வைகறைப் பொழுதில்
ஜன்னல் இடைவெளியில்
ஊடறுத்து என் முகம் வருடும்
இளஞ்சூட்டு ஒளிக்கீற்றுகள்
இதமாயென் காதருகில்
ஓலைக்கீற்றுக்களின்
ஓசையொடு இசைமீட்டும்
இனிய தென்றல்
அந்த தென்றலோடு
மெல்ல மிதந்து வந்து
சுவாசத்தைப் புதுப்பிக்கும்
முன் முற்றத்து
மல்லிகையின் மலர்வாசம்
என் விசிலுக்கு
எசப்பாட்டு போடும்
வேப்பம் மரத்தடி
அணில் குஞ்சுகள்
இவர்களுடன் சேர்ந்து
தத்தித் தத்தி வந்து
பாட்டுக்கு பாட்டெடுக்கும்
சிட்டுக்களும் புனில் குஞ்சுகளும்
அழைப்புக்கு செவிசாய்த்து
ஹலோ ஹாய் சொல்லும்
தென்னம் பிள்ளையில்
கொட்டமைத்து
குஞ்சுடன் குடியிருக்கும்
செவ்வளையக் கிளிப்பிள்ளை
இருந்திருந்து கூ.. கூ...
வெனக் கானமழைபொழியும்
தொலை தூரத்தில்
துணையுடன் வாழும்
குயில் அம்மா
சுற்றிச் சுற்றி என்
காலை வட்டமிட்டு
நன்றியுடன் வாலாட்டும்
என்செல்ல நாய்குட்டி
இவைகள் தான் இப்போது
என் இணை பிரியா
உறவுகள் இந்த உறவுகள்
ஒருபோதும் மனம்
மாறுவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக