திங்கள், 20 ஜூன், 2022

பணி ஓய்வு

 பணி ஓய்வு




இத்தனை காலம் 

கரங்களுக்கு ஆதாரமளித்த மேசை

என்னை சுமந்த நாற்காலி

என் கோவைகள் சுமந்த றாக்கை

பதிவுகளை தன்னகத்து வைத்திருந்த கணணி

சேர்ந்து பயணித்த பணியாளர்

கட்டளைகள் பிறப்பித்த

மேல் நிலை அதிகாரி

நாள் தோறும் தலை நிமிர்ந்து

பார்க்கச் செய்த கட்டடம்

இத்தனையும் பிரிந்து

ஓய்வுக்கொடை காசோலை

கைகளில் சுமந்து

பணியில் துணையிருந்த

பாக்கர் பேனா என் நெஞ்சோடு தொடர

எனக்கு மட்டும் வேலையுண்டு

மனதிற்குள் கூறிக்கொண்டு

நாள்தோறும் என்னை

சுமந்த பேரூந்துக்கு இனி என்னை

சுமக்கும் கஸ்ரம் உனக்கு இல்லை

என பிரியாவிடை கூறி

அன்றைய இரவு தூக்மின்றி

இத்தனை நினைவுகளோடு

அதிகாலை எழுந்து

கனவுகளை கவிதைகளாகவும்

கற்பனைகளை கதைகளைகவும்

எழுதவேண்டும் என்ற கனவோடு

அதே பாக்கர் பேனாவை

கையிலெடுத்து முதல்வரி தொடங்கையில்

உள்ளிருந்து ஒரு குரல்

என்னங்க எழும்பி சந்தைக்கு போய்ட்டு வாங்க

மற்றொரு குரல்

அப்பா அப்பிடியே 

பிள்ளைகளை ஸ்கூல்ல விட்டுவாங்க

தாத்தா என்ட சைக்கிள் சேவிஸ் போட்டிடுங்க

மாமா இந்த பில்களையெல்லாம்

இன்டைக்கே கட்டிட்டு வாங்க

எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..

எனது பேச்சுக்கு எதிர்க்குரல் உள்ளிருந்து

இனியென்ன வேலை

பென்சன் போயாச்சு இனி என்ன வேலை

அப்போ எனக்கு இனி…. 

கேள்விகளோடு சந்தைநோக்கி 

புதிய பணியில் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக