாகவும் மதிக்கப்பட்டார்.
சேர். வை. துரைசாமி அவர்கள் சில பாடசாலைகள் உருவாகுவதற்கு காரணகர்த்தாவாகவும் விளங்கியுள்ளார். வேலணை மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரும் இவரே இதனால் இந்த பாடசாலைக்கு வேலணை சேர். வை. துரைசுவாமி ம.ம.வி என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு இவர் நினைவாக இந்த பாடசாலையில் ஒர் மண்டபம் அமைக்கப்பெற்று அதற்கு இவரது பெயரும் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு இவரது நினைவாக சேர் வை. துரைசாமி ஞாபகார்த்த “ஞானவியன்மணி” விருது எனும் பெயரில் விருது வழங்கும் வழக்கமும் உண்டு.
ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936ஆம் ஆண்டு இடம்பெற்றபோது இவர் அரசாங்க சபை அங்கத்தவராக இருந்தார் இதனால் இலங்கைப் பேச்சாளர் சபைத் தலைவராக இவர் தெரிவுசெய்யப்பட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார். அங்கே அந்த விழாவிலே இவருக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் (சேர்) பட்டம் வழங்கி கௌரவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக