ஆழமான
நீர் தடாகத்துக்கடியிலே உறுதியாக வேர் பதித்து சலனமின்றி
நீரின் அசைவுகளோடு இலைகளால் நீச்சலடித்து மிதந்து பூஜை பீடத்திற்கு வைப்பதற்கென்றே
பூத்த அந்த மலரைபோல உலகு
பார்க்க மலர்ந்து தேவையுள்ள அனைவருமே தேடி ரசிக்கும்படியாக வாழ்ந்து
தன் தாய்மொழிக்கு தரவேண்டிய கௌரவத்தை பல்வகைப்பட்ட வடிவங்களில் தன் எழுத்துக்களால் இன்றுவரை
தூரத்து தேசத்திலிருந்து தந்துகொண்டிருக்கும் ஓர் சிறந்த எழுத்தாளர்
பற்றியதே இந்த கட்டுரை.
யார் அந்த தூரத்து எழுத்தாளர்? அவர்தான் பல்வேறு நாடுகளிலும் தற்போது பலராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும், கௌரவிக்கப்படும் மற்றும் தேடப்படும் பல்வேறுபட்ட பல்சுவை எழுத்துக் கலைப் படைப்புக்களுக்கு சொந்தக்கார னாகிய திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் அவர்கள். 1980களில் இவரது வெளியீடாகிய “அக்கா” சிறுகதைத் தொகுப்பு படைப்பில் வெளியிட்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தததுண்டு. பின்னர் இவரது வெளியீடுகள் பற்றி அறியக்கிடைக்காததால் இவர் படைப்புகள் பற்றிய நினைவு மெல்ல மெல்ல மறந்து போயிற்று. அண்மையில் தமிழகத்தின் பிரபல மேடைப் பேச்சாளரும் பட்டிமன்ற விற்பன்னருமான மிகப் பிரபலமான திருமதி பாரதி பாஸ்கரன் அவர்களுடைய கண்ணதாசன் நிகழ்வுகளை மீட்டும் பாட்டுமன்றம் சார் பேச்சு நிகழ்வு ஒளிப்படம் ஒன்றை யூரியூப் (YouTube) இணையதள பகுதியில் பார்க்கக் கிடைத்தது. அதிலே தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய 5 எழுத்தாளர்களில் ஒருவராக திரு. அ. முத்துலிங்கம் என்ற கனடாவில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் பார்க்கப்படுகிறார் என்ற கருத்தை பாரதி பாஸ்கர் அவர்கள் முன்வைத்திருந்தார். இந்த தகவலே என்னை எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றிய நினைவுக்குள் மீண்டும் கொண்டுசென்றதோடு அவர் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் தேடவும் தூண்டியதோடு நின்றுவிடாமல் அவர்பற்றிய இந்த கட்டுரையையும் எழுதத் தூண்டியது என்று சொன்னாhல் அது மிகையாகாது. இவர் பற்றிய விடயங்கள் பலவற்றையும் இந்த கட்டுரையில் ஒரே பார்வையில் தரவேண்டும் என்ற ஆர்வத்தால் சற்று விரிவாகவே இந்த கட்டுரையை எழுத முயற்சித்திருக்கிறேன்.
