அரங்க கலையின் ஓர் மைல்கல் ‘மாத்தளையின் ஜீவநதி’
இலங்கையின் அரங்க கலையின் முன்னோடிகள் பலரைப்பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி நாடகத்துறை போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதேவேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப்பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம் சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.